Showing posts with label இதர இனங்கள். Show all posts
Showing posts with label இதர இனங்கள். Show all posts

Monday, September 21, 2015

பிரிவின் துயரம்



வாலிபப்பருவத்தில் நான் வாழ்ந்த வீடு


               பனிரெண்டு செப்டம்பர் 2015-ன் மாலைப்பொழுதில் சரியாக 7.35 மணிக்கு எனது தந்தையின் உயிர் பிரிந்து எங்கோ சென்றது. அனைவரும், பேத்தி, பிதுர்களனைவரும் சூழ தேவாரம், சக்தி அகவல் பாடி, ஹர, ஹர (ஹரிஅரன்) முழங்க உடலிலிருந்து ஆன்மா வாய்வழியாகப்பிரிந்து போனது. எனது தந்தை ஒரு நல்ல மனிதர். கர்ம யோகி. ஒழுக்கமுள்ள நெறியாளர். எப்போதும் வேட்டி, ஆபாரம் எனும் முழுக்கை சட்டை அணிவார். வெற்றிலை பாக்கு கூடப்போடாதவர். காலத்தே காரியமாற்றுவார். பங்கஜா மில்லில் அட்டெண்டராகச்சேர்ந்து டைம் கீப்பர் ஆனவர். எந்தத் தொழிலையும் உன்னிப்பாக கவனித்து செம்மையாக முடிப்பார். மில்லில் ESI, PF, காசியர், மில்லின் கல்யாண மண்டபம் மற்றும் குடியிருப்பு பொறுப்பாளர் என சகல வேலையும் ஏற்றுச்செய்த கடின உழைப்பாளர்.
            
              மில் பல வருஷம் ஓடாத போது விவசாயம், அதற்கு முன்பு சகோதரர்களோடு ஹோட்டல் வைத்து நடத்தியவர். ஓய்வு பெற்றபின்பு கூட பிளாஸ்டிக் தொழில்,கட்டிடகட்டுமானம், பார்சல் சர்விஸ், எண்பது வயதுக்குப்பின்பு கூட ஒரு ரூபாய் காய்ன் இரண்டு பூத் என அயராது பணி செய்தும் அவரைச் செல்வம் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. பெரிய குடும்ப பாரத்தைச்சுமந்து அதில் காசு, பணம் செலவழிந்து போனது. தனக்கெனவும், தன் குடும்பத்துக்கு எனவும் சேமிக்க முடியவில்லை. யாவருக்கும் கொடுத்து சந்தோஷப்படுத்திப்பார்ப்பவர். அவர் எனது தம்பியோடு வசித்தார். நான் 15 கிமீ கிழக்கில் இருந்ததால் சொந்த ஊரைவிட்டு அவர் வர விருப்பப்படவில்லை.
             
            அவர்கடைசி காலங்களில் தினமும் சூலூரிலிருந்து நான் ராமநாதபுரம், சென்று அவர் நலன்களை கவனித்து வருவேன். மாத்திரைகளும், மாதமானால் ஒரு தொகையும் தந்து அவரை நல்ல முறையில் பார்த்துக் கொள்வேன். கோயம்புத்தூர் பங்கஜா மில்லின் மைதானத்துக்குள் மாலை நேரம் உலாவப்போய்விடுவேன். அதற்குத் தென்புறம் லைன் வீடுகளாக குசவன் ஓட்டில் வேய்த குவார்ட்டர்ஸ் வீடுகள் இருபது இருக்கும். அதில் இரண்டாவது லைனில் கடைசிக்கு முந்திய வீட்டிலும், அதே லைனில் முதல் வீட்டுக்கு இரண்டாவது வீட்டிலும் மாறி,மாறி எனது வாலிபப்பருவத்தில் தந்தையோடு இருந்தேன். இப்போது மில் நஷ்டத்தில் இயங்கியதால் பராமரிப்பு இல்லாமல் சிதலமாகி கிடக்கிறது.

