Monday, February 4, 2013


கொம்பன் ஆந்தையுடன் அணில்

நானும் நண்பர் விஜயகுமாரும் அந்தி வானம் மேற்கில் சிவந்த போது ஒரு பெரிய கல்குழி ஓரம் அமர்ந்து பறவை நோக்கல் செய்து கொண்டிருந்தோம். Bird race என்பது தவறு. மோட்டர் வாகனத்தில் துரத்துவதல்ல பறவை நோக்கல். Dr சலிம் அலி நார்ட்டன் மோட்டர் சைக்கிளை தட,தடவென ஓட்டிச்சென்று ஓரத்தில் நிறுத்திவிட்டு, ஓரிடத்தில் அமர்ந்து தான் பறவை நோக்கல் செய்வார். பறவைகள் பெரிதும் வருகை புரியும் இடத்தில் அமைதியாக இருவர் அமர்ந்து பறவைகளுக்கு இடையூறு விளைவிக்காமல் தொலைநோக்கியில் இனம் கண்டு ரசிப்பது. 20 பேர் குழு அமைதிக்கு பங்கம் விளைவித்துச்செல்லும் Picnic அல்ல. ஊர்வேலன்காடு சோளக்காடும், முழங்கால் உயரம் வளர்ந்த பொன்னிற புற்களும் கொண்ட புன்செய் காடு. காற்று மட்டும் பேசும். நீலவானம், ஒத்தையடிப்பாதை, மாட்டுவண்டித்தடம், வானத்தை தலை துவட்டும் தென்னை மரங்கள் இதையெல்லாம் ரசிக்கும் போது மக்கள் Mall-ளில் சுற்றும்போது, மனமகிழ்வை இயற்கை மாதிரி அள்ளித்தருமா என்பது சந்தேகமே. நிழற் படம் விஜயகுமார். ஆந்தையை பயமில்லாமல் ஒரு அணில் சுற்றிச்சுற்றித்திரிந்தது எங்களுக்கு வேடிக்கையாக இருந்தது. இதுவே ஒரு இரவு நேரமாக இருந்தால் அணிலை ஆந்தையின் வலிமையான மூக்கு குத்திக்கிழித்திருக்கும். அப்போது எங்களுக்கு ஒரு குறல் ஞாபகத்துக்கு வந்தது. அது;-

காலம் அறிதல்.
பகல் வெல்லுங் கூகையைக் காக்கை யிகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது.-481



Sunday, February 3, 2013

Butterfly

 கூட்டிலிருந்து வெளிவரும் வண்ணத்துப்பூச்சி.
Common Grass Yellow
(Eurema hecabe)

            

இது என் வீட்டு சுவற்றில் பிறந்தது. ஒரு பருவத்தில் என் வீட்டு சுவற்றைச்சுற்றிலும் கூட்டுப்பருவ ப்யூப்பாக்கள் ஒட்டிக்கொண்டிருந்தன.மனைவியிடமும், வேலைக்காரியிடமூம் அவைகளை துடைப்பத்தில் நீக்கி சுத்தம் செய்து விடாதீர்கள். வண்ணத்துப்பூச்சிகள் சிறகு விரிக்கட்டும் பிறகு சுத்தம் செய்யலாம் என்றேன். என் வீட்டில் இருக்கும் சரக்கொன்றை (Cassia fistula) மரத்தின் இலைகளில் பெண் வண்ணத்துப்பூச்சி முட்டையிட்டு சூரிய வெப்பத்தில் பொரியும். பச்சைப்புழுக்களாக நெளிந்து சரக்கொன்றை மரத்தின் இலைகளை நன்கு உண்டு கொழுத்து கூட்டுப்பழுபருவம் போய் தியானத்தில் இருந்துவிடும். பிறகு உலகில் சிறகடித்துத்திரிய வெளிவரும் தருணமிது. இது பறந்து திரியும் போது மனிதர் மனத்தைக் கவர்ந்திழுத்து மனதை லேசாக்கிறது. நீ சிறுவயதில் வண்ணத்துப்பூச்சி பின்னே ஓடியதைப்போல இப்போதும் ஓடினால் நீ வாழ்க்கையை முழுமையாக ரசிக்கிறாய், என அர்த்தம். இல்லையெனில் எந்திர வாழ்வில் நுழைந்து விட்டாய் என அர்த்தம். இதற்கு Common Grass Yellow எனப்பெயர். நிழலில் ஆனந்தமாகப்பறக்கும். மரங்கள் இதற்குப்பிடிக்கும். மலர்கள், ஈரமண் மேலும் உறவு. இவை கூட்டமாக வலசை போவதைப்பார்த்தால் ஓ! அதுவே சுவர்க்கம் மண்ணில் இறங்கிய தருணம்.

