Showing posts with label பறவைகள் அறிமுகம். Show all posts
Showing posts with label பறவைகள் அறிமுகம். Show all posts

Thursday, August 13, 2015

தொங்கநாதன்…..3





             அதிகாலையில் எழுந்ததும் அலைபேசியைப்பார்த்தபோது மணி 05.30. செலக்கரிச்சல் பழனிக்கவுண்டர் சொல்வது போல மொகுல் (கருப்பு மேகம்) வானத்தை அடைத்திருந்தது. சில சமயம் மழைத்தூறல் போட்டது. தெருக்கடையில், காய்கறி ரசம் சூடாக அருந்தி விட்டு ஸ்கூட்டரில் பறந்தேன். செலக்கரிச்சல் இதோ பார் எனத்தெரிய, நிறைய கருப்புக்கிரீட வானம்பாடிக்குருவிகள் உயரே சிறிது தாழ்ந்தும் எழுந்தும் பறந்ததை வைத்தே கண்டுபிடித்து ஆனந்தப்பட்டேன். குளிரில் நெருக்கியடித்து, காதல் ஜோடி போல கொண்டைக்கருவிகள் மின் கம்பியில் அமர்ந்திருந்தைப்பார்த்து பொறாமையாக இருந்தது.பழனிக்கவுண்டருக்கு 86 வயது.மனைவியை இழந்தவர். அவர் ஓட்டு வீட்டின் முன்பு நின்று கைவைத்த பனியன், வேட்டியில் இருந்தவரை வண்டியில் ஏற்றிக்கொண்டு, புளிய மரத்துப்பாளையம் பாதையில் போனேன். சோளத்தட்டுகள் அறுக்கப்பட்டு கூம்புகள் போட்டு விட்டனர். கிணற்றில் எட்டிப்பார்த்தால், பத்து கூடுகளும் தொங்கநாதன் சுவடே இல்லாமல் காற்றில் தொங்கிக்கொண்டிருந்தன. புள்ளிஆந்தை மட்டும் கிணற்று பொந்துக்குள் இருந்து உற்றுப்பார்த்தது. மயில் கூட்டைத்தேடி ஒற்றையடிப்பாதையில் வண்டியை உருட்டினேன். ஒரே ஒரு வெள்ளை முட்டை புதருக்குள் பத்து நாட்களாக இருப்பது வியப்பாக இருந்தது. ஏன்? பிற்பாடு 7 (அ) 8 முட்டைகள் வைக்கவில்லை!. ஏமாற்றமாய்திரும்பி சுல்தான் பேட்டை பாதையில் சறுக்கிப்போனேன். அங்கும் ஏமாற்றம். தொங்கநாதன்கள் தென்மேற்குப்பருவ மழைப்பருவ காலத்தில் இனப்பெருக்கம் செய்தால் அதற்கு சோளமும், நிறைய பூச்சிகளும் கிடைக்கும் என்பது அவற்றிற்கு தெரிகிறது.  ஆனால் இந்த மாநிடனுக்கு தெரிவதில்லை. அவன் அறிவிளியாய் இருப்பது எனக்கு வெறுப்பைத்தருகிறது. ‘சும்மா இருந்தவன் பெண்டாட்டி தலையைச்செரைத்தான்’ என்ற பழமொழிக்கு ஏற்ப அந்த தோப்புக்காரன் கிணற்றுக்குள் சீனிப்புளி மரச்சிமிறுகளில் தொங்கிக்கொண்டிருந்த தூக்கணாங்குருவிக்கூடுகளை அறுத்து யாவற்றையும் கிணற்று மேட்டில் போட்டிருந்தான். அவைகளில் குஞ்சுகள் இருந்தனவா? இனப்பெருக்கம் முடிந்து விட்டதா? என அந்த மடையனுக்குத்தெரிந்திருந்ததா? அந்தக்கூடுகளால் ஒரு பாதமும் அவனுக்கு இல்லை. அப்படியிருக்க அதையேன் செய்தான்? ஓ! மனிதா! அப்படியே விட்டிருந்தால், அதில் சிட்டுக்குருவிகள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும். வெண்கழுத்து தினைக்குருவிகள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும். அவை இரவில் தங்கும். இவன் ஏன் இப்படி உயிரினத்துக்கு பாதகம் செய்து திரிகிறான். பூமி இவனுக்கு மட்டுமே சொந்தம் என நினைத்துக்கொண்டிருக்கிறானா? இந்த மாதிரி பாதகர்களை எப்படித்திருத்துவது? அங்கு உலவி வந்த சிட்டுக்குருவி, வெண்கழுத்து தினைக்குருவி, கருந்தலை தினைக்குருவி, சிலம்பன், புதர் சிட்டு, மைனா, பஞ்சுருட்டான் என்பன அன்று இல்லை. அந்த சுவர்க்கம் அந்த தோப்புக்காரனால் நரகமாக்கப்பட்டிருந்தது. இருந்த ஒன்றிரண்டு சிட்டுக்குருவிகள் பாவமாக மின் ஒயரில் அமர்ந்து இருந்தன. என் செய்வேன் கடவுளே!