           மைதானத்தில் உலாவும் போது கவுதாரி, மைனா, காகம், வாலாட்டிக்குருவி, கருப்பு, பிரவுன், பிரவுன்வெள்ளைக்குதிரை மூன்றினைப்பார்ப்பேன். மேற்குப்புறத்தில் மாடுகள் கட்டியிருப்பர். அந்தி சாயும் பொழுது கரி பூசிக்கொள்ளும் வானத்தில் பழம் திண்ணி வெளவால்கள் சாய்ந்த கோட்டில் பறந்து வரும் அழகையும், ஆதவனின் அன்றைய நாளின் கடைசி நிமிடங்கள் போடும் வண்ண ஜாலங்களையும், ஒற்றையாக நிற்கும் தென்னை மரத்தின் கரிய நிழலையும் பார்த்து ரசிப்பேன்.                         …………தொடரும்

Wednesday, March 18, 2015


                                       பெருமாள் ஐயா

Red wattled Lapwing

Wood pecker (பெருமாள் ஐயா ஓவியங்கள்)

L to R Dr. K. Ratnam, Arulagam Bharathi Dasan and Perumal Sir



பெருமாள் ஐயா
                இவர் திடீரென பறவை சித்தர் Dr. ரத்னம் ஐயா மூலமாக எனக்கு அறிமுகமானார். ரத்னம் சார் வீட்டில் அமர்ந்து அவரோடு பேசிக்கொண்டிருந்தேன். அண்ணாருக்கு வயது அப்போது 75 இருக்கும். பெருமாள் ஐயா வருகிறார் அவர் எனக்கு மூத்தவராக இருப்பார், நீ போய் பஸ் நிறுத்தம் போய் அழைத்து வா, அவருக்கு வீடு தெரியாது, தற்போது பொள்ளாச்சியிலிருந்து வருகிறார் எனப் பணித்தார். முன்பின் தெரியாதவர் இருப்பினும் அவரைப் பார்த்ததும் அடையாளம் காணலாம். நல்ல சிகப்பு, தாடி வைத்திருப்பார். கண்ணாடி மற்றும் குல்லாய் அணிந்திருப்பார். அவரை சுலபமாக அடையாளம் கண்டு ரத்னம் ஐயா இல்லம் அழைத்து வந்தேன்.
முக்கால் மணி பேசிக்கொண்டிருந்தோம். இரவு உணவும், தங்கலும் எனது இல்லத்துக்கு வருகிறேன் எனச்சொன்னது உண்மையில் எனது பாக்யம். கல்கத்தா சாந்தி நிகேதனில் இருந்து ஓவியங்களை சுவற்றில் தீட்டி பல நன்னெறிகளைப்பரப்பியவர். நல்ல ஓவியர், கூட     எழுத்தாளரும் ஆவார். ரபீந்தராநாத் தாகூருக்கு மாணவர். பிறகு சாந்தி நிகேதனில் விரிவுரையாளராகப் பணிபுரிந்தார். சில நன்னெறி நூல்களை எழுதி, அவரே செலவிட்டு வெளியுட்டுள்ளார். இரு நூல்களை நான் கேட்காமலேயே எனக்குத்தந்தார். அதில் ஒன்று சிந்தனைக்கதிர். இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை.
           வீட்டுக்கு அழைத்து வந்தேன். மனைவி என் பிள்ளைகள் அவரைச்சுற்றி அமர்ந்து கொண்டு இரவு நல்ல நெறிகளை அவர் வாயிலாகக் கேட்டோம். மறுநாள் சின்னார் உலாப்போவதாகத்திட்டம். நான் கார் ஏற்பாடு செய்திருந்தேன். அதிகாலை பெருமாள் ஐயா, ரத்னம் ஐயா, நண்பர் பாரதி தாசன் (அருளகம் NGO) மற்றும் நான் சின்னார் சென்றோம். சின்னார் நெருங்கும் போது ஒரு பின் நீர் நிலை வசிகரமாக நம்மை மயக்கும். அங்கு காரை நிறுத்தி, இறங்கி இயற்கையை ரசித்தோம். பெருமாள் ஐயா உடனே சிறு டயரியில் பென்சிலால் அந்தக்காட்சியை வரைந்தார். இதற்கு அவருக்கு லேசாக கை நடுக்கமிருந்த்து. என்னே ஆர்வம், அதுவும் இந்த வயதில்