Friday, February 1, 2013


தோட்டிப்பறவை

                         Real Scavenger

                                                         

  நல்ல காகங்கள் நம் சேரி உட்பட கிராமம், நகர் என பிரித்துப்பார்க்காமல் எந்த இடத்தையும் தன்னால் முடிந்த அளவுக்கு சுத்தம் செய்கிறது. செத்த எலியிலிருந்து நாம் சிந்திய சளி வரை பாகுபாடு இல்லாமல் உண்டு சுத்தம் செய்கிறது. உலகத்தில் காகயினங்கள் இல்லை என்றால் அசுத்தம் நிலவும், இல்லையா? இதற்கு, மிக தந்திரம், அறிவு, ஒற்றுமை, எச்சரிக்கை, சூழலுக்கு ஏற்ப தகவமைதல், உணவை தேர்ந்தெடுக்காமை, தைரியம், முயற்சி என பல குணங்கள் மற்ற பறவைகளைக்காட்டிலும் அதிகம். மனிதனை ஒட்டியே தன் வாழ்வை அமைத்துக்கொண்டது. நாமும் காகம் முதாதையர் என நினைத்து, ஆடி, புரட்டாசி, தை அமாவாசைகளில் காகா.. என காகம் போல கரைந்து படையல் சோற்றை உண்ணக்கூப்பிடுகிறோம். வயதானதும் காகம் நம் கண்ணுக்குத்தெரியாமல் ஊருக்கருகாமைக்காட்டுக்குச்சென்று இறந்து விடுகிறது. அதை குள்ளநரி, நாய், காட்டுப்பூனை, கழுகு பொசுக்கி உண்டுவிடுகிறது. காகங்கள் கூட எண்ணிக்கை குறைவதைப் பார்க்க முடிகிறது. சாலையோர மரங்கள் அவைகளுக்கு உறைவிடம், கூடு அமைக்க இடம் தந்தது. சாலைஅகல, மனித மனம் குறுக விபரிதத்தை நோக்கிப்போய்க்கொண்டிருக்கிறோம்.

Thursday, January 31, 2013




இயற்கை அறிவு


இன்றைய மாணவர் எதெதோ படிக்கிறார்கள். ஆனால் இயற்கையைப்படிப்பதோ புரிந்து கொள்வதோ இல்லை. இதனால் இயற்கையைப்பேணிப்பாதுகாப்பதில்லை. அதை பெருமளவில் சிதைக்கிறான். இயற்கையைக்கண்டு வியக்கவேண்டும். நீர், நிலம், ஆகாயம், நெருப்பு,காற்று என்ற பஞ்சபூதங்களில் இறைவன் இருக்கிறார். இவைகளை மாசுபடுத்தினால் உயிரினத்தில், (நாம் உட்பட) விஷம் ஏறும். பருவ மழைகள் அற்றுப்போனதற்குக்காரணம் மனிதன் தான். விலங்குள் அல்ல. நீரின்றி உலகம் அமையாது. குழாயில் நீர் தருவிக்கப்போய் குளம், ஆறு, கடல் ஆகியவற்றை மனிதன் மறந்தே விட்டான். அதில் சாக்கடை ஆறுகளை விடுகிறான். பள்ளி, கல்லூரிகளில்,  பொறியாளராக்கி பணம் சம்பாதிப்பது மட்டுமே நிகழ்கிறது. அதனால் மலைக்கு வெடிவைத்து இயற்கைச்செல்வங்களை சூறையாடுகிறான். அளவுக்கு அதிகமாக வாகனங்களை உற்பத்தி செய்து கார்பன் மானாக்சைடை ஏற்றி காற்றை நஞ்சாக்குகிறான். இயற்கை சீரழிந்தால் மனிதனும் அழிவான். நான் தரும் இயற்கை காட்சியை ரசிப்பதோடு நில்லாமல் அருகாமை இயற்கைக்கு சேவை செய்யுங்கள்.  

