Showing posts with label வலசைபறவை. Show all posts
Showing posts with label வலசைபறவை. Show all posts

Tuesday, October 16, 2012

வலசைபறவை


சின்ன உப்பு கொத்தி
Lesser Sand Plover
(Charadrius mongolus)


                
இந்த குழுப்பறவைகள் லடாக்,சிக்கிம்-லிருந்து எனது சூலூர் கிராம ராமச்சந்திரா குளத்துக்கு வந்திருக்கிறது எனில் வியப்புத்தான். சின்னஞ்சிறிய பறவைகள் மழை, வெய்யில், புயல் எனப்பாராமல் எத்தனை தொலை கடந்து வந்திருக்கிறது பாருங்கள். வழியில் வல்லூறு, பருந்து துரத்தியிருக்கும். எத்தனை இரவுகள், எத்தனை பகல்கள் ஆயிற்றோ! தடத்தில் நண்டு, புழு, மணல் வெட்டுக்கிளி கிடைத்திருக்கலாம். பசியுடனும் பறந்திருக்கலாம். வலசை உயிருக்குத் துணிந்த தேடல்.இவை மற்ற உள்ளான், மோதிரக்கோழிகளோடு குளக்கரையோரம் துறுதுறுவென இரை தேடியது கண்டு நானும் நண்பர் விஜயகுமாரும் கண்இமைக்காமல் ரசித்தோம். இதன் தலையும், அலகும், கால்களும் மற்றும் இரை தேடல் விதமும் இன்ன இனம் என தெரியப்படுத்துகிறது.

வலசைபறவை


வலசை(Migration)
கொசு உள்ளான்
Little Stint
(Calidris minuta)

Little Stint
ஐரோப்பா மற்றும் சைபிரியாவிலிருந்து கோவை, சூலூருக்கு வருகை புரிந்த  கொசு உள்ளான் குழுவே வருக! சனிக்கிழமை 13.10.2012 அன்று அதிகாலை நானும் நண்பர் விஜயகுமாரும் ராமச்சந்திரா குளத்தில் வரவேற்றோம். சிங்கைக்குளத்தில் முன்பே பார்த்தேன். ஆனால் வரவேற்புக்கு தொலைவில் குழு இருந்தன. நிழற்ப்படத்துக்கு நிற்கவுமில்லை. இத்தனை சிறியவர்கள் எப்படித்தான் ஐயாயிரம் மைல்களுக்கு மேல் பறந்து வருகிறார்களோ! வலசை ஒரு புதிர். நீர்கரை ஓரங்களில் நடந்தும், ஓடியும், நத்தை, நீர்ப்பூச்சி, சங்குப்பூச்சி உண்ணும். குழு நீர் பரப்பின் மீது துரிதமாகவும், நெருக்கமாகவும், வளைந்து, ஒன்றுசேர்ந்து திரும்பிப்பறக்கையில் சூரியஒளியில் சின்னப்பறவைகளின் அடிப்பாகம் பளீரிடும்,அழகைச்சொல்ல வார்தைகள் இல்லை. ரஷ்யாவில் 9.8.77ல் காலில் வளையமிட்டது தமிழ்நாடு கோடியக்கரைக்கரையில் 25.8.90 அன்று காணக்கிடைத்தது.