Showing posts with label பறவை பாதுகாப்பு. Show all posts
Showing posts with label பறவை பாதுகாப்பு. Show all posts

Monday, January 27, 2014

மாறுபட்ட கோணத்தில்
மயில்                 
Common Peafowl                                                        
(Pavo cristatus)                                                                  
              
சூலூர் அருகாமை ஆச்சான் குளத்தின் ஓரம் நடனம்

தைபூசத்திருநாளுக்கு இறகுகளை உதிர்த்த மயில்

            மயில் தேசியப்பறவை. மயில், ரயில், யானை எப்போதுமே வியப்பையும், மகிழ்வையும் எந்த வயதிலும் கொடுக்கக்கூடியவை. மயில் தோகை விரித்தாடினால் மழை வரும் என்பதெல்லாம் வாய் வழி, செவி வழி உலவும் கதை. ஆண் மயில் கழுத்து நீலநிறமும், பெண்மயில் கழுத்து பச்சை நிறமும் வெல்வட் போல நம்மை மயக்கும். ஆண்மயில் தோகை விரித்தாடும் போது நாம் மட்டும் மயங்குவதில்லை. விரிந்தாடி சிலிர்க்கும் தோகை அழகைப்பார்க்க தோகையற்ற பெண் மயில்கள் சில சுற்றி நின்று வேடிக்கை பார்த்து மயங்கும். நாமோ மயில் தோகைகளை இடுப்பில் ஏந்திக்கொண்டு கைகளால் தோகையைச்சிலிர்த்தாடும் மங்கையை திருவிழாவில் பார்க்க கூடுகிறோம்
                   பறவைகளில் ஆண் பறவைகளே அழகு படைத்தவை. இனிமையாக குரல் கொடுக்கவும் வல்லவை. அவைகள் பெண் பறவைகளைக் கவர இறைவன் கொடுத்தது. பரஸ்பரம் ஆணும்,பெண்ணும் கவரும் உத்திகள் மாநிடருக்கு மட்டும் உரியதல்ல. எல்லா உயிரினங்களுக்கும் இந்த யுக்தியை இறைவன் வைத்துள்ளார். மயில் இந்த கால கட்டத்தில் அதிகமாகிப்போக விவசாயிகள் தங்கள் காய்கறிகள் கொத்தப்படுகின்றன, என தாக்கீது கொடுக்கின்றனர். அவைகளுக்குரியதான அடவிய முட்காடுகள், இலையுதில் காடுகள், ஓடை, ஆறு கொண்ட மலை அடிவாரம் போன்றவற்றில் வாழக்கூடியவை. அவைகளுக்கு விவசாயிகளின் விளை நிலங்களில் உள்ள தக்காளி, கத்தரி, போன்ற காய்கறிகள் அவசியமில்லை. இவை உண்ணுவது பூச்சியினம், பாம்பு, தானியம், தாவரத் தண்டு மட்டுமே. அவைகளுக்குரிய வாழிடங்களைச்சிதைத்ததால் விளைநிலங்களுக்கு வந்து விட்டன. மலை அடிவாரம் வரை ஆக்கரமித்து விளைநிலமாக்குவது, வீட்டுமனைகள் இடுவது, இப்படியே மயில் வாழிடம் போல யானை வாழிடத்தையும் குறுக்கிக்கொண்டே போனால் அவை எங்கு செல்லும்
                    மாநிடருக்கு மட்டும் இந்த புவியுலகு சமைக்கப்படவில்லை. எல்லா உயிர் இனங்களும் சமமாகப்பங்கிட்டு ஒருவருக்கொருவர் இடையூறில்லாமல் வாழ்வது சுவர்க்கம். மனிதன் ஆற்றிவு கொண்டு பேராசைப்படாமல், அனைத்து உயிரினங்களையும் அரவணைத்து மகிழ வேண்டும். எந்த உயிரையும் விஷம் வைத்துக் கொல்வது இரக்கமற்ற தன்மை. இறைவனில் கருணையும், அன்பும் இருப்பதால் தான் நீவர் புவியில் உயிர் தப்பி இருக்கிறீர்கள். இறைவன் போல நீங்களும் இருக்கவேண்டும். மயில் பறப்பது ஒரு விந்தை. இரவில் உயரமான மரத்தில் அமர்ந்து உறங்கும்
            அழகன் முருகனின் வாகனம். இந்த வாகனமான மயில் கார்த்திகை, மார்கழியில் முருகப்பெருமானின் தைப்பூசக்காவடிக்காக தோகைகளை உதிர்த்துவிடும். மார்கழி முடிந்த தை மாதத்தில் பழனிக்கு காவடி எடுக்கும் பக்தர்கள் முட்காடுகளில் உதிர்ந்து கிடக்கும் இறகுகளை சேகரித்து காவடியை அலங்கரிப்பர். நானும் கூட சிறுவயதில் உதிர்ந்த மயில் இறகை பொறுக்கி ஒரு புத்தகத்தில் வைத்து அது குட்டி போடுமா எனக்காத்திருந்த காலமும் உண்டு. அது ஒரு ஆச்சர்யம் குமிழிடும் அழகிய கனா காலம். மயில் எனக்கு எப்போதும் வசிகரிக்கும் தேவதை. உங்களுக்கு அப்படி இல்லையா?

Monday, May 27, 2013

Amur falcon  நாகா! உண்ண உணவா இல்லை ?

அழகுப்பறவை














வலசைப்பாதை
Conservation
Amur Falcon
(Falco amurensis)
செங்கால் லகுடு

          செங்கால் லகுடு வட சீனா, மற்றும் வட கிழக்கு சைபீரியாவில் வாழும் பறவை. பார்க்க புறா போல் உள்ள அழகான பறவை. வாழும் பகுதியில் பனிப்பொழிவு ஆரம்பித்தவுடன் வலசை தொடங்கும். நவம்பர்-டிசம்பர் பொழுது தென்ஆப்ரிக்காவில் இருக்கும். பிறகு மே மாதம் திரும்பு பயணம். வரும் போதும், திரும்பும் போதும் கொஞ்சம் மார்க்கம் மாறுபட்டாலும் இந்தியாவில் நாகாலாந்து, வங்கம், ஒடிசா, மத்யபிரதேசம், குஜராத் வழியாக பறக்கின்றன. 3000 கி.மி கடல் மார்க்கமாகப்பறப்பதாகவும், நீண்ட தொலைதூரம் வலசை போகும் லகுடு இனம் இது தான் என கண்டறியப்பட்டுள்ளது. எங்கும் தங்காமல் மூன்று நாட்கள் கூட பறந்து செல்லும் ஆற்றல் உடையது. இதற்குப்பூச்சிதான் முக்கிய உணவு. இத்தகைய பறவைகளை நாகாலாந்து மக்கள் காட்டுமிராண்டித்தனமாக வேட்டையாடி விற்பது வேதனையை அளிக்கிறது. உண்ண எவ்வளவோ இருக்கும் போது நாகரிகம் வந்தும் மனதளவில் நாகரிகமற்ற இந்த நாகா மக்கள் ஏன் தான் இப்படி இருக்கிறார்கள்? இதற்கு அந்த மாநிலம் செழிப்பு மிக்கது. விளைச்சல் உள்ளது. இவர்கள் இருவாச்சி, செங்கால் லகுடுகளைக்கொன்று தின்றுவிட்டு வீராதி வீரன் போல அவற்றின் இறகுகளை தலையில் சூடிக்கொள்வது இன்னும் நாகரிகமடையாத ஒழுங்கீனத்தைக்காட்டுகிறது. உண்ண எவ்வளவோ கிடைக்கும் போது இந்த கொடூரபுத்தி அவசியமில்லாதது. பட்டினியாகிடக்கிறாய்? வலசை போகும் போதும், திரும்பும் போதும் லட்சத்தில் வலையில் பிடிப்பதும், அதை இறகு உரித்து விற்று பணம் சம்பாதிப்பதும் மனிதன் திருந்தவே மாட்டானா என ஆதங்கம் வருகிறது. பறவைப்பாதுகாப்பு சட்டப்படி அவர்களை தண்டிக்க வேண்டும். ஒருசில பாதுகாப்பு நடவடிக்கைளும் எடுக்கப்பட்டுள்ளது. போதாது. வேட்டை உணர்வை மனிதன் தன்னிலிருந்து முற்றிலுமாக அழிக்கவேண்டும். பறவைகளுக்கு மனிதன் பாதுகாவலனாக இருக்கவேண்டும். வலைப்பூ படங்கள் பிரசுரிக்கப்படுவது மக்கள் மனதில் பரிதாப உணர்வை தட்டி எழுப்பி, மனிதன் குரூர புத்தியை கண்ணாடியில் பார்ப்பது போல பார்த்து, பறவை பாதுகாப்பில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளத்தான்.

# Thank you very much to various web and blog site runners. The stills downloaded from various web sources are used here to involve Blog visitors for conservation of Birds.

Thursday, May 23, 2013




வாரம் ஒரு முறையாவது ஆந்தை நண்பனைக்கல்லுக்குழியில் பார்த்ததால், நானும் கொம்பனும் பழக்கமாகிவிட்டோம். கடைசியாகப்பார்த்தபோது,  எடுத்த புகைப்படம் இது. அப்போது நான் ஆந்தை கண்களில் உணர்ந்தது யாதெனில், 'என்னைக்காப்பாற்றுவாயா?  அல்லால் இதுவே நமது கடைசி சந்திப்பாக இருக்கும் நண்பா!. குட்பை!'



இனி இந்த ஏகாந்த இடம் இல்லை
காப்பாற்றுவாயா?
Conservation
இந்தியப்பெரியகொம்பன் ஆந்தையை விரட்டியடித்த கதை

கொம்பன் ஆந்தை பற்றி ஏற்கனவே நமது மழைகுருவி வலைதளத்தில் அளவளாவி மகிழ்ந்தோம். சூலூர், ஊர்வேலங்காடு அத்துவானமுட்காட்டில் ஒரு ஜோ,டி 2 அடி உயர கொம்பன் ஆந்தைகள் மகிழ்ந்திருப்பதற்கு மனிதன் பங்கம் விளைவித்து விட்டான். அவனைத்தவிர யார் காணுயுர்களுக்கு தொந்தரவு தருவார்? சுயநலக்காரனாயிற்றே! மேலும் பணப்பித்து பிடித்தவனாயிற்றே. பித்து பிடித்தவனிடம் பேசினால் நாம் சொல்வது ஏறாது. ஊர்வேலங்காட்டில் ஒரு கற்குழி, (Ravine) டைனமைட் வைத்து கருங்கல்லுக்காக பூமியைத்தகர்க்க உருவாகிப்போக, அதில் காட்டில் பெய்த மழை தேங்கியது. டைனமைட் ஒலி எங்கள் வீட்டுக்குக்கேட்கும். ‘தொம், தொம்என பூமி உதை வாங்கிக்கொள்ளும். பூமி அடுக்கு சீர்குழைவு, அதை ஒட்டி பூமி அதிர்வு வந்தாலும் பரவாயில்லை, கோடிகோடியாக சம்பாதிக்கணுமே, கருங்கற்கள் வீடுகட்ட வேணுமே, என அடித்த அடியில் வசீகரிக்கும் கற்குழி உருவாகிப்போனது. அடடே! மனைவி, குழந்தைகளோடு அமர்ந்து பேசும் வண்ணம் ஏகாந்த வனப்பில் அந்த இடம் உருவாகிப்போனது. உள்ளிருந்து பேசினால் எதிரொலிக்கும்.
ஏகாந்தம் என்றால் என்ன? ஏகாந்தம் எனில் ஈ, காகா கூட இராது இயற்கையோடு தனித்திருப்பது. மக்கள் குறைந்தபட்சம் ஒரு நாய், அல்லது டிவி அல்லது டெடிபியரோடாவது இருப்பார்கள். தனிமை ஒரு பயம். அவர்கள் மனத்தோடு அவர்கள் இருக்கவே பயம்.
ஆச்சர்யத்திலும் ஆச்சர்யமாக கொம்பன் ஆந்தை வந்து குடியேறியது எனது அதிஷ்டம் என நினைத்தேன். காட்டுத்தண்ணீர், மழை பெய்தால் பெரிய கற்குழியானதால் அதிகம் தேங்கிப்போக கற்குழி முதலாளி டைனமைட் வைத்து அடித்து தூள் பறத்த முடியவில்லை. பம்ப் வைத்து கொஞ்ச நாள் செய்து பார்த்தார். சரிப்பட்டுவரவில்லை. சரி! அந்த கற்குழியை மூடுவிழா செய்தால் அந்த இடத்தை பிளாட் போட்டு விற்றுவிடலாம் என தீர்மானமாகி, இப்போது முத்துக்கவுண்டன்புதூரிலிருக்கும் பவுண்டரியலிருந்துகாஸ்டிங்கழிவுகளை இட்டு நிரப்ப கொஞ்சம் கொஞ்சமாக லாரிகளில் கொண்டுவரப்பட்டு கொட்டப்படுகிறது. இந்த பவுண்டரிக்கழிவுகள் கொட்டப்படும் பேரொலியால் பயந்து அதிர்ந்து போய் கொம்பன் ஆந்தைகள் எத்திசை ஏகியதோ என் வலைதளநண்பர்களே! தெரியலையே!
இந்த காஸ்டிங் கழிவில் வேதியல் சமாச்சாரங்கள் உள்ளன, அதைக்கொண்டு இந்த கற்குழி நிரப்பப்பட்டால்உங்கள் ஆழ்குழாய் கிணற்றுநீர் மாசு அடையும் என அந்தப்பகுதி மக்களுக்கு சொல்லிப்பார்த்தேன். காதில் வாங்கிக்கொள்ளவில்லை. ஆந்தையைப்பற்றிப்பேசினால் ஆச்சர்யமாகக்கேட்கிறார்களே ஒழிய அதைக்காணவோ, அதை பாதுகாக்கவோ மக்களுக்கு ஆர்வமில்லாமல் பணத்தில் மட்டுமே ஆர்வம் காட்டுகிறார்கள். கற்குழி நாளை வீட்டுமனையாகும். அரசுகூட சிங்காநல்லூர் கற்குழி மேல் சிங்கை பேருந்து நிலையமே கட்டிவிட்டதே! குளங்களெல்லாம் பேருந்து டிப்போக்கள், மின்நிலையங்கள் ஆக்கிவிட்ட அரசு எவ்வழியோ மக்களும் அவ்வழியே!

Wednesday, May 15, 2013

பயணம் முடிந்த கதை

Swarm of Passenger Pigeon 
Passenger Pigeon









Nesting
              Migration day   
       
                                
Cemetery
          11.05.2013

Passenger Pigeon (Ectopistes migratorius)

பயணிப்புறாக்கள் மரித்த கதை

நான் பிறப்பதற்கு முன்னமே இந்த பயணிப்புறாக்களை ஒரே அடியாக மனிதன் தின்று தீர்த்து விட்டான். லட்சக்கணக்காக ஒரு பேரலை போல் வலசை போகும் போது சகட்டுமேனிக்கு வேட்டையாடி தின்றும், விற்றும் ஏப்பம் விட்டு விட்டான். செப்-1-1914 மார்த்தி என செல்லப்பெயர் வைத்த கடைசி பயணிப்புறா சின்சினாட்டி மிருகக்காட்சி சாலையில் உயிர் விட்டது. இது வட அமெரிக்கப்பறவை. இது வட அமெரிக்காவின் தென்கிழக்குப்பகுதி முழுதும் வலசையிலேயே இருக்கும். இதன் அபரிமிதமான எண்ணிக்கையாலேயே இதன் சந்ததி சுவடு தெரியாமல் போய்விட்டது. அழகான பறவை. இது ஒரு வலசையின் போது, 1886 –ல் தெற்கு ஒன்டோரியாவை அந்த புறா பெரும் கும்பல்(வெள்ளம்!) கடக்க 14 மணி நேரம் ஆயிற்றாம். 1.5 km அகலம் 500 km நீளம் என்றால் நினைத்துப்பாருங்கள்! அடேங்கப்பா! நமது பேராசை மக்கள் கண்ணைமூடிக்கொண்டு நாட்டுத்துப்பாக்கி, கல், வலை, தடி எனப்பயன்படுத்தி லட்சக்கணக்கில் வீழ்த்தி உள்நாட்டு வியாபாரம், ஏற்றுமதி என்று வியாபார நிறுவனங்கள் அமைத்து இந்த இனத்தையே பூண்டோடு அழித்து விட்டனர். இதன் விஞ்ஞானப்பெயரில் migratorius இருப்பதும், பொதுப்பெயரில் passenger என்று இருப்பதும் இது பயணித்துக்கொண்டே இருக்கும் பறவை என புலப்படுகிறது.
            இது மணிக்கு 100 கிமி வேகத்தில் பறந்து செல்லும். Nomadic. தனக்கு என்று ஒரு இடத்தில் இல்லாது இரவுத்தங்கல், கூடு வைக்கும் இடம், என எதுவும் இடம் மாறிக்கொண்டிருக்கும்.உயர் மரங்களில்ஒன்றின் மேல் ஒன்றாகக்கூட தங்க, சிலசமயம் பெரிய கிளைகூட உடைந்துவிடும். அலகை மார்பில் புதைத்துக்கொண்டு தூங்கும். கால்கள் மறைத்துக்கொள்ளும். ஒரு இரவு தங்கிய மகா கும்பலின் புறாக்களுக்குக்கீழே ஒரு அடிக்கு மேல் அதன் கழிவுகள்(Excreta) குவிந்திருக்கும். இந்தப்புறா 15 வயது வரை வாழும். ஆனால் மார்த்தா இறக்கும் போது 17 இருக்கும். இவை ஆக்ரான், வெள்ளை ஓக்குகளைத்தின்று வடஅமெரிக்காவில் காடுகளைப்பரப்பி இருக்கிறது.இரை தேடி ஒரு நாளைக்கு 160 கிமி கூடப்போகும். Phtilopterid louse, Columbicola extinctus, என்ற இரு பறவைகள் தங்கள் முட்டைகளுக்குகூடு கட்டாமல் பயணிப்புறாவை நம்பியிருக்க, இவைகளும் பயணிப்புறாவோடு அழிந்து பட்டன. அந்தோ!
            வரதட்சனைக்காக 4000 பயணிப்புறாக்கள் கொல்லப்பட்டு அதன் இறகுகளால் ஆன மெத்தை, தலையணை கல்யாணத்தம்பதிக்கு பரிசளிப்பு நடத்தினர். தலைவலி, வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, கண்கோளாறு ஆகியவற்றிற்கு பயணிப்புறாக்களின் குருதியையும், சதையையும் குடித்தும், தின்றும் இருந்த மக்களை என்னவென்பது? அப்போதிருந்த காட்டுமிராண்டித்தனத்தை நினைத்து மிரள வேண்டியுள்ளது. கூடுகளைக்கூட விட்டுவைக்காமல், உயரமான கூடுகளை பெரிய தடி கொண்டு தட்டிக்களைத்தும், மரத்துக்கே தீவைத்தும், மரத்தையே வெட்டியும், அம்பில் எய்தும் கூடுகளிலிருந்து குஞ்சுகளை தீயில் வாட்டித்தின்றிருக்கின்றனர். பொம்மை பயணிப்புறா, கந்தகப்புகை, உப்பு, சாராயம்கலந்த தானியம் என பயணிப்புறாக்களை ஏமாற்றி வதை செய்திருக்கிறார்கள். தாளப்பறக்கும் ஆயிரக்கணக்கான பறவைகளை தடியாலும், கற்களாலும் சம்ஹாரம் செய்திருக்கின்றனர். ஒரு குகை போன்று போகும் வலையில் 3500 பயணிப்புறாக்களைக்கூட பிடித்து விட்ட பராக்கிரமசாலிகள். துப்பாக்கிகள்பேசின. குழிகளில் நிரப்பப்பட்ட தானியம் புறாக்களுக்கு புதைகுழியாகிப்போனது. ஒரு வேட்டைக்காரன் தனது வாழ்நாளில் 3 மில்லியன் புறாக்களை கிழக்கு நாடுகளுக்கு வாணிபம் செய்து பெரும் செல்வந்தர் ஆகிவிட்டானாம். சிறுவர்களுக்கு புறாவேட்டை விளையாட்டும், காசுமாகிப்போனது. ஒரு டஜன் புறா 31to56 சென்ட் விலையானது. வியாபாரம் செழிக்க, பயணப்புறாக்கள் கோடிக்கணக்கில் மரித்தன.வை உலகைவிட்டே மறைந்தொழிந்தன. மனிதனை மாதிரி குரூரம் இவ்வுலகில் வேறு எந்த ஜீவனிலும் இல்லை. பயணிப்புறாவைப்பற்றி எழுதியிருக்கின்றனர். படியுங்கள். இனிமேல் இது தவிர்க்கப்பட வேண்டும் என முடிவெடுங்கள்.

ஜான் ஹெரால்ட் ஒரு பாடலை மார்த்தாவுக்கு சமர்ப்பித்து முராரி பாடியுள்ளார். அதற்கு மார்த்தா-கடைசி பயணிப்புறாக்கள்எனப்பெயர். Lyrics to "Martha (Last of the Passenger Pigeons)"

 TThan *      
 
 
Oh high above the trees and the reeds like rainbows
they landed soft as moon glow
in greens and reds they fluttered past the windows
ah but nobody cared or saw
 
till the hungry came in crowds
with their guns and dozers
and soon the peace was over
God what were they thinking of?
 
   Oh on and on till dreams come true
   you know a piece of us all goes with you
 
Oh the birds went down
they fell and they faded to the dozens
Till in a Cincinnati Zoo was the last one
 
Yes all that remained was the last
with a name of Martha
Very proud, very sad, but very wise
 
Oh as the lines filed by there were few who cared
or could be bothered
how could anyone have treated you harder
and it was all for a dollar or more
 
   Oh on and on till dreams come true
   you know a piece of us all goes with you
 
Oh and surrounded there by some of whom wept around her
in a corner of the cage they found her
she went as soft as she came so shy till the last song
oh the passenger pigeon was gone...


Thanks to those who are provide information to my blog thro' Net. It is not used for any commercial purpose and intention is to induce blog visitors to conserve Birds in near future.

Sunday, August 19, 2012

அன்பின் பகிர்வில் பிற ஜீவன்கள்

எச்சில் பூச்சி (Spit Bug )
புல்வெளிகளில் உலவும் போது சில இடங்களில் புல்லின் மேல் நீங்கள் வெள்ளை நுரைகளைப்பார்த்திருப்பீர்கள். நீங்கள் அதை, யாரோ எச்சில் துப்பிப்போயிருக்கிறார்கள் என்று நினைத்திருப்பீர்கள். ஆனால் நடந்தது வேறு.  புகைப்படத்தில் காணும் எச்சில் பூச்சி தன்னைச்சுற்றி ‘வழுவழு எச்சிலைத்துப்பி(Mucus) உள்ளே சந்தோசமாக அமர்ந்து விடுகிறது. காரணம்;-
(1) வெய்யிலுக்கு குளிர்ச்சியாக இருக்க (2) எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு.

ஆச்சர்யமாக உள்ளதா? இன்னொரு ஆச்சர்யம் என்னவெனில் இதைப்பற்றி ஒரு சித்தர் அந்தக்காலத்திலேயே பாடியுள்ளார். இதோ;-

‘புல்லினுள் இருக்கும்பூச்சி பொருந்த வெண்ணுரையுண்டாக்கி
மெல்லிய தண்ணீர் வீட்டில் வெயிற்படாதிருக்குமாபோல்
சொல்லிலே நாகை நாதர் தோய்ந்திடச்சூட்சங் கண்டாற்
கல்லிலே தெய்வமில்லைக் கருத்திலே தெய்வம் நெஞ்சே.

                                                -கணபதி தாசர்
                                            நெஞ்சறி விளக்கம்

Saturday, August 18, 2012

பறவை மீட்பு




முக்குளிப்பான் மிட்பு   Little Crebe (Tachybaptus ruficollis)

ஒரு காலைப் பொழுது பறவை நோக்கலுக்கு போனபோது ஏரி மேட்டில் ஒரு எட்டு வயது சிறுவனும், சிறுமியும் நின்றிருந்தனர் சிறுவன் பெயர் மணி கண்டன் என அவனைவிட்டுப் பிரியும் போது தெரிந்து கொண்டேன். அவன் ஒரு திசையை நோக்கி சிறுகற்களை ஏரி மேட்டில் பொறுக்கிப்பொறுக்கி வீசிக்கொண்டிருந்தான். அவன் வீசிய திசையைப் பார்த்தால், அங்கு ஒரு முக்குளிப்பான் மிதந்து கொண்டிருந்தது.

‘டேய்! ஏண்டா! கல் வீசறே? பறவைக்கு காயம் ஆயிடுமே!

‘அது வலைல மாட்டிருச்சு, தப்பிக்க கல் வீசறே.

‘வலைல மாட்டின பிறகு கல் வீசனா தப்பிக்குமா? பரிசல்ல மீன் பிடிக்கறவங்க இருக்காங்களா?

‘எங்க மாமா இப்படிப்போயிருக்காரு, வருவாரு.ஏரிமேட்டின் மேற்ப்பகுதியைக்காட்டினான.

மீனகளைப்பிடிக்க வேலி போட்டமாதிரி 4 அடி ஆழத்துக்கு நீருக்குள் வலையிருக்கும். வலை குளப்பரப்பில் தெரியவும் மிதக்கவும்  வெள்ளைத்தெர்மக்கோல் துண்டங்களை மிதக்க விடுவர். அந்த நாடகளில் படகு அல்லது பரிசலில் சென்று வலையை வீசி மீன் பிடிப்பர். தற்போது வேலி வலை ஓரமாக பரிசலில் சென்று வலையைத்தூக்கி சிக்கியிருக்கும மீனகளை ஒவ்வொன்றாகப்பிடித்து பரிசலில் போடுவர்.

முக்குளிப்பான் தன்னை விடுவிக்க முயறசி பண்ணிக்கொண்டிருந்தது. நீருக்குள் மூழகியும் மேலே வந்தும் முயறசிக்க, வலையில் மேலும் அதிகமாக மாட்டிக்கொண்டது.

நாற்பது வயதினரான பரிசல்காரர் வந்தார். விபரிதம் என்னவென்று சொன்னேன். அவர் பெயர் செந்தில்.

காலை 07.30 இருக்கும். இளம் சூரியன் வந்து விட்ட வேளை தான். பரிசலில் ஏறிக்கொண்டோம். நீரில் சின்னத் துடுப்பை வலித்துக்கொண்டு, பறவை சிக்குண்ட திசை நோக்கி பரிசலை நீரில் நகர்த்திச்சென்றார். வலையில் சிக்குண்ட முக்குளிப்பானை சமீபித்தோம. பரிசலோட்டி கீழே குனிந்து, பறவையை இடது கையிலெடுத்து வலது கை விரல்களால் நைலான் வலைச்சிக்குகளை பொறுமையாக எடுத்தார்.  எடுத்ததும், நான் பறவையை வாங்கிக்கொண்டேன். பரிசலை கரையை நோக்கிச்செலுத்தினார்.

மணிகண்டனும், அவனது தங்கையும் ஆவலுடன கரையில் நின்று கொண்டிருந்தனர். பரிசல் கரையைத்தொட்டதும, எல்லோர்முகத்திலும் குதூகலம். நான பரிசலிலிருந்து இறஙகினேன். பரிசல்காரர் மீண்டும மீன பிடிக்கச்செல்ல எத்தனித்தபோது அவரிடம சொன்னேன;-

‘வலையில் சிலசமயம் பறவைகள் இப்படி மாட்டும். இதை சாப்பிட்டு என்ன ஆகப்போகுது? உண்ண எவ்வளவோ இருக்கு. நீங்க இந்த குளத்துக்கு தலைவனா இருந்து பறவைகளைக்காப்பாத்தணும்.

அவரும் ஆமோதித்தார்.

மணிகண்டன, நான் தான் பறவையைத்தண்ணில விடுவேன்.’ எனச்சொல்ல நான் முக்குளிப்பானை அவனது கைகளில் தந்தேன். அதை சுதந்திரப்பறவையாக நீரில் விடும்போது, அது ‘தட தட வென நீரப்பரப்பில் ரெயில் விடும் என நினைத்தால், ‘குபுக் கென நீரில் மூழ்கிப்பாய்ந்தது. சிறு நீர் வட்டங்கள உருவாகிப்பெரிதாகி மறைந்தன.

‘அடே! அடே! நன்றி கூட சொல்லாமல போயிற்றே! என நான் சொல்ல யாவரும் சிரித்தனர்.
    

Friday, August 17, 2012

சிட்டுக்குருவி தப்பியது  
House Sparrow (Passer domesticus)

அந்த நாள் மவுனவிரதம். மாடி 'சிட்அவுட்'டில் நின்றிருந்தேன். மணி இரண்டிருக்கும். பசியோடு இருந்தேன். முயல் பிடிப்பவன் தெருவில் முதுகுத்தூளியில் தொங்கவிட்ட குழந்தையோடு வந்தான். கையில் உண்டிவில். வீட்டிற்கு எதிரே உள்ள வேப்பமரத்தில் ஒரு குருவி உட்கார்ந்திருந்தது. குருவியை குறி வைத்தான்.மவுனத்தில் இருந்ததால் என்ன செய்வதென்று தெரியவில்லை. கை தட்டினேன். ‘குருவி என்றான்.நான் ‘வேண்டாம் எனக்கையாட்டினேன். அவன் வெறுப்போடு போனான். குருவி தப்பியது. இரண்டு நிமிடம் கழித்து எனக்கு உறைத்தது. அவனுக்கும், அவனது குழந்தைக்கும் பசி, எனக்கும் பசி. பசி யாவருக்கும் ஒன்று தான். முயல் பிடிப்பவனுக்கு பத்து ரூபாயாவது கொடுத்திருக்கலாம். அதற்குள் தெருமுனைக்குப்போய்விட்டான். மீண்டும் கைதட்டினேன். அவன் திரும்பி வந்தான். அவனிடம் பத்து ரூபாய் கொடுக்க, அவன் அதை குழந்தையிடம் கொடுத்து மகிழ்ந்தான்.எனக்கும் குருவி தப்பியதில் மகிழ்ச்சி.

Thursday, August 16, 2012

அறிமுகம்........


எதற்கு இந்த மழை குருவி வலைத்தளம்?

பறவைக்கென்றே இந்த வலைத்தளம் சிறகு விரிக்கிறது. இதில் விதவிதமான வண்ணதேவதைகள் இறக்கைகளை விரிக்க உள்ளன. நீங்களும் மனம் லேசாகி இறகுகளாக மிதந்து செல்லலாம். இதில் பறவை நிழற்படங்கள், பறவை பாதுகாப்பு, பறவை நோக்குதல், வனவலம், காணாமல் போகும் பறவைகள், சுற்றுச்சூழல், இயற்கை, காணுயிர் நூல்கள், வண்ணத்துப்பூச்சி போல பிற உயிரினம், கவிதைகள் எனப்பறவைகளை மையமாக வைத்து வட்டமிடும் நினைவுகளையும், அனுபவங்களையும் பகிர்ந்து கொள்கிறேன் வாருங்கள், பறவைகளோடு சேர்ந்து பறப்போம்.

என்னைப்பற்றி

எனக்கு அப்பா வைத்த பெயர் சுகுமார். புனைப் பெயர் சின்னசாத்தன். மத்திய கலால் மற்றும் சுங்கத்துறையில் கண்காணிப்பாளராகயிருந்து ஓய்வு பெற்றபின்பு எனது பறவை நேசத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். வனவலம், இமயவலம், மரமும் நானும், Diary on the nesting behavior of Indian Birds என்ற நுல்களில் ஏற்கனவே உங்களுக்கு அறிமுகமாகியுள்ளேன். நீங்களும் பறவைகளைப்பற்றி எனது இ-மெயிலுக்குசெய்தி அனுப்பினால் இந்த வலைதளத்தில் பறவை அன்பர்களோடு பகிர்ந்து கொள்வேன். இந்தக்கால சந்ததியினர் நூல் வாசிப்பு சுவையைத் தவறவிட்டவர்கள். இந்த வலைதளம் வாசிப்பை மீண்டும் உயிர்ப்பிக்கும். உங்களுடன் எனது தோழமை தொடர கை குலுக்குகிறேன்,வாருங்கள்என்னுடன்சிறகைவிரியுங்கள்.