Showing posts with label பயணம். Show all posts
Showing posts with label பயணம். Show all posts

Tuesday, February 16, 2016

மலை முகடு

Click to get my book thro’ on line “Malai mugadu” www.sandhyapublications.com 




எனது எட்டாவது நூல் வெளிவந்து விட்டது. இதில் 20 வனவலப் பயணக்கட்டுரைகள் எழுதியுள்ளேன். வனப்பயணியின் அனுபவக்கட்டுரைகள். மேற்குத்தொடர்ச்சி மலையின் முகடுகளைத்தொட்டு வந்த த்ரில் அனுபவம். பார்த்த தாவரங்கள், விலங்குகள், மற்றும் பறவைகள் பதிவு நடந்துள்ளது. 20 கோட்டு ஓவியங்கள் வாசிப்பவருக்கு மேலும் ஆர்வத்தைப்பெருக்க இடம் பெற்றுள்ளன. அணிந்துரை ம. குணசேகரன் எழுதியுள்ளார். இவர் எண்ணற்ற வனவலம் சென்றவர். எனது நண்பர். இவர் எழுதியது முற்றிலும் பொருத்தமானது. தோழமை ஓவியர்கள் செல்வநாயகம் ஆண்ட்ரூஸ், முழுமதி மற்றும் இவன். யாவருக்கும் நன்றி. அட்டைப்படம் புகைப்பட நண்பர் என். ராதாகிருஷ்ணன் என எனது நண்பர் பட்டாளம் துணைபுரிந்தனர். பிழை திருத்தம் இவனும், நண்பர் துரை பாஸ்கரும். DTP இவன் சில மாதங்களாகச்செய்தான். குழந்தையை பெற்றெடுத்தது போல இந்தப் படைப்பு. படிக்கப்படிக்க எதோ நீங்களே வனத்துக்குள் சென்று வந்த பிரமிப்பு ஏற்படும். பதிப்பக மாடம் மேனகா கோரல் ட்ரா செய்தார்.சந்தியா பதிப்பகம் நடராஜன் சார் அழகுற நூலை உருவாக்கியுள்ளார். யாவருக்கும் எனது உளப்பூர்வ நன்றிகள். அச்சு, எழுத்து வடிவம், அதன் அளவு, காகிதம் என அனைத்தும் ரம்மியம். எடையற்றது ஆயின் உள்ளீடு அறிவு சார்ந்தது. எப்படிச்செல்வது? எத்தனை நாள் வேண்டும்?, யாரிடம் அனுமதி பெறுவது?எப்படிச்செல்ல வேண்டும்? என்ற விபரங்கள் உள்ளது. கூடுதலாக வனவல இடங்களுக்கு வரைபடம் கொடுத்துள்ளோம்.  வனவல உபகரணங்கள்,கொண்டு செல்லக்கூடிய பொருட்கள் என்ற பட்டியல் தரப்பட்டுள்ளது.  என்ற விபரங்கள் தரப்பட்டுள்ளது.  இது மாதிரி நூல்கள் ஆங்கிலத்தில் வந்திருக்கலாம். ஆனால் தமிழில் புது முயற்சி. தமிழன்னைக்கு மற்றுமோர் பிரத்யேக அணிகலன். பலர் வனத்துக்குள் செல்ல கனவு காண்பதோடு சரி. அது சின்ன சாத்தனின் மலை முகடு நூல் படிக்கையில் நனவாகப்போகிறது. எனவே வெறும் ரூ; 150-ல் 20 வனவலங்களுக்கு சின்ன சாத்தன் உங்களை கைப்பிடித்து அழைத்துச்செல்கிறார். உடனே ஆன் லைனில் புத்தகம் ஆர்டர் செய்யுங்கள் தோழர், தோழிகளே! இதோ! Click: www.sandhyapublications.com to get Book –Rs. 150/- 

Friday, May 15, 2015


காரில் ஒரு உலா


White spotted Fantail Flycatcher- photo-Chinna Sathan

Great Pied Hornbill-photo: R. Vijayakumar

Malabar Pied Hornbill-photo-R. Vijayakumar

உலா போய் ரொம்ப நாளாயிற்று என்று நண்பர்கள் நான்கு பேர் கிளம்பினோம். மூர்த்தி சார், துரை பாஸ்கர், விஜயகுமார், என்னையும் சேர்த்து நான்கு பேர் கிளம்பினோம். நல்ல சீதளமும், உஷ்ணமும் நிலவிய நாளில் மாருதி அல்டோவில் சென்றோம். காரமடை, வெள்ளியங்காடு, முள்ளி, அத்திக்கடவு, கெத்தை, லவ்டேல் மார்க்கமாக குன்னூர், பிறகு மேட்டுப்பாளையம் வழியாக கோவைக்கு வந்தோம். அத்திக்கடவில் Greater Hornbill, Malabar Hornbill, Green pigeon பார்த்து சொக்கிப்போய்விட்டேன். உப்புமா சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது ஹார்ன்பில் ராஜன்(இவர் அத்திக்கடவு பகுதியில் கைடு) ஓடி வந்து அழைக்க, உப்புமா கையோடு ஓடிப்போய் அரசமரத்துப்பழம் உண்ணவந்த பெரிய இருவாச்சியைப்பார்த்து ரசித்தோம். என்ன பரிமாணம்! மஞ்சள், கருப்பு, இரண்டு அலகு போல இறைவன் படைப்பு என்னவென்று மெச்சுவேன்! பறக்கும் போது எலிகாப்டர் போல சப்தம்.இரண்டு இருவாச்சிகள் பார்த்ததில் எங்களுக்கு ஏக சந்தோஷம். இது அதிஷ்டகரமான நிகழ்வு.
காருக்குள் சிக்கடா வந்து சிறிது நேரம் பின்புற கண்ணாடியில் அமர்ந்திருந்தது விந்தை. இது தான் ‘உய்உய்’ என காடுகளில் ஓயாமல் ஒலி எழுப்புவது. நாங்கள் சென்ற காலத்தில் மழை விடாமல் பெய்த காலம். எங்கு பார்த்தாலும் பச்சைபசேல் பசுமை. அத்திபழங்கள் பெரிது பெரிதாக பாதையில் கிடக்க அதைச் சுவைத்தேன். குரங்குகள் அத்தி மரத்தில் இருந்தன. அவைகளுடன் நான் போட்டியல்லை. பச்சைப்பின்புலத்தில் நீலநிறத்தில் பூத்துக்குலுங்கும் ஜக்கரண்டா மலர்களில் சொக்கிப்போனேன். மலர்கள் எனது காமெராவுக்குள்ளும் பூத்துக்குலுங்கின. விதைகளை எதோ தங்கக்காசுகளைப்பொருக்குவது போல பொருக்கினேன்.
சிம்ஸ் பூங்காவில் எங்களை விந்தையில் ஆழ்த்தியது White spotted fantail flycatcher. எங்கள் நால்வரையும் ஒரு மணிப்பொழுது தாரணா எனும் தியானத்தில் இருத்தியது. இயற்கை அப்படி ஒரு வல்லமை வாய்ந்தது. மனதும், பார்வையும் அந்த பறவையையே கண்காணித்தது. பூச்சி பிடிப்பதில் வேகம். மரத்துக்கு மரம் தாவி, வாடிய இலைகளைப்புரட்டி, மரத்தண்டுகளில் வலம் வந்து எங்களை புகைப்படம் எடுக்க விடாமல் பாடாய்ப்படுத்தியது.அது ஒவ்வொரு முறையும் பூச்சி பிடிக்கும் போதும் வாலை விசிறி மாதிரி விரிப்பது பூச்சிளை இருக்கும் இடத்திலிருந்து அசையவைத்து, பிறகு பிடிக்க வசதியாக இருக்கும் என்பதற்காக இருக்கும் என்பதை Dr. சலிம் அலியும், ரிச்சர்டு கிரிம்மட்டும் சொல்லாததை எனது வலைப்பூவில் பதிவு செய்கிறேன். இரண்டு வகையானவை இதில் உண்டு. 1. Whitebrowed Fantail flycatcher 2. Whitespotted Fantail Flycatcher. இதில் இரண்டாவது வகை என நண்பர் விஜயகுமார், தான் எடுத்த புகைப்படத்தில் கண்டு பிடித்துச் சொன்னார்.
சிம்ஸ் பார்க்கில் எங்களுக்கு மேலும் விருந்தளித்த பறவைகள்;- Grey tit, White eye, Black bird, Tickell’s Blue Flycatcher. வெண்மார்புக்கோழியை நீந்தி நான் ரசித்ததில்லை. அழகு தோழா!இயற்கை எனக்கு எல்லையில்லா இன்பத்தைத்தருகிறது.
பொறையுடைய பூமி நீரானாய் போற்றி
பூதப்படையாள் புனிதா போற்றி……….அப்பர் தேவாரம்.

Sunday, February 15, 2015


பாலைவனக்கப்பல்
            

                 ஒட்டகப்பண்ணை பிரத்யேகமாக பிகானிரில் உளது. இந்தப்பண்ணை பிகானிரிலிருந்து 8 கி.மீ தூரத்தில் உள்ளதால், எங்கள் கைடு மனோஜ் ஆட்டோவில் அழைத்துச்சென்றார். உள்ளே நுழைந்ததும், ஒட்டக வாடை ஒட்டிக்கொள்கிறது. அங்குள்ள ஒட்டக கண்காட்சிக்கு அழைத்துச்சென்றார். மூன்று விதமான ஒட்டகங்கள் பல நூற்றாண்டாக அறியப்படுகிறது. பிகானிரி, ஜோத்புரி, மற்றும் ஜெய்சால்மிரி. கண்காட்சியில் ஒட்டகத்தின் உணவான கோதுமைத்தாவரம், மேலும் எலும்பு, மயிர், தோல், பல், என ஒட்டக பாகங்களால் ஆன பல வகையான பொருட்கள் வைத்திருந்தனர். ஒட்டகம் பாலைவனத்தைக்கடக்க மட்டுமே என்று நினைத்த எனக்கு மலைப்பாக இருந்தது.
            ஒட்டகங்கள் இங்கு இனப்பெருக்கம் செய்விக்கப்படுகின்றன. 50000 என விலைபோகும் ஒட்டகங்கள் பாலைவனத்தில் பயணம் செய்ய ஏதுவான கால் குளம்புகள், பாலைவன மணல் காற்றில் உதறி வந்தால், கண்களை மூடிக்கொள்ள பெரிய இமைகள், மேலும் மூக்கைக்கூடமூடிக்கொள்ளமுடியும். பாலைவன முட்குட்டை மரங்களில் முள் குத்தாமல் உண்ண பிளவு பட்ட நீண்ட உதடுகள், ஒரு வாரமானாலும் நீர் குடிக்காமல், தாக்குப்பிடிக்க சேமிக்க உடலில் வசதி என இறைவன் அளித்துள்ளார். காலையில் மேய்ச்சலுக்கு அனுப்பப்படுகின்றன. மதியத்துக்கு மேல் ஓய்வாக இருந்ததைப்பார்க்கமுடிந்தது.
காகமிரண்டு ஒட்டகங்களைச்சொரிந்து, உண்ணி அல்லது புண்களைக்கிளறிக்கொண்டிருந்தன. காகங்கள் எல்லா மிருகங்களோடும் ஒட்டி உறவாடும் என உணற முடிகிறது. ஒட்டகப்பால் குடித்தேன் எனப்பெருமையாகச்சொல்லிக்கொள்ளலாம். முதலில் ஒட்டகப்பால் எந்த ஃப்ளேபவரும் இல்லாமல் குடித்து என்ன சுவை என அறியலாமென வெறும் பாலை நானும் நண்பர் வஜ்ரவேலும் அருந்தினோம். பால் அடர்த்தி, சுவை என்னவோ எனக்கு நீர் கலக்காத மாட்டுப்பால் சுவை போலிருந்தது. பிறகு பைனாபில் சுவை கொண்டதை வாங்கினோம்.

ஒட்டகக்குட்டிகளின் ஒலி கேட்க முடிந்தது. சாதுவான பிராணிகள் மேலும் அப்பாவிகளாகத்தெரிந்தன. ஒட்டக சவாரி ஜெய்சால்மிரில் வைத்துக்கொள்ளலாம் என நினைத்துக்கொண்டேன். இங்கு ஒட்டக பாகங்களால் செய்த பை, தோல் மேல் வரைந்த ஓவியங்கள், பல், முடி என கோர்த்த கழுத்தில் இடும் ஆபரணங்கள் என விற்பனை நிலையம் இருக்கிறது. மணல் வெளியில் இட்ட தார் ரோடு வழியாக ஆட்டோவில் திரும்பச் செல்ல ருசித்தது. மாறுபட்ட வாழ்க்கை என்றும் ருசிக்கத்தான் செய்யும்.

Thursday, January 29, 2015


எலிக்கோயில்




எலிக்கோயில்
ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. ஒரு முறை டிஸ்கவரி சானலில் பார்த்திருக்கிறேன். நாங்கள் பிகானிர் இறங்கிய முதல் நாளிலேயே நண்பர் வஜ்ரவேலு எலிக்கோயில் செல்ல திட்டம் தீட்டுவார் என எதிர்பார்க்கவில்லை. நாங்கள் தங்கிய பிகானிர் ரயில்வே ஓய்வு விடுதியிலிருந்து வெளிவந்ததும், சுற்றுலா ஆட்டோக்காரர் மனோஜ் எங்களை ஒரு பேருந்து நிறுத்தத்தில் இறக்கி விட்டார். அங்கிருந்து ஒரு பேருந்து பிடித்து கருணை மாதாக்கோயிலுக்கு 16 கி.மீ. பயணமானோம். போகும் வழி நெடுக பாலையும் அதில் வரும் தாவரங்கள் மட்டுமே காட்சி  தந்தன. எங்கு போனாலும் உறிக்காத கடலை வஜ்ரம் வாங்கி, என்னுடன் பகிர்ந்து கொள்வார். எனக்கு எலியைப்பார்த்தாலே அருவருப்பு. பிகானிரில் பார்க்க எவ்வளவோ இடங்கள் இருக்க, இதைப்பார்க்க நண்பருக்கு ஆவல். எனக்கு எலிகள் உடம்பெல்லாம் ஊறுவது போல ஒரு உணர்வு பேருந்திலேயே ஆரம்பித்து விட்டது.
சிறிய கிராமம். இந்தக் கோயிலுக்கு வெளியில் ஒரு எலியையும் பார்க்க முடியாது. இது வியப்புத்தான். இந்தக்கோயிலைப்பார்க்க நிறைய வெளிநாட்டினர் வருகின்றனர். கோயிலுக்குள் நுழைந்தால் எங்கு பார்த்தாலும் மொலு, மொலு என சுண்டெலிகள் ஊர்ந்து கொண்டும், கும்பலாக அரிசி