Tuesday, July 28, 2015


தொங்கநாதன்……..2

காய்ந்த குளத்து கருவேல மரத்தில் தொங்கும் ஒற்றைக்கூடு


                தொங்கநாதன் எனும் தூக்கணாங்குருவி கருவேல மரம் அடர்ந்த காய்ந்து போன குளத்தில் உள்ள நான்கு மரங்களில் தொங்கநாதன் கூடு தொங்க விட்டுருந்தது. ஆனால் ஒன்றே ஒன்று மட்டும் அதுவும் முழுமையடையாமல் இருந்தன. பத்தடி உயரத்தில் மரத்துக்கு ஒன்றாகத்தொங்கின.இது எனக்கு பேராச்சர்யமாக இருந்தது. இது வரை நான் கண்டது கூடுகள் நீரோடும் ஆற்றுக்கு மேல் அல்லது கிணற்றுக்கு நடுவில் தொங்கிக்கொண்டிருக்கும். வேம்பு, அத்தி, சீனிப்புளி போன்ற கரையிலுள்ள மரங்களில் இருந்து யாரும் தொடமுடியாத நிலையில் நீருக்கு மேல் தொங்கிக்கொண்டிருக்கும். வரண்ட குளத்தில் கருவேலமரத்தில் ஒற்றை அரைகுறை கூடுகளைப்பார்த்த போது இது புது கண்டுபிடிப்பு தாம் என எனக்குள் சொல்லிக்கொண்டேன். இது வரை பதிவாகாத செய்தி. ஒருவேளை கிணற்றின் நடுவில் கட்டுவதற்கு முன் இந்த மாதிரி இடத்தில் கட்டிப்பழகுவதாகக்கூட இருக்கலாம். வெண்தொண்டை தினைக்குருவி தொங்கநாதன் குஞ்சு பொரித்து விட்ட கூடுகளை தன் இனப்பெருக்கத்துக்கு உபயோகிப்பது பற்றி டாக்டர் சலீம் அலி பதிவு செய்திருக்கிறார். அத்தோடு எனது Diary on the nesting behavior of Indian Birds நூலில் சிட்டுக்குருவியும் இந்த தினைக்குருவி போல எல்லாம் முடிந்து போன வெற்றுக்கூட்டை தன் இனப்பெருக்கத்துக்கு பயன் படுத்துவதை பதிவு செய்துள்ளோம். இப்போது மேலும் ஒரு செய்தி என்னவெனில், வெண்தொண்டை தினைக்குருவி முட்டைகளுக்கு மெத்தை வைக்க உதிர்ந்த இறகை தனது வாயில் கவ்விச்சென்றதை கண்ணுற்றேன். தினைக்குருவிகள் மற்றும் சிட்டுக்குருவிகள் கூட்டை கைப்பற்ற வரும் போது தொங்கநாதன் அவைகளைத்துரத்தி அடிக்கின்றன. அணில் கூடுகளுக்குப்பக்கம் சுற்றுவது முட்டை, குஞ்சுகளை கைப்பற்றத்தான் என்பது தெளிவு. தொங்கநாதன் தானியங்களையும், பூச்சிகளையும் தன் குஞ்சுகளுக்கு ஊட்டுவது அதன் அலகில் சிக்குண்டு இருப்பதை வைத்து பதிவு செய்ய முடிகிறது. தினைக்கருவிகள் பல கூட்டில் குடியேறுவதற்கு முன்பு அதை சுற்றி பார்வையிடுகின்றன. ஒன்றிரண்டு கூடுகள் இரட்டையாக பின்னப்பட்டு ஒன்றிலிருந்து இன்னொன்று தொங்குகிறது.சாதாரணமாக ஒன்னரையடியாக இருந்தால் இந்தக்கூடு மூன்றடியாக உள்ளது. அருகிலிருக்கும் தென்னை மரத்தின் ஓலை, சோளத்தட்டின் ஓலை என இவற்றை அலகில் பூக்கட்டக்கிழிக்கும் நாறு போல கிழித்து அலகில் கூட்டைப்பின்னலிட்டு நெய்வது கண்கொள்ளாத காட்சி.கூட்டின் அருகில் கருந்தலை தினைக்குருவிகளைக்கண்டேன். சிட்டுக்குருவி. மைனா கிணற்றுக்குள் போய், வந்து கொண்டிருக்கிறது. அது கிணற்றுச்சுவர் பிளவுகளில் முட்டை வைக்கும். அது கண்ணில் பட வில்லை. அமைதியான கிராமத்து 86 வயது பழனிக்கவுண்டர் மனைவியை இழந்தவர், எனக்காக கூட்டை நான்கு கிணறுகளில் கண்டு பிடித்துக்கொடுத்தது என்னை நெகிழ வைத்தது. பழைய துறுப்பிடித்த சைக்கிளில் காற்றுடன் போராடி பெடலை அமுக்கி தெற்கும் வடக்கும் அலைந்து கண்டு பிடித்துக்கொடுத்தது என்னை வியப்புக்குள் தள்ளியது. ……………..தொடரும்.


Friday, May 1, 2015


என்னை வியப்பில் ஆழ்த்தும் பறவைகள்


Coppersmith Barbet ready to carry refuses of Chicks in its' beak

Purple Moorhen hurriedly swimming due to parisal.

          நீலக்கோழி(Purple Moorhen) நீந்துமா நீந்தாதா என பல வருஷங்கள் என்னை நானே கேட்டுக்கொண்ட கேள்வி. பால்பாண்டியிடம் கேட்ட போது, “அது நிர்பந்தம் வந்தால் நீந்தி அடுத்த திட்டுக்குப்போகும்என்றார். அது நீந்தும் அழகைப்பார்க்க எனக்கு வெகு நாள் ஆவா. பரிமாணம் பெரியது. நீந்தினால் அழகாக இருக்கும். அதன் நிறம் நீலம் ஒரு வித்தியாசமான நிறம். பல காத்திருப்புக்குப்பின் அது நிர்பந்தத்தில் நீந்தும் அழகைப்பார்த்து ரசித்தேன். ஆபத்து என வரும் போது மேலும் ஒரு திட்டுக்குப்போக நினைக்கும் போது நீலக்கோழி நீந்தும். இதை விட இது மூழ்கி சிறிது தூரம் நீந்திப் போய், நீர்காகம் மாதிரி நீர்மட்டத்தில் எழுமா? என நான் பால் பாண்டியைக்கேட்கவில்லை. அது எனக்குத்தோன்றவில்லை.
   ஒரு நாள் பறவை நோக்கலில் ஈடுபட்டிருக்கும் போது, பரிசல்காரன் பரிசலில் மீன் பிடிக்கக் கிளம்பினான். அப்போடு குறுக்கே வந்து விட்ட நீலக்கோழி பரிசலுக்கு தப்பிக்க நீரில் மூழ்கி சிறிது தூரம் சென்று பின் நீர் மட்டத்தில் எழுந்து நீந்திப்போனது. நான் ஒரு நிமிஷம் ஆடிப்போய் விட்டேன். நீலக்கோழி மூழ்கி இறந்து விட்டதா என ஐயம் எழ சில வினாடிகளில் நீர் மட்டத்தில் தலை தெரிய நிம்மதி அடைந்தேன். அது அருகில் உள்ள ஆகாசத்தாமரைபரப்புக்குச்சென்றது. ஆபத்து என்றால் நீரில் மூழ்கி நீந்தி, எழுந்து மீண்டும் நீந்துகிறது.
பல விஷயங்கள் அதாவது பறவைகளின் குணாதிசயங்கள் இன்னும் பதிவு செய்யக்கூடியவை நிறைய உள்ளன. Dr. சலீம் அலி நூலில் பதிவு செய்யப்படாததை நான் பதிவு செய்கிறேன். எனக்கு அரசு அல்லது மற்ற அமைப்புகள் நூல் வெளியிட உதவுவதும் இல்லை. அப்படி நான் வெளியிட்டாலும் அதை பள்ளி, கல்லூரிகள் வாங்கத்தயக்கம் காட்டுகின்றனர். அரசு நூலகங்களில் தேர்வு செய்வதில் ஊழல் வேறு
      குக்குறுவான்(CoppersmithBarbet) மரஓட்டைகூட்டில்முட்டையிட்டுக்குஞ்சுபொரித்தாலும், அடிக்கடி அந்தமரக்கூட்டில் வந்து, தலையை வெளியில் தொங்கவிட்டவாறு ஓய்வெடுக்கிறது. கூட்டை சுத்தம் செய்யாது என பால்பாண்டி சொன்னது தவறானது. குக்குறுவான் சுத்தம் செய்கிறது. சுத்தம் செய்யாவிடில் இரு குஞ்சுகள் தங்க இடமில்லாதுபோகும். குஞ்சுகளின் கழிவுகளை அலகில் சுமந்து கொண்டு சற்று தூரம் பறந்து நழுவ விடுகிறது.


எனது நூலில் “Diary on the nesting behavior of Indian Birds”இவைகளை சேர்க்க வேண்டும். அடுத்த பதிப்பு வந்தால் சேர்ப்பேன். முதல் பதிப்பை விற்கவே வழியில்லை. மக்கள் வாசிப்பது குறைந்து, அலைபேசிக்கு அடிமையாகி விட்டனர். ரயிலில் பாதிப்பேர் காதுகளில் ஒயர் தொங்குகிறது. மீதிப்பேர் ஐப்பேட், லேப்டாப் சகிதம். மக்கள் செவிப்புலனையும், கண்பார்வையையும் தாறுமாறாக உபயோகித்தல் தீங்கை விளைவிக்கப்போவது உறுதி. யாராவது கையில் புத்தகம் இருக்கிறதா? நூல்கள் வாசிக்காதவன் அரைமனிதன். அவன் வாசிப்பு சுகத்தை இழந்தவன். யாருக்கும் எதையும் சொல்ல முடியுமா அவனால்?

Friday, March 27, 2015



பழுப்பு ஈப்பிடிப்பான்
Asian Brown Flycatcher


                இப்பறவை நான் காடம்பாறை போனபோது என் மைத்துனர் வீட்டின் முன்புறத்திண்ணையில் அமர்ந்திருந்த போது முதன்முதலாக அறிமுகமானது. அப்போது மழை தூறிக்கொண்டிருந்தது. “சிலுசிலுவென பருவநிலை. எனக்கெதிரில் நாற்பதடி தூரத்தில் ஒரு முள் கம்பியில் அமர்ந்திருந்தது. அது என் இருப்பில் சலனமடையவில்லை. சிட்டுக்குருவியை விட பரிமாணம் குறைவு. பழுப்பு நிறம். அதன் விரிந்த வட்டக்கண் தான் எனக்கு அதன் முகவரியைச்சொன்னது. தலை கொஞ்சமே தூக்கல், வால் நுனி சற்றே இரு மடிப்பாக இருப்பது மட்டுமே அதன் அடையாளங்கள். அதற்கப்புறம் அதை நான் பார்க்கவில்லை. இது வலசை வருவது. எனது இல்லத்தின் வலது புற வீதிக்கு அப்பால் ஒரு இலந்தை மரம் குடைவிரித்து நின்றிருந்தது. அதில் இதைப்பார்த்தேன். பல வருஷங்கள் ஓடிவிட்டதால் சந்தித்தவரை மறப்பது போல மறந்து போய், யார் இவர் என்பது போல எனக்கு சிந்தனை ஓடியது.