இயற்கையைப்பற்றிய பேச்சும், அறிவும், எழுதுவதும், ரசிப்பதும், வரைவதும் எல்லையில்லா பரவசம் உள்ளத்தில் ஏற்படுத்தும். அதில் சந்தேகமே வேண்டாம். 80 வயதை நெருங்கிக்கொண்டு இருப்பவர் யார் தயவும் இல்லாமல் நடந்தும், பஸ் ஏறியும் ஊர்விட்டு ஊர் வந்து வெளிப்படையாகப்பழகிப்பேசி,எழுத்து, ஓவியம், திறமையுடன் இயற்கையாளராக இருப்பது எனக்கு வியப்பையும், அவர் மேல் எனக்கு பெரும் மரியாதையும், மகிழ்வையும் ஏற்படுத்தின. மனைவி அவர் சென்ற பின்பு அவரைப்பற்றி சிலாகித்தாள். இவர் ஓவியங்கள் மற்றும், இவரைப்பற்றியும் இந்திரன் என்பவர் தொகுத்து வெளியிட்டுள்ளார். நல்லதொரு ஆன்மா எப்போதும் தன் சுவடுகளைப்பதிக்கத்தவருவதில்லை. அவரை சில போது நினைத்துக்கொள்வேன். தனக்கென ஒரு குடும்பத்தை ஏற்படுத்திக்கொள்ளாது சுயநலமற்று எப்படி ஒரு வாழ்க்கை வாழ்ந்து மறைந்திருக்கிறார். எளிமையானவர், இனிமையானவர் இன்றும் நினைக்கின் நல்ல ஊற்றுப்பெருகி வழிகிறது.