Monday, January 28, 2013


கண்ணுக்குள் வானவில்

                எவ்வளவோ பேருடன், எட்டு வயது குழந்தையும் கூட நிழற்படம் எடுக்கும் காலமிது. இப்போது காமராவே எல்லாம் பார்த்துக்கொள்கிறது. ஷட்டர் வேகம், அப்ரச்சர் ஒளி அளவை, ஜும், தூரம் என ஆட்டோ மோட் பார்த்துக்கொள்கிறது. குழந்தை க்ளிக் செய்தால் போதும். துள்ளியமான படங்கள் வந்து கணணியில் விழும். அதை போட்டோ ஷாப்பில் சலவை செய்து பேஸ் புக்கில் இட்டு பெயர் வாங்கலாம். பறவை கண்காணிப்பு காமராவோடு செய்யக்கூடாது. பைனாகுலரில் பறவை பார்த்து அடையாளம் கண்டு பரவசப்படவேண்டும். போட்டோகிராபியும், பேர்ட் வாட்ச்சும் சேர்ந்து செய்வது இரு குதிரையில் சவாரி செய்வது போல் என, என் குருநாதர் டாக்டர் ரத்னம் சொல்வார். சென்ற செல்வாய் அன்று வேலை நாளில் கூட பதினொரு நபர் பதினொரு காமராவுடன் கண்ணம்பாளையம் குளத்தில் சுற்றித்திரிந்து நத்தை குத்தி நாரை கூட்டத்தை தொந்தரவுக்குள்ளாக்கியது வேதனையை அளிக்கிறது. பேர்ட் வாட்ச் பிக்னிக்கோ,போட்டோகிராபி  போட்டியோ அல்ல. Please, d’ont spoil Bird watch charm. பறவையைத்துரத்தி நிழற்படம் எடுக்காதீர். நான் வெளியிட்டுள்ள படம் போல எடுத்து பார்வைக்கு சுவை ஊட்டலாமே! பாராட்ட மனசு இருந்தால் எனது காமராவைப்பாராட்டுவீராக!


