Showing posts with label பூச்சிகள் ராஜ்ஜியம். Show all posts
Showing posts with label பூச்சிகள் ராஜ்ஜியம். Show all posts

Saturday, November 9, 2013




Green lynx spider
(Peucetia Viridana)

பச்சை சிலந்தி

நிழற்ப்படத்தில் அழகு காட்டும் பச்சை சிலந்தியை நான் ஒரு விபத்தாக கோவை சிங்காநல்லூர் குளக்கரையில் சந்தித்தேன். என்ன அழகு! உடனே என் நிழற்படபெட்டிக்குள் அடைத்தேன். இவை இரண்டு வகை. அமெரிக்காவில் ஒரு இனம்.அடுத்து இந்தியா மற்றும் மயன்மாரில் உள்ளது. நம் நாட்டுச்சிலந்தியை கரை ஓரம் அடவியிருந்த உயரக் குறைவான செடிகளில் கண்டேன். உடல் இரு பாகங்களாகப்பிரிந்து வெளிர் பச்சையாக உள்ளது. எட்டுக்கால்கள் வெகு நீளமாகஊடுருவிய வெள்ளை, அத்துடன் சிறிய கருப்பு முடிகள் உள்ளன. உடலின் முன் பாகத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமான கருப்புப்புள்ளிகள், இரண்டாவது பாகத்தில் இலை நரம்புகள் போல வெள்ளையாக இருப்பது காணமுடிகிறது. இதில் ஒரு சிலந்தி தன்னைவிட உருவத்தில் பெரியதான கரப்பான்பூச்சியைப்பிடித்து கபளிகரம் செய்வது ஆச்சர்யத்தை வரவழைத்தது.

சட்டெனப்பார்த்தால் இவை புலப்படுவதில்லை. இலைகளில் அமர்ந்திருப்பதால் பச்சைக்குப்பச்சை ஒன்றிப்போகிறது.இதன் cousin brother (Peucetia viridan) அமெரிக்கப்பிரஜை. இது பற்றி தகவல்கள் நிறைய வலைதளத்தில் கிடைக்கும் போது நமது பிரஜை viridana பற்றி படமும் உருவத்தைபற்றிய விபரமும் தவிர ஒன்றுமில்லை. விரிடான் கடித்தால் வலிக்கும். ஆனால் விஷமில்லை.விரிடானா நம்மைக்கடித்தால் வலிக்குமா?, அத்தோடு விஷம் ஏறுமா? என்பது தெரியவில்லை. விரிடான் விவசாயத்துக்கு தீங்கு விளைவிக்கும் பூச்சிகளை பிடித்து உண்ணுவதால் விவசாயிக்கு பயன் விளைகிறது. அதே சமயம் அமெரிக்கர் இது தேனீயைப்பிடித்து உண்பதையும் பார்த்துவிட்டனர். ஆக இது பூச்சிகள் எது கிடைத்தாலும் விடுவதாக இல்லை. நமது நாட்டு பிரஜை விரிடானா கிட்டத்தட்ட ஒன்றுவிட்ட சகோதரன் விரிடான் போல தான் வாழ்க்கை இருக்கும் என நினைக்கிறேன். விரிடான் இனப்பெருக்கம் உட்பட வாழ்க்கை மிக ஸ்வராஸ்யமாக உள்ளது.வலைதளத்தில் படித்து வியப்படையுங்கள். இயற்கையின் படைப்புகளை கண்டு வியப்பது, அதன் மேல் ஒரு மரியாதை, அதை பாதுகாக்க வேண்டும் என்பது ஆன்மிகத்தின், முதல் படி. விரிடானா பற்றி ஆராயுங்கள் அல்லது அது பற்றி நூல்களில்ஏற்கனவே பதிவாகியிருந்தால் என் வலைதளத்துக்கு(comment) வந்து இது பற்றி பதிவு செய்யவும். Wikipedia விரிடானா பற்றிய விபரங்களை பதிவு செய்ய உங்களை வரவேற்கிறது