Monday, May 26, 2014

   பூனைகளின் உட்சண்டை....   INFIGHTING OF CATS     









           பூனைகளை புலியினம் எனலாம். அதனுடைய குணாதிசயங்கள் இதற்கும் இருக்கிறது. எங்கள் குடியிருப்புப் பகுதியில் பல பூனைகள் வயதுவாரியாக உலவுகின்றன. யாரும் எடுத்து வளர்த்தவில்லை.எப்படி வயிற்றை வளர்க்கின்றன, எங்கு தூங்குகின்றன , எங்கு போய் இறந்து போகின்றன என்பன மர்மமாக உள்ளது. ஒரு நாள் இரவு எட்டு இருக்கும், எனது தங்கை பெண்கள்,கல்லூரி மற்றும் பள்ளியில் படிப்பவர்கள், கோடை விடுமுறையில் விருந்தினராக வந்தவர்கள் கீழ் தளத்திலிருந்து மாடிக்கு ஓடி வந்தனர். நான் கணனியில் முகநூலில் பொழுதை கழித்துக் கொண்டிருந்தேன்.
 பரபரப்பாக, ‘ முன்னறையில்  பெரியபூனை,குட்டிப்பூனையைக்கடிச்சுக் கொதறுது, வாங்க!’ என்றனர். நான் கீழ் தளம் செல்ல அங்கு குட்டிப்பூனை பயத்தில் மலஜலம் கழித்து, கழுத்திலும், பக்கவாட்டு வயிற்றிலும் பெரிய பூனையின் நகங்கள் பதிக்கப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. நாங்கள் சென்றதும் மஞ்சள், வெள்ளைப் பெரிய பூனை தப்பித்து ஓடியது. ‘நான் குட்டிப்பூனை இறந்து விடும், இதற்கு நாம் என்ன செய்ய முடியும்?’ என புலம்பி, வருத்தப்பட்டுச்சொன்னேன். ‘க்ரில் மேல், அறைக்கூரைப்பகுதியெல்லாம் தாவிப்பாய்ந்து தப்பிக்கப்பார்த்தும், அந்த அரக்கத்தனமான பூனை விடவில்லை. கடித்துக்குதறியிருக்கிறது.’ என உறவுப்பெண்டிர் பயந்த குரலில் சொன்னார்கள். மலஜல நாற்றம் அடித்தது. ‘காலைக்குள் பூனை இறந்து விடும். காலையில் அடக்கம் செய்யலாம். நாம் செய்ய ஒன்றுமில்லை. மோசமான நிலையில் உள்ளதுஎன நகர்ந்தேன்.
காலையில் பூனையை அடக்கம் செய்ய மண்வெட்டியெடுத்து  எதிர்புறத்தோட்டத்தில் இரண்டடிக் குழி வெட்டிவிட்டு பூனையைத்தூக்கினால் அது லேசாக நெளிந்தது. பூனை பாவம் பொல்லாதது, உயிரோடு புதைப்பது மகா பாவம் என ஒரு பிளாஸ்டிக் பையில் இட்டு கார் ஷெட்டில் காருக்கு அடியில் வைத்தேன். அது மறுநாள் பார்த்தால், மூன்றடி தள்ளிக்கிடந்தது. நாய், மற்றும் திரியும் பூனைகள் மீண்டும் கடித்துக்குதறிவிடுமோ என பயம் வாட்டியது. மறுநாள் ஒரு அட்டைப்பெட்டியில் வைத்து, சுற்றிலும் பினாயில் தெளித்து வாசம் வராமல் சுத்தமாக அந்த இடத்தை வைத்தேன்.
தம்பி 15 கி.மீ தாண்டியுள்ள ஊரில் வசிக்கிறான். அவன் வீட்டில் பூனை ஒன்றுபோக ஒன்று வளர்த்துவர். அவனை வரச்சொன்னேன். அவன்நீயோசல்ப்காயத்துக்கு மருந்துப்பொடியும், பால் கொடுக்க ஒருசிரின்ச்சும் கொண்டு வந்தான். பால் சிரின்ச் ஊசியில் கொடுத்தான். பால் இறங்குவது கழுத்து அசைவில் உணர்ந்தேன். காயத்துக்கு ‘நீயோசல்ப்பொடி தூவினான். ‘இப்படியே பராமரியுங்கள்எனச்சொல்லிப்போய் விட்டான். நானும் ஆறு நாள் போராடிப்பார்த்தேன். பினாயில், நீர், சிரின்ச் ஊசிபால், ‘நீயோசல்ப்பொடி, எனக்கவனித்துப்பார்த்தேன். பால் கொடுத்தால் உடல் முழுக்க நனைந்து போனது. அது பாதி உள்ளிறங்க, பாதி வெளியில் வழிந்தது. பாலுக்கு கட்டெறும்பு, சின்ன எறும்பு என வந்து பூனை வாயிலும், உடம்பிலும் ஏறின. பார்க்கப்பரிதாபமாக இருந்தது.
இந்த கருப்புவெள்ளை நிறக் குட்டிப்பூனையின் தகப்பன் பூனைக்கும், வேறொரு வெள்ளை, மஞ்சள் நிறப் பூனைக்கும் விரோதம். அதை நீங்கள் புகைப்படங்களில் பார்க்கலாம். (படம்; 1,2) ஒன்றையொன்று அடிக்கடி கத்திக்கொண்டும் உறுமிக்கொண்டும் சண்டையிடும். அதன் மையமாக வைத்து கருப்புவெள்ளை தகப்பனது,மஞ்சள் வெள்ளை  பூனை, கருப்பு வெள்ளை குட்டிப்பூனையை குதறிவிட்டது. இப்படியும் நடக்குமா! நடக்கும். விலங்குகளின் பதிவுகள் நம்மிடமும் உள்ளது. இப்போதும் இது மாதிரி நடந்து கொள்கிறோமா, இல்லையா?
குட்டிப்பூனை இறந்துபட்ட பிறகு விரோதப்பூனைகளிரண்டும் ஆக்ரோசமாக புலிகளைப்போல சண்டையிட்டுக் கொள்வதைப் பாருங்கள். (படம்; 3)
அடிக்கடி உயிர் இருக்கிறதாவென என் கண்கள் பூனையின் வயிறு மற்றும் நெஞ்சுப் பகுதியைப் பார்க்கும். பூனை சில பொழுது விழித்துப்பார்க்கும், முணகிநெளியும். அது படும் அவஸ்தை, உயிர் விடப்போராட்டமா? உயிர் தக்க வைத்துக்கொள்ளப்போராட்டமா? எனத் தெரியாது, நானும் கண்ணீர் விடாத சோகத்திலிருந்தேன். நாற்றம்…. எனக்கு கிருமிகள் ஒட்டிக்கொள்ளுமோ! பூனை மெலிந்தது. நிற்க வைத்தேன் பல முறை அது கீழே சரிந்து, சரிந்து விழுந்தது. நான்கு பூனைகள் தனித்தனியாக வந்து பார்த்துச்சென்றன. நமது வேண்டப்பட்டவர் மருத்துவ மனையில் இருந்தால் ரொட்டி, ஆப்பிளோடு சென்று பார்ப்பதில்லையா! அது போல வாயில்லா ஜிவன்களுக்கும் அந்த உணர்வு இருக்கிறது.
திருப்பிப்போட அது எப்போதோ கழித்த சிறுநீர் அடர் மஞ்சலாக இருந்து, ஒரு பக்க உடலில் பரவி ஒட்டியிருந்தது. வாய் பிளந்திருந்தது. வெளிரியிருந்தது. இறைவனுக்குத்தெரியும். எந்தக் கானகத்தில், எந்த மரத்தில், எந்தக்கிளையில் எந்தச்சிமிறில், எந்த இலை வாடி வீழும் என அவரைத்தவிர யாவருக்கும் தெரியாது, என கண்ணதாசன் அர்த்தமுள்ள இந்த மதத்தில் எழுதியுள்ளார். அது நினைவுக்கு வந்தது.மனம் சங்கடமாக இருந்தது. மஹாத்மா காந்தி ஒரு ஆடு படும் மரணப்போராட்ட அவஸ்தையைப்பார்த்து மனம் புண்ணாகி, சகிக்காது ஊசி போட்டு கொன்று விடச்சொன்னார்,என நண்பர் சொன்னார்.

பூனையை இனி என்னால் காப்பாற்ற முடியாது என உணர்ந்தேன். இயற்கை நியதியில் தலையிடுகிறேன், இது கூடாது எனவும் மனதுக்குப் பட்டது. ஆறு நாள் முயற்சி பலன் தரவில்லை. ஒரு பாதி உடைந்த பிளாஸ்டிக் குடத்திலிட்டு பூனையை  50 செண்ட் மைதான மூலை தில்லி முட்புதருக்கடியில் வைத்தேன். கடைசியாக அந்தப்பூனை என்னை பச்சைக் கண்ணில் விழித்த விதம் என் இதயத்தை பிழிந்தது. சர்வம் சிவமயம்

Thursday, October 11, 2012

பிற உயிரினம்


பழம் திண்ணி வொளவால்
(Flying Fox)


 வொளவால், பறவை இனம் என்று நினைப்பவர் உண்டு. இது பாலூட்டி இனம். இவைகளை கோவை சிதம்பரம் பூங்காவில் பார்க்கலாம். பல வருடங்களுக்கு முன்பு, அலுவலகம் விட்டு மாலைநேரமானால் பூங்காவுக்கு சென்று விடுவேன்.வொளவால்களின் சேட்டைகளைப்பார்த்துக்கொண்டேயிருப்பேன். வேறு கவனம் எங்கும் சிதறாது. இதற்கு பதஞ்சலி அட்டாங்க யோகாவில் தாரணா என்று பெயர். இவை பகல் பொழுது முழுதும் பெரிய உயர்ந்த மரங்களில் தலைகீழாகத்தொங்கிக்கொண்டு தூங்கும். மாலை மயங்கியதும் இவை மேற்கு, தெற்கு திசைகளில் பறந்து செல்லும். திகில் சினிமாவில் பாழடைந்த கோட்டை, இரவும் பகலும் சந்திக்கும் வேளையில் வொளவால்கள் பறந்து போவது போல போகும். செவ்வானம் கருத்துக்கொண்டு வர,வர வொளவால்கள் உயர சற்று சாய்ந்த கோணத்தில் பக்கவாட்டில் பறந்து போவது பார்க்க எனக்கு ரம்மியமாகத்தெரியும்.இவை பழங்கள் மட்டுமே உண்ணும். மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரங்களில் பழமரங்கள் இருப்பதால் அதை நோக்கிப்போகின்றன. இது பெரியது. முகம் நரி போல இருப்பதால் இதற்கு  Flying Fox  எனப்பெயர். வருஷத்தில் ஒரு குட்டி ஈன்று மரத்தில் தலை கீழாகத்தொங்கியவாறு பாலூட்டும். இவை அல்ட்ராசானிக் ஒலியைப்பயன்படுத்தாது. பகலிலும் இரவிலும் பார்வை தெரியும். நீர் நிலைகளில் நீர் குடிக்கும். இதன் வாழிடச்சூழலை சீரழிக்கும் விததில் வயதான பெரிய மரங்களை வெட்டுவது, இவைகளை அடித்து திண்ணுவது போன்ற செயல்களை மனிதன் நிறுத்திக்கொள்ளவேண்டும். நிழற்படம்; நண்பர் சிவப்பிரஷாத்.