நத்தை  Pallikkarani Eco-system
Snail

மிருதுவான உடலைக் கொண்ட உயிரினம் ஒரு அதிசயம். முதுகில் ஓட்டைச்சுமந்து கொண்டு பாவமாகவும், மெதுவாகவும் ஊர்ந்து போய்க்கொண்டிருக்கும். ஆபத்து வந்தால் ஓட்டுக்குள் போய் விடும்.நத்தைகளுக்கு ஈரப்பதமான நிலமும், சூழலும் வேண்டும்.இல்லையானால் ஓட்டுக்குள் நீண்ட உறக்கத்துக்குப் போய் விடும்.ஓடு எதிரிகளிடமிருந்து காப்பாற்றுவதற்கும், வெய்யிலிலிருந்து தப்பிப்பதற்கும், சூழலோடு ஒன்றிப்போவதற்கும் துணை செய்கிறது. ஓட்டில் கால்சியம் உள்ளது. அது வலது பக்கம் சுழற்றப்பட்டிருக்கும்.  நத்தை பெண்ணைத்தேட வேண்டியதில்லை. பிறப்பு உறுப்புகள் இரண்டும் அதில் உள்ளது. ஆயிரக்கணக்கான வகை நத்தைகள் உலகில் உண்டு. கடல் நத்தைகள் கில்ஸ் (gills) கொண்டு சுவாசிக்கும். நிலத்தில் உள்ளவை நுரையீரல் கொண்டு சுவாசிக்கும். நத்தைக்கு கண், வாய், நாக்கு,பாதம் உண்டு. நிழற்படத்தில் காணப்படும் நத்தை சென்னை பள்ளிக்கரணையில் ஊர்ந்துகொண்டிருந்தது. இத்தகைய அருமையான சதுப்பு நிலமும், நீர் நிலையையும் சார்ந்த இடத்தைச்சுற்றி ஐடி கம்பெனிகள் தங்கள் சாம்ராஜ்ஜியத்தை நிறுவி தங்களுக்கு Eco system-த்தைப்பற்றி ஒன்றும் தெரியாது என பறைசாட்டிக்கொண்டனரா அல்லது டாலர் கண்களை மறைத்து விட்டதா எனத்தெரியவில்லை. நான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னம் பள்ளிக்கரணைச்சுற்றியுள்ள ஐடி கம்பெனிகளுக்கு இ-மெயில் கொடுத்து மீந்துள்ள சதுப்புநீர்நிலையையாவது பேணிப்பாதுகாத்து சுத்தப் படுத்தி நடைபாதை அமையுங்கள் என்றேன். பதிலில்லை. அவர்கள் தான் சுற்றிலும் கண்ணாடி போர்த்திக்கொண்டு அமர்ந்திருக்கிறார்களே! நிதி உள்ளது, மனமில்லை.

Tuesday, January 1, 2013


சுற்று சூழல்
 

Open Bill Stork                 
(Anastomus oscitans)
நத்தை குத்தி நாரை      

                
Common Sandpiper on shells
          



                  
                                                                       




நத்தை குத்தி நாரை, நாரை வகைகளில் வினோதமானது. இது சதுப்பு நிலம் மற்றும் நீர் நிலைகளில் காணலாம். இதன் அலகு பாக்கு வெட்டி போல இருக்கும். இந்த விஷேச அமைப்பு நத்தைகளை உணவாகக் கொள்ளும் இந்தவகை நாரைக்கு உறுதுணையாக உள்ளது. நத்தை மேல் இருக்கும் ஓட்டினை உடைக்க உதவுகிறதுஎனலாம் என்ற Dr. சலீம் அலி, மேலும் இதைப் பற்றி அறிய வேண்டியிருக்கிறது என்கிறார். இந்த வகை நாரை தற்போது  கண்ணம்பாளையம் குளத்தில் சுமார் 60 நாரைகளை கடந்த சில மாதமாக காணமுடிகிறது. படத்தில் காணப்படும் நாரையின் அலகில் சிப்பி உள்ளது. கரையில் உளவும் உள்ளான் பறவையைச்சுற்றி ஏராளமான சிப்பிகளைக் காணலாம். இப்பறவைகள் அருகிலுள்ள சூலூர், பள்ளபாளையம், ஆச்சான் குளங்களில்இது போல காணக்கிடைக்கவில்லை. ஏன்? சிப்பி விளைச்சல் கண்ணம்பாளையம் குளம் போல மற்ற குளங்களில் இல்லை. சிப்பிகள் சாக்கடை நீர், அதிகம் கலந்தால் விளையாது. ஆனால் சாக்கடை நீர் கலந்து கொண்டுதான் இருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக நாம் இயற்கைச் செல்வங்களை இழப்போம். PWD இதை கவனிக்குமா? கண்ணம்பாளையம் பஞ்சாயத்து தான் கவனிக்குமா? சிப்பிகள் விளையாவிட்டால் நத்தை குத்தி நாரைகள் தொடுவானில் மறையுமோ! Stills contributed: R. Vijayakumar