Tuesday, April 16, 2013


Ant Lion trap
சிங்கஎறும்பு வலை

          புகைப்படத்தில் காணும் இந்தக் குழிவை ஒரு வகை எறும்பு ஏற்படுத்தி உள்ளே பதுங்கியுள்ளது. வழியில் செல்லும் இதை விட சின்ன எறும்பு மற்றும் சில சிறுபூச்சிகள் தவறி இந்தக்குழிவில் விழுந்தால் அதோ கதிதான். உடனே சிங்கஎறும்பு வெளி வந்து இழுத்து உண்டுவிடும். இந்த மாதிரி பொறிகள் பலவற்றை பாரதியார் பல்கலை மேற்குப்புற முட்காட்டில்பல வருஷங்களுக்கு முன்பு எல்.பி.ஆர். எனது வனவலம் (Trekking) ஆசான் அடையாளம் காட்டினார். இதை வனவலம் என்ற எனது நூலில் எழுதியிருந்தது ஞாபகம் வந்தது, எப்படியெனில் சமீபத்தில் ஊர்வேலங்காட்டில்இந்தப்பொறிகளை மனைவிக்கு காட்டமுடிந்த போது தான்.வனவலம் 2002 திசம்பர் 14-ல் வெளிவந்தது. 
          இது தமிழில் மாறுபட்ட நூல். வனம்வலம், மற்றும் பறவை நோக்கல்கட்டுரைகளைக்கொண்டது.முன்னால் கல்வி அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு இதைப்டித்து விட்டு என்னைப் பாராட்டினார். என். கிருஷ்ணக்குமார், IFS, IFGBT, CBE பாராட்டினார். தமிழக அரசு பொது நூலகத்துக்கு 600 படிகள் தேர்வு செய்தது.
         எனதுவனவல ஆசான் 31 முறை வெள்ளியங்கிரி மலை ஏறி சாதனை புரிந்தவர். அதை தேதிவாரியாக் குறித்து யார்யாருடன்சென்றது எனவும் குறித்து வைத்துள்ளார். அயராது குறிப்பு எடுப்பார். இவர் எங்களை விட்டுப்பிரிந்தது ஈடு செய்ய முடியாத பேரிழப்பு.நடமாடும் நூலகம் இவர். நாங்கள் அப்போது Coimbatore Trekking Association- வைத்து நிறைய வனவலம் சென்றோம். அவர் சிரிக்காமல் ஜோக்கடித்து எங்களை சிரிக்க வைப்பார். அதில் மூன்று மட்டும் இங்கே;-

# சார் உங்க வீட்ல இன்று என்ன மெனு?
கஞ்சிதான்.
என்ன சார்!
அட ஆமாப்பா! என் நாயுக்கும் அதேதான். எனக்கும் அதே தான்
தட்டுதான் வேற வேற…..!

# சார்! மனைவிக்கு கை எலும்பு தேய்ஞ்சு போச்சு.
இனி உங்களைப்பார்த்து கைநீட்டி, நீட்டிப் பேச மாட்டாங்க. விடுங்க.

#  என்னை தினமும் எழுந்தவுடன் காலையில் பார். யோகம் வரும் (டீக்கடை கழுதை படத்தில்)
    காலையில் எழுந்தவுடன் என் படத்தைப்பார்த்தால் போதும்!!





Friday, November 9, 2012

பூச்சிகள் ராஜ்ஜியம்


பூச்சிகள் ராஜ்ஜியம்
Scelio


                                                             Scelio

பூச்சிகள் கிட்டத்தட்ட 30,000 வகைகள் இந்தியாவில் மட்டும் உள்ளன. இவைகளில் பெறும்பாலும் தாவரங்களை நம்பி உள்ளன. எனவே விவசாயத்துக்கு கேடு. அதே சமயம் நன்மை பயக்கும் பூச்சிகளும் உள்ளன. நம் சமுதாயம் போலத்தான் அங்கும் உள்ளது. வெட்டுக்கிளிகள் தாவரங்களை உணவாக்கிக்கொண்டு பல்கிப்பெருகுகின்றன. அதனால் பயிர்கள் வளம் குறைகிறது. நம் எதிரிவெட்டுக்கிளிகளின் பெருக்கத்தைக்குறைக்க எல்லாம் வல்ல இயற்கை ஸ்சிலியோக்களைப்படைத்திருக்கிறது. வெட்டுக்கிளிகளை மைனாக்கள் உட்கொண்டு நமக்கு நன்மை பயக்கின்றன. வெட்டுக்கிளிகளுக்கு எதிரி ஸ்சிலியோ. அதனால் ஸ்சிலியோ நமக்கு மைனாவைப் போல  நண்பன். நம் எதிரிக்கு எதிரி நம் நண்பனாகிறான். வெட்டுக்கிளிகள் தாவரங்களில் ஏராளமான முட்டைகளை இடுகின்றன. அந்த முட்டைகளுக்கு ஒட்டுண்ணியாக இந்த ஸ்சிலியோக்கள் உள்ளன. பூச்சிகளின் ராஜாங்கம் நீங்கள் நினைப்பது போல அருவருப்பானது அல்ல. ரொம்பவும் ஸ்வராஸ்யமானது. இதோ நமது நண்பர் ஸ்சிலியோ புகைப்படத்துக்கு முகம் காட்டியுள்ளார்.