Friday, August 30, 2013


தமிழ் நாட்டுக்கு வராத விருந்தாளி வந்த அதிசயம்



டோமசல் நாரை
Domoiselle Crane
(Anthropoides virgo)


                இந்த வகை நாரைகள் இந்தியாவுக்குள் கர்நாடகா, ஆந்திரா பகுதிவரை வரும். தமிழ் நாட்டுக்குள் வந்ததாகத் தகவல் பதிவாகவில்லை. இவற்றின் வாழிடம் தெற்கு ஐரோப்பா, வட ஆப்பிரிக்கா, வட, மத்திய ஆசியா மற்றும் மங்கோலியா. அங்கிருந்துஆயிரக்கணக்கான மைல்கள் குழுவாகப்பறந்து, குளிர்கால வருகையாளராக நம்நாட்டில் சில மாதங்கள் இருக்கும். பிறகு திரும்பு பயணம். இவை பறப்பது கொள்ளை அழகு. கழுத்தும் காலும் நீண்டு குழுவாக V வடிவில் பறந்து போகும். இப்படிப்பறக்கும் போதுட்ரம்பட் உரத்து வாசிப்பது போல ஒலி கொடுக்கும். இது தொலை தூரத்துக்கு கேட்கும். குரல் கொடுப்பது குழு ஒன்றாக இருக்கத்தான். இந்த V வடிவப்பறத்தலில் அருகருகே பறந்து வரும் பறவைக்கு 5 கிமி வேக சக்தியை சேமிக்க முடிகிறது. ஏனெனில் முன்னே பறக்கும் பறவை உந்து சக்தியால் பின்னே வரும் பறவைக்கு லகுவாகி விடுகிறது.
            நான் முதன் முதலில் இதைப்பார்த்தது பல வருஷங்களுக்கு முன்பு விஜயநாராயணம் ஏரி,திருநெல்வேலியில் பார்த்தேன். இது தமிழ்நாட்டில் அதுவும் தென்கோடிக்கு வந்தது அதிசயம். கர்நாடகா, ஆந்திராவை தாண்டாதது, எப்படி வந்தது? அதுவும் ஒரே ஒரு பறவை. இவை குழுவாகத்தான் இருக்கும். சிந்து மற்றும் கட்ச்சில் koonj எனச்சொல்வர். அதற்கு அழகிய மங்கை என அர்த்தம். பறவை உயரமாகவும், உடல் வாகாகவும் இருப்பதால் இப்படி அழைக்கின்றனர். கன்னடத்தில் கர்கோன்ச்சா, தெலுங்கில் வட கொரக்கா எனப்பெயர் இருக்கும் போது தமிழில் இதற்குப்பெயர் இல்லாமல் போனதற்குக் காரணம் இந்தப்பறவைகளை தமிழக மக்கள் பார்க்கவில்லை.
            கைபர் கணவாய் வழியாக சுலபமாக பறந்து வரலாம். ஆனால் வலசைப்பறவைகளிலேயே கடின வழிப்பாதையைத் இவை தேர்ந்தெடுத்துள்ளன. இமயமலை தாண்டி வருகின்றன. 16000 அடி முதல் 26000 அடி உயரம் வரை உயரப்பறக்கின்றன. வரும் வழியில் பசியில் செத்து விழும். களைப்பால் மயங்கிச்சரியும். கழுகு இனம் வேட்டையாடும். மனிதர்கள்? இடையில் ராஜஸ்தான்,கிச்சான் என்ற கிராமத்தில் தங்கி கிராமவாசி ஒருவரின் விருந்தோம்பலை ரசித்து உண்டு, ஓய்வெடுத்து, மீண்டும் பயணத்தைத் தொடர்கின்றன. தமிழ் நாட்டில் இப்பறவை தட்டுப்பட்டதையும் அதனுடைய புகைப்படத்தையும் BNHS, Mumbai, Mistnet –க்கு அனுப்ப, அந்த இதழில்இது பற்றிய நான் எழுதிய கட்டுரைபிரசுரமானது.

  Thanks to photographers of blogged pictures in google. Special thanks to my friend Radhakrishnan who accompanied me and taken Still of Domoiselle Crane at Koonthakulam



Mistnet Journal of BNHS

           
     ஆயிரக்கணக்கான பறவைகள் பறக்க ஆரம்பிக்கும் போது தூரத்தில் கேட்டும் கடல் அலை போல ஒலி கேட்குமாம். இதை ரசித்து அனுபவித்தவர் எழுதி வைத்ததையாவது மீண்டும் ஒரு முறை ரசிக்கலாம். 

The din of a great concourse of koonj taking off the ground, with their kurr, kurr calls uttered in varying keys, has been aptly likened to the distant roaring of the sea.
                                                                                                            Dr. Salim Ali

                                                                                                            The Book of Indian Birds

2 comments: