Showing posts with label இலக்கியப்பறவை. Show all posts
Showing posts with label இலக்கியப்பறவை. Show all posts

Monday, March 21, 2016


வாய்க்கால் குளியல்





            கால்வாய் நீரோடு அகலமாகப்போகும். வாய்க்கால் அதைக்காட்டிலும் குருகலாகப் போகும் எந்நேரமும் அழுப்பு சளிப்பற்று  சலசலவென ஓசை எழுப்பி வேகமாக நகர்ந்து கொண்டே இருக்கும் வாய்க்கால் பார்த்த வசீகரத்தில் நான் தினமும் பல மணி நேரம் அதோடு பிரியாமல் இருந்தேன். சிமெண்ட்டும், கற்களாலும் கட்டப்பட்டு ஒரே நேர்கோடாக நீரைப் வழிந்தோடச்செய்வது மனிதனின் கால்வாய் மற்றும் வாயக்கால். இதன் போக்கை மனிதன் நிர்ணயிப்பான். ஆறோ அதன் போக்கை அதுவே நிர்ணயித்துக்கொள்ளும். அகலத்தில் மாறுபட்டு பள்ளம் கண்ட இடம் நோக்கிப்போகும். பொள்ளாச்சி, பணிக்கம்பட்டி கிராமத்தில் மனிதன் ஓடவிட்டிருக்கும் சிமெண்ட் வாய்க்காலில் இவன் தினமும் இரு வேளை இறங்கி ஆலிங்கணம் செய்வான். அதிகாலை ஆறு மணிக்கு விடிய எத்தனிக்கும் போதும், பகல் போது முடியும் தருவாயிலும் தண்ணீரின் வருடலில் இருப்பான். பனை மரங்களும், பனை பட்சிகளும் இவனை வேடிக்கை பார்க்கும். நீரின் வேகமும், அதன் நிறமற்ற நிறமும், ஒளியற்ற ஒளியும், ஒலியற்ற ஒலியும், இதமும், தணிப்பும் நீர் ஒரு விசித்திரமான கலவை. மேனியில் ஒட்டியும் ஒட்டாமல் ஈரமாக்கி செல்லும் பாங்கு அருமை. நீர் தேகத்தினைக் குளிர்வித்து, இருக்கும் அலுப்பை துடைத்து எடுத்து, மேனியை மசாஜ் செய்து புத்துணர்ச்சி ஏற்படுத்தி விட்டு, நன்றி சொல்வதற்குள் நலுவி விடும் பாங்கு என்னவென்று சொல்வேன். என் தாய் மேனி பிடித்து குளியலிட்டது போல இருக்கும். நீர் விசித்திரமானது. எந்த சோதனைச்சாலையிலும் புறப்படாத உயிரின் ஜுவிதம். அனைத்து உயிர்களின் இரத்தம். தினமும் வாய்கால் நீரைப்பார்த்தே நான்கு மணி நேரம் கழித்திருந்தான் இந்த சின்ன சாத்தன். கால்வாயில் கதிரவன் உதயம் பார்த்தான். கால் ஒட்டிய மண் ஒத்தையடிப்பாதையில் வாய்க்காலோடு இணைந்து   சில போது நடந்தான். சில போது சைக்கிளில் ஆதவனை நோக்கிச்சென்றான். வாய்க்கால் இவனுக்கு எதிர் திசையில் வேகமெடுத்து ஓடியது. கிரணங்கள் நழுவும் நீரில் சிகப்பு நிறத்தில் ஜாலமிட, சற்றே நகர்ந்தால், தங்க நிறப்பொடிகள் மிதந்து போவதைக்கண்டான். எத்தனை ஜிவனுக்கு உயிர் கொடுத்து எந்த எதிர்பார்ப்புமற்று நாள் முழுக்க நோகாமல் ஓடுவது வியப்பளிக்கிறது. ஆடைகளை அவசரமாக களைந்து விட்டு நீரைப்பார்த்து ஆனந்தபட்டு ஓடுவது, எப்படியுள்ளது எனில், ரொம்ப நாள் பார்க்காத, தன் குழந்தையை தகப்பன் அணைக்கத் தவிப்பும், தாயும், மகனும் பிரிந்திருந்த காலம் நெடிது கழிந்து, தாய் மடியில் முகம் புதைக்க ஓடிய சிறுவன் தவிப்பும் தினமும் பூபாள நேரத்திலும், மாலை சந்தியா காலத்திலும் இவனுக்கு இருந்தது. H2 O என விஞ்ஞானி சொன்னாலும் இவனுக்கு என்னவோ பிறவிதோறும் இந்த நீர் தாயாக இருந்தது.

Tuesday, July 22, 2014

சங்க இலக்கியத்தில் 
சுவையூட்டும்
பறவை கவிதை

புனல்ஆடு மகளிர் இட்ட பொலங்குழை
இரைதேர் மணிச்சிரல் இரைசெத்து எறிந்தென
புள்ஆர் பெண்ணைப் புலம்புமடற் செல்லாது____-பெரும்பாண்ஆற்றுப்படை (312-314)

            சங்க காலத்தில் சிறுகுழையெனும் காதணிகள் மகளிர் அணிந்திருந்தனர். துவக்க காலத்தில் இயற்கையில் கிடைத்த தாவரங்களையும், செடிகொடிகளையும், மலர்களையும் ஆபரணங்களாக அணிந்தனர். காதில் தளிரை அணிந்தனர். அதனைக் குழை என்றனர். காதில் பூ இதழ்களை அணிந்தனர். விதைகளைப் போன்ற பொருள்களைக் காதில் அணிந்தனர். பூ இதழ்கள் தோடு என்றனர். விதைகளை காழ், மணி மற்றும் மேகலை என்றும் அழைத்தனர்.
            மேலே குறிப்பிடும் மூன்று வரிச்செய்யுளைப் படித்தீர்களா? அருவிநீரில் குளிப்பதற்கு முன்பு, மகளிர் தங்கள் காதுகளிலிருந்த குழையினை கழற்றி கரையில் வைத்துவிட்டு குளிர்ந்த நீரில் குளித்துக்கொண்டிருந்த போது சிறு நீல மீன்கொத்தி அந்தகுழையை மீன் என நினைத்து அலகில் கவ்விப் பறந்து விட்டதாம். ஆக அந்தக்காலத்தில் மகளிர் குழை அணிந்திருந்ததையும், அதுவும் மீன் வடிவிலான குழை அணிந்திருந்ததையும் சங்கப்பாடல் மூலமாக அறிய முடிகிறது.
            சிரல் எனில் சிறு மீன்கொத்திப்பறவை. அதுவும் சிறுநீலமீன்கொத்திப்பறவை(Small Blue Kingfisher)யாயிருக்கும்.சங்க காலத்தில் அதாவது கி.பி 100- 700 லேயே மீன்கொத்திப்பறவையைப்பற்றி அறிந்து வைத்திருந்திருக்கின்றனர் என்பது அறியமுடிகிறது. இந்த சங்கப்பாடல் நமக்கு பண்டைய நாகரிகம், பறவை பற்றியதை பதிவு செய்துள்ளது நமக்கு 21-ம் நூற்றாண்டில் காணக் கிடைக்கிறது. பதிவு செய்வது என்பது எழுதி வைக்க வேண்டும். அதைப்படித்து பின்வரும் சந்ததியினர்அறிய வேண்டும். தற்போதைய கால கட்டத்தில் இலக்கியம் படைப்பதுவும், அதைப்படிப்பதுவும் சொற்பமாக உள்ளது.அதை மீட்டு எடுக்கவேண்டும் யுவன், யுவதிகளே……..உங்களைத்தான்……




Wednesday, April 23, 2014

சோளக்கதிரில் ஊஞ்சலாடும் பச்சைக்கிளி
பச்சைக்கிளிகள்

கதிரவன் கிரணங்கள் தடவும் இறகுகள்

பச்சைக்கிளிகள்
            பச்சைக்கிளிகளைப்பற்றி நிறைய பாடல்கள் சங்கஇலக்கியங்களில் வருகின்றன. முக்கியமாக தினைப்புலத்தில் பச்சைக்கிளிகளை விரட்ட பரண் அமைத்து, மகளிர் கிளிகளை விரட்டுவது பற்றி செய்யுட்கள் வருகின்றன. தானியங்களை விரும்பி உண்ணும் கிளிகள் அதன் அலகு அமைப்பினால் பாதிக்கு மேல் வீணாக்குகின்றன. க்கீ….கீக்கீ… என கத்திக்கொண்டு கல்யாணத்துக்கு தாமதமானது போல துரித கதியில் பறப்பது எப்போதும் வாடிக்கை. பச்சைக்கிளி நிறம் என்றாலே தனித்து நிற்கும் நிறம். இளம் பெண்ணை பச்சைக்கிளிக்கு ஒப்பிடுவது கிளியின் அழகை சிலாகிக்கத்தான்.
            நான் நகரத்தில் வாழ்ந்தவனாதலால் தானிய விளைநிலங்களை அதிகமாகப் பார்க்க வாய்ப்பில்லாமல் போனது. அதற்கு இப்போது வாய்த்தது குறித்து நெஞ்சம் விம்மித்தணிகிறது.சூலூரின் ஊருக்குள்ளேயே ஒரு சோளக்காடு வைத்திருந்த விவசாயியை வாழ்த்தி விட்டு, புகைப்படம் எடுப்பதற்காக நாள் தவறாமல் காலை நேரம் சூர்ய கதிர்கள் வெளிச்சம் பெற்ற பிறகு செல்வேன். 1999-ல் பேராசிரியர் க. ரத்னம் எனக்கு கிடைக்கப்பெற பறவை நோக்கலில் என்னைப்புகுத்தினேன். அதிலிருந்து கிளி என்னிடம் சரியாக மாட்டவில்லை. அதாவது ஒரே ஒரு படம் சிங்காநல்லூர் குளத்தின் இரண்டாவது ஏரி மேட்டில் ரயில் தண்டவாளமருகில் கிடைத்தது. கிளி வெட்கப்பட்டு பறந்து விடும்.
            வினாயகர் கோயிலருகே கம்பி வேலிக்கருகில் இரண்டு அரளிப்பூச்செடிகள் என்னை மறைக்க, அதன் பின்புறம் நின்று கொண்டு தினமும் ஐம்பது படங்களாவது எடுத்தேன். மணி எட்டு தாண்டும் வெய்யிலில் புருவத்திலிருந்து வியர்வை கண்களில் வழிந்து கண்கள் ‘மச மச’ வென ஆகும். முதுகு சட்டை வியர்வையில் ஒட்டும். சோளக்கதிர்கள் பத்தடி உயரத்தில் நிற்க கிளிகள் வெறித்தனமாகப்பாய்ந்து வந்து விழுவதும், இறகுகள் விரித்த படி சோளக்கதிர்களைத்தேடுவதும், மையணிந்த பெண் கண்சிமிட்டுவது போல இருக்கும். அப்படி பத்து, இருபது பெண்கள் தங்கள் மையுண்டஇமைகளைத் திறந்து மூடினால் எப்படியிருக்கும், அப்படிப்பட்ட வசிகர, ரம்மியமிருந்தது.
            மயிலுக்கு அடுத்தபடி, கிளி இறகு விரிப்பு அற்புதம். க்கி…கீக்.. க்கீக்…உன்னைப்பற்றி பாடாத கவிஞர் யார்? நானும் உனக்கு ஒரு பாடல் தருவேன். கேட்பாயா? மூன்று முறை படமெடுக்கத் தவறவிட்டேன். அது சோளக்கதிரில், சின்னக்கதிராகப்பறித்துவிட்ட குதூகலத்தில் கிளி தன் அலகில் பிடித்துக்கொண்டு பறக்கும் பாருங்கள்…..அதற்கு வார்த்தைகளில்லை. சிலசமயம் மற்றொரு கிளி இதனைப்பிடுங்க துரத்தும்.
இயற்கைக்காட்சிகள் எப்போதும் பேரானந்தம். பச்சைக்கிளிகள் சோளத்தாள்களுக்கு படை எடுத்தது போல புகுந்து சோளக்கதிர்களை அலகு கொள்ளாத படி கடித்து சுவைப்பது பேரழுகு! சோளத்தட்டை கிளியின் எடை கூடத்தாங்காது சாய்வதும் மேலும் கீழுமாய்ப்போவதும் கிளிப்பச்சை சேலை உடுத்திய பெண் ஊஞ்லில் ஆடுவது போலிருந்து என்னைச்சொக்கியது.கதிர்களின் பச்சைக்கும், கிளிப்பச்சைக்கும் வித்தியாசம் தெரியாது. க்கிளிக்…..கிளிக்…'கிளி'க்காக 'கிளிக்'கிய படங்கள் இருநூறு இருக்கும். வலது கை ‘கிளிக்’கியதில் வலித்தது. ஒரு சேர சோளக் கொல்லைக்குப்பறந்து வரும், ஒரு சேர பறந்து அருகிலுள்ள வேப்ப மரத்துக்குப் பறக்கும் குழந்தைத்தனம் சுவையானது. காலைக்கதிரவன் கிரணங்கள் வருடிக்காட்டிய கிளிகளின் இறக்கை விரிப்பிலிருந்த அந்த மயக்கு பச்சை என்னை மயக்கியதை என்னென்று சொல்வேன் தோழி?

மெலிதான காடு, விளைநிலம், பழத்தோட்டம்
தேடிப்போனேன் அவளைக் காண
உயர்ந்த மரத்துளைகளில் கண்மேய
கிளிப்பச்சை சேலையடுத்தி-அதோ
தோழிகளோடு சப்தமிட்டு வந்தவளே
சிகப்பு ஆரம் கழுத்தில் காணேன்
காதலன் கழுத்திலதைக் கண்டேன்
கீக்கீஒலி உன்னிருப்பிடம் உணர்த்தியது
பறந்தாலும், அமர்ந்தாலும் கூவல்.
குஞ்சுகளைத்திருடி விற்பான் மனிதன்
எதையும் காசாக்கிடும் தந்திரம்
அழகு மாளிகையில் தங்கச்சிறை
கபட சமுதாயம் மகிழ சோதிடம்
பொம்மை பீரங்கி இயக்கி வித்தை
பசப்புக்காரன் மொழி பழகிய விந்தை
பச்சை அழகியை சிறையிடலாமா
அதற்கு சிறகேன் முளைத்தது
 வானில் பறந்து உலவத்தானே
அவை சுதந்திரக்காற்று சுவாசிக்கட்டும்
க்கீகீ..யென நெஞ்சம் வருடிப்பறக்கட்டும்.
                          சின்ன சாத்தன்- மாரிக்குருவி கவிதைத்தொகுப்பிலிருந்து...........


Tuesday, September 18, 2012

இலக்கியப்பறவை


தேவாரத்தில் செங்கால் நாரை
Painted Stork
(Mycteria leucocephala)

தினைத்தாள் அன்ன செங்கால் நாரை
                சேருந் திருவாரூர்ப்
புனத்தார் கொன்றைப் பொன்போல்
     மாலைப்புரிபுன் சடையீரே   -சுந்தரர், ஏழாம் திருமுறை

செங்கால் நாரை (Painted Stork) சங்க காலத்திலேயே தொலைநோக்கி இல்லாமல் பார்த்து, ரசித்து, பக்தி மற்றும் சங்க இலக்கியங்களில் நமது புலவர்கள் பாடியுள்ளனர். சுந்தரமூர்த்திசுவாமிகள் 9-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். திருவாரூர் பதிகத்தில் செங்கால் நாரையைப்பதிவு செய்துள்ளார்.

இந்தப்பறவைகள் உணவைத்தேடி உள்வலசை போகும். தமிழ் நாளிதழ்கள் இப்பறவையை வெளிநாட்டுப்பறவையென எழுதுவதை திருத்திக்கொள்ளவேண்டும்.
    இப்பறவைகளை நீர்நிலைகளில் காணலாம். இதன் உணவு மீன், நண்டு,தவளை,புழுப்பூச்சிகள் ஆகும்இதற்கு வேறு பெயர்களும் உண்டு. அவைகளாவன;- செவ்வரி நாரை, மஞ்சள்மூக்கு நாரை. பதிகத்தின் பொருள்;- தினைத்தாள் போல மெல்லிய நீண்ட கால்களை உடைய செங்கால் நாரைகள் பறந்து போய் திருவாரூரை விரும்பிச்சேரும். திருவாரூரில் பொன்நிறக்கொன்றை மாலையை தன் சடையில் சூடிய சிவபெருமான் வீற்றிருக்கிறார்.