புதர்கருவி!(Warbler!)இனம் என நினைத்துக்கொண்டேன். தினமும் இப்பறவையை இலந்தை மரத்தில் உற்றுஉற்றுப்பார்த்துக்கொண்டிருந்தேன். அதுவும் வட்டமான அகலக்கண்ணால், மறந்து விட்டாயா? என்னைத்தெரியவில்லையா? என்பது போல என்னை மலங்க மலங்கப்பார்க்கும். எனது இல்ல சிறு பூங்காவுக்கு வரும். மருதாணி, Powder puff என்ற புதர் தாவரங்களில் பூச்சி பிடிக்கும். பிறகு இலந்தை மரத்தில் ஊஞ்சலாடுவது போல கிளைக்குக்கிளை தாவிக்கொண்டிருக்கும். இதுமலைப்பிரதேசங்களை ஒட்டி உலவும், பூங்காவில் உலவும், மரக்கூட்டத்தில் உலவும் மற்றும் கண்பெரியதாக வட்டவடிவத்தில் இருப்பதெல்லாம் இதனை அடையாளம் காண துப்புகள். எனது வீட்டின் முன்பு, நிறைய மரக்குழு இருப்பதுவும் ஒரு தடயம்.

நண்பனே! உன்னை வெகு நாட்களாகக்காணாது போனதால் உனது அடையாளங்கள் மறந்து விட்டன. மன்னியும். உன்னைப்பார்த்த நாள் மீண்டும் நினைவுக்கு வருகிறது. மழைத்தூறல் அத்தோடு ஈரப்பதமான குளிர். இருவரும் ஒருவரை ஒருவர் வெகு நேரம் பார்த்துக்கொண்டோமே! நீ முள்கம்பியில் அமர்ந்திருக்க, நான் மைத்துனர் வீட்டுத்திண்ணையில் அமர்ந்து அந்த மலைப்பள்ளத்தாக்கில் உயிர்த்திருந்தோமே! இப்போது ஞாபகம் வருகிறது .


நண்பனே! மீண்டும் சொல்லாமல் கொள்ளாமல் பறந்து விடுவாய். அதெப்படி! தனியாக இவ்வளவு தொலைவு வருகிறாய். நான் மட்டும் நண்பனொடு தான் எங்கும் செல்கிறேன். இலந்தை மரத்தில் வந்து முள்ளோடு முள்ளாக அமர்ந்த வண்ணம் உறங்குகிறாய். பகல் பொழுதில் இலந்தை மரக்கிளைகளில் ஊஞ்சல். பிறகு மரத்துக்கு மரம் தாவல், கிடைக்கும் பூச்சிகளை உணவாக்கிக்கொள்கிறாய். பஞ்சம் பிழைக்க வந்தவன் போல இருப்பது தகுமா! நீ என் நண்பனல்லவா! ஏற்கனவே அறிமுகமானவன் நீ! வாரும் என் இல்லத்துக்குள். இருவரும் தேனீர் அருந்தியவாறு பேசிக்கொண்டிருப்போம். என்னோடு தங்குவீர். தயவு செய்வீர்.