Wednesday, August 29, 2012

வனவலம் (Trekking)


குளவிக் கூடு
பெருமாள்முடி கோவை, தொணடாமுத்தூருக்கு அப்பால் உள்ளது. அந்த வனத்துக்குள் பாஸ்கர், குணா என்ற தோழர்களோடு வனவலம் சென்ற போது பார்த்த பிரமாண்ட குளவிக்கூட்டை நீங்கள் இப்போது பார்க்கிறீர்கள். கூடு, மரக்கூழ் மற்றும் மண் சேர்த்துக்கட்டும்.ராணிக்குளவி முட்டைகளிட்டபின் அவை பிறகு புழுக்களாகும். மூன்றாவது அவதாரமெடுத்து, நூற்றுக்கணக்கில் குளவிகள் வெளிவரும். நல்லவேளை! நாங்கள் அந்த பிரமாண்ட கூட்டைக்கடக்கும்போது கொடுக்கோடு அவதரிக்கும் குளவிகள் கூட்டை உடைத்துக்கொண்டு வெளியேறி எங்களைத் துரத்தவில்லை. அப்படித் துரத்திஇருந்தால் அதோகதி தான். அருகில் குளம், அல்லது ஆறு இருந்தால் தப்பிக்கலாம். இயற்கை அவைகளை மலர்களின் மகரந்த சேர்க்கைக்கும், பூச்சிகளைக் கட்டுப்படுத்தவும் படைத்துள்ளது.

Sunday, August 19, 2012

கொள்ளாதவன் வாயில் கொலுக்கட்டை

கோவை பள்ளபாளையம் குளத்தில் பறவை நோக்குதலில் இருந்தபோது ஒரு அரியகாட்சி கண்ணில் தென்பட்டது. குளத்தின் வடகரைக்கு அருகாமையிலிருந்த விவசாயக்கிணற்றின் படியில் தண்ணீர் பாம்பு வெய்யிலுக்கு படுத்திருக்கிறது என்று படம் எடுத்து, வீட்டுக்கு வந்து படத்தைப்பெரிதாக்கிப்பார்த்தால் வியப்பு. கிணற்றில் ஒரடி நீளமீன்கள் நீந்திக்கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது. பொதுவாக தண்ணீர் பாம்பு தவளைகளைச்சாப்பிடும். இப்படியும் நடக்குது!!

அன்பின் பகிர்வில் பிற ஜீவன்கள்

எச்சில் பூச்சி (Spit Bug )
புல்வெளிகளில் உலவும் போது சில இடங்களில் புல்லின் மேல் நீங்கள் வெள்ளை நுரைகளைப்பார்த்திருப்பீர்கள். நீங்கள் அதை, யாரோ எச்சில் துப்பிப்போயிருக்கிறார்கள் என்று நினைத்திருப்பீர்கள். ஆனால் நடந்தது வேறு.  புகைப்படத்தில் காணும் எச்சில் பூச்சி தன்னைச்சுற்றி ‘வழுவழு எச்சிலைத்துப்பி(Mucus) உள்ளே சந்தோசமாக அமர்ந்து விடுகிறது. காரணம்;-
(1) வெய்யிலுக்கு குளிர்ச்சியாக இருக்க (2) எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு.

ஆச்சர்யமாக உள்ளதா? இன்னொரு ஆச்சர்யம் என்னவெனில் இதைப்பற்றி ஒரு சித்தர் அந்தக்காலத்திலேயே பாடியுள்ளார். இதோ;-

‘புல்லினுள் இருக்கும்பூச்சி பொருந்த வெண்ணுரையுண்டாக்கி
மெல்லிய தண்ணீர் வீட்டில் வெயிற்படாதிருக்குமாபோல்
சொல்லிலே நாகை நாதர் தோய்ந்திடச்சூட்சங் கண்டாற்
கல்லிலே தெய்வமில்லைக் கருத்திலே தெய்வம் நெஞ்சே.

                                                -கணபதி தாசர்
                                            நெஞ்சறி விளக்கம்