கொரித்துக்கொண்டும், வாயகன்ற இரும்புச்சட்டியில் பால் அருந்திக்கொண்டும் இருந்தன. கருவறையைக்கூட விட்டு வைக்கவில்லை. எலிகள் தங்க சுவற்றில் தரை ஒட்டி, ஆங்ஙாங்கே வளை ஏற்படுத்தியுள்ளனர். ஒரு பக்கம் செனாய் போல ஊதி இசை எழுப்பிய ஒருத்தரின் அருகில் இன்னொருவர் மத்தளம் தட்டினார். இரண்டுமே ஓசை அளவான கதியில் எழுப்பினர். விரித்த துண்டில் காசுகள் சிதறியிருந்தன.
வெளிநாட்டினர் புகைப்படம் எடுத்தது எலிகளைத்தாம், அத்தோடு எலிகளோடு  தங்களைப்புகைப்படம் எடுத்தனர். யாவர் கையிலும் செல்போன் காமரா.கருண மாதா இருநூறு வருஷங்களுக்கு முன்பு வாழ்ந்து பல அதிசயங்களை இந்த பிராந்தியத்தில் நிகழ்த்தியுள்ளார். அவைகளை விளக்க எதிரில் ஒரு கண்காட்சி உள்ளது. எங்கு போனாலும் பறவைகளை வரவேற்று தானியங்கள் விசறப்படுகின்றன. மாடப்புறாக்கள், பச்சைக்கிளிகள் இந்த அன்பை ஏற்றுக்கொள்கின்றன. கோயிலில் கொஞ்சம் அமரலாம் என்றாலே எலிகள் நம் மேலே ஊர்கின்றன. எலிகள் நக்கி உறிஞ்சிய பாலை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குகின்றனர். வெள்ளை எலி எனில் இன்னும் அதிஷ்டம்.
எலிகள் ஆராய்ச்சிக்குப் பயன் படுத்தப்படுகின்றன. ஒரு நூற்றாண்டுக்கு முன்பு இந்தியாவில் பிளேக் நோய் எலி பரப்பியதாம். இவை கிருமிகளைப்பரப்புகின்றன எனவும் நம்பப்படுகிறது. எலியைக்கட்டுப்படுத்த இயற்கை  கழுகுகளையும், ஆந்தைகளையும், பாம்புகளையும் படைத்தது. மனிதன் எலிப்பொறி, விஷமருந்து என்று சமாளிக்கிறான். இவை இல்லையானால் எலி சாம்ராஜ்யம் முழு உலகத்தையும் அடைத்துக்கொள்ளும். தானியங்களை கபளிகரம் செய்யும் எலிகளை இவற்றினிடமிருந்து காப்பது கருணை மாதா தான் (இக்கோயில் எலிகளை மட்டும்!) ரயில்வே ஓய்வு விடுதி வந்ததும் ஓய்வு விடுதி கண்காணிக்கும் மூதாட்டி என்னை கருணை மாதாஜி தேக்கனா? என இந்தியில் விளித்தார்.


Friday, January 16, 2015


ஹவேலி


Bikaner Havelies

ஹவேலி
            நான் என்னவோ இப்போது தான் ஹவேலி பற்றி கேள்விப்படுகிறேன்.இந்த வகை கலைநுணுக்கம் கொண்ட வீடுகள் ராஜஸ்தானில் உள்ளது. முழுக்க மணற்கற்களால் ஆனவை. மஞ்சள் மற்றும் பிங்க் நிறம் கொண்டவை. பிகானிரில் பிங்க் நிறம், ஜெய்சால்மிரில் சற்று மஞ்சள் நிறம். ராஜஸ்தானத்து வெப்பம் பூமிக்கடியில் இப்பேற்பட்ட மிருதுவான நிறக்கற்களை உருவாக்கியுள்ளது. அங்கு கிடைத்த கற்களைக்கொண்டே அரண்மனைகளும், மாளிகைகளும், வீடுகளும் மிருதுநிறக்கற்களில் மரத்தை செதுக்குவது போல செதுக்கியுள்ளனர். அங்குலம், அங்குலமாக இயற்கை ஓவியங்கள் வடித்துள்ளனர். ஜன்னல், அது ஜன்னலல்ல கலைப்பொக்கிஷம். ஆண்களுக்கு தனி அறைகள், பெண்களுக்கு தனி அறைகள். யானை, மலர், இலை, கொடி என அனைத்தும் நாம் அன்றாடம் பார்க்கும் இயற்கைகளை ஓவியங்களாகக் கல்லில் வடித்துள்ளனர்.
 கல்லில் ஒரு ரம்மியமான கவிதை எழுதியுள்ளனர். கற்களல்ல இவை இனிமையான இசை. உலகில் எந்த மூலையிலும் இப்படி மனதைக்கவரும் கல்ஓவியங்களில் செதுக்கப்பட்ட வீடுகளில்லை எனலாம். இவை கலைப்பொக்கிஷங்கள். வீதிகள் 20’ அடிக்குத்தானிருக்கும். ஆன்மிகர்கள் இவ்வீடுகளை கலைக்கோவில்களாக வைத்துள்ளனர். கிருஷ்ணர், கண்ணன், சிவன் என கல்லில் சித்திரங்கள் தீட்டியுள்ளனர். பெரும் செல்வந்தர்கள் ஹவேலிகளை வாங்கி பராமரிக்கின்றனர். நானும், நண்பர் வஜ்ரவேலும் வழிகாட்டி மனோஜ் ஆங்கிலத்தில் விவரிக்க ஆச்சர்யத்துடன் ஹவேலியைப்பார்த்துக்கொண்டிருந்தோம். ஒவ்வொரு புடைப்பு ஓவியங்களும் கண்ணில் ஒத்திக்கொள்ளலாம். நிறையவே மேற்கு வங்கத்து செல்வந்தர் ஹவேலிகளை வைத்துள்ளனர். ஒன்பது மாதங்கள் செல்வம் சேர்க்க உழைப்பு,
பிறகு மூன்று மாதங்கள் ஹவேலிக்கு வந்து ஓய்வில் மகிழ்ச்சி அடைகின்றனர். ஹவேலி பவித்திரமானதாக வைத்திருப்பதால் இதற்குள் கழிப்பறைகள் இல்லை. அதற்கு ஹவேலி விட்டு தனியான இடம் வைத்துள்ளனர்.ஜெய்சால்மிரில் ஹவேலிகள் வாடகைக்கு விட்டதை, காலி செய்யப்படுவதாக நண்பர் சொன்னார். மூடியேகிடக்கும் ஹவேலியில் பேய் நடமாட்டம் இருப்பதாக கைடு சொன்னார். இப்படித்தான் எதாவது ஒரு கதை உருவாகும். மொகல் கட்டிடக்கலையும், ராஜ்புத்திரர் கட்டிடக்கலையும் சங்கமிக்கும் கவி பாடும் ஹவேலிகள்.

வங்க சத்யஜித்ரே ஜெய்சால்மிர் ஹவேலிகளைப்பார்த்து, அங்கு நடப்பதாக ஒரு துப்பறியும் கதை எழுதி படமாக எடுத்துள்ளார். அதன் பெயர் சோனார் கேலா (Golden Fortress) படமும், நாவலும் அருமையாக இருக்கும். அவையிரண்டும் இப்போது பார்க்கப்படிக்க கிடைக்குமா என ஏக்கம் நிலவுகிறது. ஹவேலிகள் 400 வருஷம் பழமையானவை. நாம் இவைகளைப்படைத்த முன்னோர்களை நினைத்தும், அது இன்றளவும் நின்று கவிதை சொல்லி வெளிநாட்டினரையும் மயக்குவதைக்கண்டு பெருமையடையலாம்.

Thursday, December 11, 2014


ஜெய்சால்மிர்


  


                       

பயணங்கள் ஆன்மாவைப்பக்குவப்படுத்தும் 

        நாங்கள் ராஜஸ்தான் பிரயாணத்திட்டம் தயாரிக்கும் போது ஜெய்சால்மிர் போக நினைக்கவில்லை. ஆனால் பிகானிர் சுற்றி வரும் போது வழிகாட்டி சன்சய் கண்டிப்பாக ஜெய்சால்மிர் போக வேண்டும். இவ்வளவு தூரம் வந்த பிறகு நீங்கள் தார் பாலைவனம் போகாமல் போனால் உங்கள் உலா முற்றுப்பெறாது என வற்புறுத்தவும், எனக்கும் அங்கு செல்ல ஆசை இருந்துகொண்டே இருந்ததும் காரணமாக எங்கள் உலாவை மாற்றி அமைத்தோம். காலை 7.20-மணிக்கு லால்கர் ஃபோர்ட்டிலிருந்து ரயில். குளிரில் கம்பளியோடு சுறுட்டிக்கொண்டு எழுந்து . வெடவெடக்க ஆட்டோவில் கனத்த பைகளோடு 05.45-க்கு ஏறி, 5 கி.மீ பிரயாணித்தோம். ரயில் பாலைவனத்துக்குள் பிரயாணித்தது, எனக்கு வாழ்நாளில் புதுமையாக இருந்தது. பாலையில் கூட பறவைகள், சில விளைச்சல்கள், மேயும் ஒட்டகங்கள் என பிரயாணத்தை அனுபவித்தேன். போகும் வழியில் கஜ்னர், மான்கள் சரணாலயம் வந்தது. அது ஒரு அடர்த்தியான முட்காடு.
     ஜெய்சால்மிரில் இறங்கினோமோ இல்லையோ எங்களைச்சுற்றி தங்கும் விடுதிக்காரர்கள் சூழ்ந்து கொண்டு இழுத்தார்கள். அலாவுதீன், சாம்ராட் விடுதி முதலாளி ஜுப்பில், பிரயாணித்து மதியவேளையில் 1.30-க்கு விடுதியை அடைந்து குளித்து, உணவு வேளை தவறியும் உண்டோம். இளைஞர்,மண்டூ என்ற ஓட்டுனருடன் மணல் குவியல்களுக்குப்பறந்தோம். கோட்டைகள் தற்போது டிக்கெட்டில் காட்சிப்பொருளானதுஅல்லது அது ஓட்டலாகிப்போனது. எத்தனை அழகான கோட்டைகள்! ஒளிரும் விளக்குகளில் ஒளிர்ந்து மயக்கின. அவற்றில் தங்கக்கூடிய அளவு நான் செல்வந்தனில்லையே என ஆதங்கம் மிகுந்தது. பாகிஸ்தான், அங்கிருந்து 60 கி.மீ தூரத்திலிருந்தது. 40 கி.மீ ஜிப்பில் பிரயாணித்து தார் மணல் குன்றுகளை அடைந்தோம். மாலை சூரியன் அஸ்தமனமாவதற்குள் தார் பாலைக்குள் நுழைந்து விடவேண்டும் என பரபரப்பு எனக்கு. ஆனால் நண்பர் இங்கு வந்து ஒரு ஜெயின் கோயிலிற்குள் நேரத்தை செலவழித்தது, டென்ஷன் கொடுத்தது. நான் பாக்யவான். சரியாக சூரிய அஸ்தமனமாகும் போது  தார் பாலைக்குள் ஒட்டக முதுகில் சவாரியில் இருந்தேன். கடவுளே! மணல் குன்றுகள் அட!அட! என்னென்ன வடிவங்கள்! தாழ்ந்தும், ஏறியும் ஒரு அழகிய பெண்படுத்திருந்ததைப் போல…… ..…….
             ஆரஞ்சு சூரியப்பந்து ஒட்டக முதுகில் விழுந்து மறைய எத்தனித்தது. என்னை நோக்கி வந்த இளம் பெண்கள் ராஜஸ்தான் அடர் நிறம் மற்றும் அணிகலன்களில் ஒப்பனையோடு இருந்தனர். என்முன் பாட்டுப்பாடியவாறு ஆடினர். ஒளிப்படமாக என் காமெராவுக்குள் சென்றனர். ..ஒ....... இவர்களுக்கு இந்த மணல்வெளிதான் சொற்பமான காசு கொடுக்கும் பூமி. Silhouette ராஜஸ்தான் இளம் பெண்களின் நடன அசைவுகள், முற்றுமான பாலைக்குன்றுகளில் சிகப்பு ஆதவனில் மறைய எத்தனிக்கும் தருணம், ஒட்டகங்கள் என்னை வேடிக்கை பார்க்க….என் வாழ்நாளில் எஞ்சிய நாட்களில் இதுவும் என்னுள்ளே எஞ்சி நிற்கும் நண்பரேநான் பாக்யவனாகிப்போனேன்.


Saturday, December 6, 2014


பரத்பூர் பறவை சரணாலயம்


சரணாலயத்துக்குள் நான் சுற்றிய சைக்கிள்

Lessor whistling Teal

Nilgai

            1938-ல் இந்தியாவுக்கு வியாபாரியாக வந்த ஆங்கிரலேயன் வைஸ்ராய் லின்லில்த்கோ என்ற கிங்கரன் 12 நவம்பர் அன்று 4273 பறவைகளை சுட்டு மாபெரும் பாவத்தை வாங்கிக்கொண்டான். ஜாலியன்வாலா படுகொலைக்கும் இதற்கும் என்ன வித்தியாசம். இந்த இரத்தப் பீரிட்ட, பறவைக்கதறல் எதிரொலித்த 29 .கி.மீ இடத்தில் நான் இன்று சைக்கிளில் உலவிக் கொண்டு இருக்கிறேன். காலை 07.30-க்கு இன்னும் காற்றில் பனிக் குளர் இருந்தது. தேநீர் மட்டும் எனது அலுவலக ஊழியர் தயாரித்துக் கொடுத்ததை அருந்தியிருந்தேன். மதியம் 12.00 மணி வரை சைக்கிளில் தனியாக நின்று, மிதித்து, தள்ளி, நடந்து உலவினேன்.என்னோடு வந்த ஒரே ஒரு நண்பரும் சைக்கிளில் வேறு மார்க்கத்தில் சுத்திக்கொண்டிருந்தார். பசியிருப்பினும் பறவைகளின் நேசத்தின் மிகை, அதை அசட்டை செய்தது.
அங்கங்கே காய்ந்த மடுக்கள், இடையே அகன்ற கால்வாய், குளம் என வித்தியாச முகம் கொண்டு எனைப்பார்த்த பூமியில் பான்கங்கா, காம்பில் என்ற இரு நதிகள் நீரை ஊட்டுகின்றன. மரங்கள், முட்காடுகள், நீர் நிலை என அப்சரஸ் நாட்டிய மேடை இது. இங்கு மான்கள் வேட்டை, சிறுத்தை வேட்டை நடந்த காட்டுமிராண்டிக்காலமும் உண்டு. ஆங்கிலேயன் துப்பாக்கியோடு இந்தியாவுக்கு வந்ததிலிருந்து, அரக்க குணத்தால் 50 ஆண்டுகள் வேட்டை, சகட்டுமேனிக்கு நடந்துள்ளது. 1902-1965 வரை இந்த Keoladeo bird sanctuary-ல் வாயில்லா ஜீவன்களின் கொலைகள் நடந்தது. 1965-ல் கடைசி சிறுத்தை, பலி கொண்டபிறகு நாகரிகம் தலைதூக்கியது. 1967-ல் வனக்கட்டுப்பாட்டில் வந்தது. 1981-ல் ராம்சர் சைட் பிறகு 1985-ல் World heritage site-ஆனது.
வலசைப்பறவைகள் இந்த வருஷம் நிறைய மழை பெய்ததால் பல்வாறு இடங்களுக்குப் பிரிந்து பறந்துவிட்டன. அதனால் எனக்கு ஏமாற்றமே நிலவியது. 2500 கி.மீ தாண்டி வந்தும் எனதருமைப்பறவைகள் என்னைக்காணாது வேற்று நிலம் போனது. எல்லாமே அறிமுகமான பறவைகள். Blue throat, Scope Owl இரண்டு மட்டுமே எனக்கு புது வரவு. Lessor whistling Teal, Shovellor, White cheeked bulbul மற்றும் Nilgai (மான்இனம்!) கண்ணுக்கு விருந்தளித்தன. கானா கேட் எனும் இடம், சரணாலயப்பகுதி. இது ஆக்ரா--ஜெய்பூர் பிரதானசாலையில் உள்ளது. சரணாலயத்துக்குள் நடக்கலாம். ரூ 40 கொடுத்து சைக்கிளில் அலையலாம். சைக்கிள் ரிக்ஷா, ஒட்டக வண்டி, குதிரை வண்டி என வாடகைக்கு எடுத்து, உள்ளே பறவை கண்காணிப்பு செய்யலாம்.

மற்ற வண்டிகள் பறவைகளை, தொந்தரவுக்கு தள்ளும் என அனுமதி இல்லை. நீறைய வெளிநாட்டினர் வருகை புரிகின்றனர். நுழைவுக்கட்டணம் ரூ 50.  உள்ளே கைடுகள், வாட்ச் டவர், தொந்தரவு ஏற்படுத்தாத கேண்டீன் உள்ளன. கோவையிலிருந்து நேராக ஆக்ரா, அங்கிருந்து பஸ்-சில் பரத்பூர் 61 கி.மீ. சரணாலயம் ஒட்டியே,நிறைய தங்கும் விடுதிகள் உள்ளன. Pelican, Robin, King fisher என்ற பெயர்கள் விடுதிக்கு வைத்து அசத்தியிருக்கிறார்கள். வசதிக்குத் தக்க விடுதி அறைகள் உண்டு. பறவை அன்பர்கள் கண்டிப்பாக கண்டு களிக்க வேண்டிய பறவை சரணாலயம். வாழ்நாளில் இன்னொரு முறை போவேனா என்பது சந்தேகமே……..