Saturday, December 20, 2014

யமுனை நதிக்கரைப் பறவைகள்

Ruddy Shelduck

Spurwinged Lapwing

            காதல் சின்னமான தாஜ்மஹாலுக்குப்பின் புறம் யமுனை நதி செல்கிறது. நதியில் வெள்ளம் அதிகம் இல்லை. நான் நவம்பர் ’2014 –ல் சென்ற போது சில பறவைகள் நதிக்கரையில் கண்டேன். அவை கரண்டி வாயன்(Spoon Bill), நீர் காகம்(Cormorant), மஞ்சள் மூக்கு நாரை(Painted Stork), நெடுங்கால் உள்ளான்(Black winged Stilt), பட்டைத்தலை வாத்து( Bar headed goose), கருட தாரா(Ruddy Shelduck), ஸ்பர் விங்குடு புலோவர்(Spurwinged Plover) என்ற பறவைகள் என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தின.
கடைசி இரு பறவைகளும் எனக்கு புது அறிமுகம். கடைசிப் பறவைக்கு தமிழிலில் பெயர் இன்னும் வைக்கவில்லை போலும். எனது பறவை குருநாதர் க. ரத்னம் நூலான தமிழில் பறவைப் பெயர்கள் நூலில் இல்லை. இது தமிழ் நாட்டுக்கு வருகை புரிவதில்லை. இறுதிப்பறவையை நான் ஆக்ரா யமுனை நதிக்கரையில் பார்த்த போது செங்கண்ணி(Redwattled Lapwing) எனத் தவறாகப்புரிந்து கொண்டேன். கணனியில் உருப்பெருக்கிய போது அதனை இனம் காண முடிந்தது. இதற்கு உதவியது சலிம் அலியின் The Book of Indian Birds. கடைசி இரண்டு பறவையும் தமிழ் நாட்டுக்கு வருகை புரிவதில்லை. கருட தாரா வாத்து. இது லடாக், நேப்பாள், திபெத்தில் இனப்பெருக்கம் செய்வது. இது ஒரு குளிர் கால வருகையாளர். ஆற்றில் நீந்திக்கொண்டும், தோளில் முகம் புதைத்து உறங்கியும், பறந்து கொண்டும் குழுவாக இருந்தது. இவை மிக அழகான வண்ணத்தில் கண்ணுக்கு சுவை கூட்டுகின்றன. ஆறு, குளங்களில் இவற்றைப்பார்க்கலாம்.
ஸ்பர் விங்குடு புலோவர் இரண்டு யமுனை ஆற்றின் மணற்கரையில் நின்றிருந்தன. இவை வாழிடம் இங்கு தான். இதனை நான் அடையாளம் கண்டு கொண்டது ஸ்வராஸ்யமான விஷயம். அவைகளாவன;-
1.    வட இந்தியாவில் பார்த்தது.
2.    ஜோடி
3.    ஆற்றங்கரை மணற்வெளி
4.    கூனிக்குனிந்திருக்கும் கருப்புத்தலை
5.    நம்பார்வைக்கு தவிற்கும் பாவனை
6.    இதன் வடிவம், நிறம்

இவ்வாறாக ஒரு பறவை செங்கண்ணி என நினைக்க வைத்து தடுமாற வைக்கும் போது நாம் இப்படித்தான் இனம் காண வேண்டும். இதற்கு திறமையான நுண்ணறிவு தேவை. இந்த பறவை டையாளம் காணல் வெற்றிகரமாக அமைந்து விட்டால்,  நமக்கு அன்றைக்கெல்லாம் பெரும் மகிழ்ச்சியைத்தரும்.

Saturday, September 13, 2014




குயில் அக்கா
(Common Hawk-Cuckoo or Brainfever Bird)
இது என்னடா! குயிலுக்கு அக்காவா! அப்போது தங்கை யார் ? எனக்கேட்டு விடாதீர். இது குயில் போல இனிமையாகக் கூவக்கூடியது தான். ஆனால் காய்ச்சலில் அனத்துவது போல விடாமல் குரல் கொடுக்கும். தொண்டை வலிக்குமே! எனக்கூட நான் நினைப்பேன். வாய் ஓயாமல் அதிகாலை ஐந்து மணிக்கு கத்த ஆரம்பித்தால் முக்கால் மணி நேரத்துக்கு கூவும். நான் பல முறை பிரம்ம மூர்த்தத்தில் எழும் போது கேட்டு சந்தோஷப்பட்டிருக்கிறேன். இப் பறவை பூங்காக்கள், அடவிய தாவரங்கள் வளர்ந்திருக்கும் இடங்களில் காணலாம். என் இல்லத்துக்கு மேற்குப்புறமாக அடவிய தாவரங்கள் வளர்ந்திருக்கும் இடம் உள்ளது. டார்ச் எடுத்துக்கொண்டு இன்னும் புலராத கங்குலில் மேற்குப்புறமாக ஒலி வரும் திசையில் செல்லலாமா என நினைப்பேன்.
விடிந்தும் விடியாத பொழுது இது குரல் கொடுக்கிறது. தனிமையாக மரக்கூட்டத்தினூடே இருக்கும் என்பது உண்மை தான். எனது நகரத்தின் மேற்குப்புறம் சந்தடியற்ற, தாவரம் அடவிய பகுதி உள்ளது. ஒரு நாள் சோளம் மாட்டுத்தீவனத்துக்காக பயிரிடப்பட்ட விளைநில மேற்குப்புறத்தில் மாமரக்கூட்டமிருக்க, அதிலிருந்து குயில் அக்கா குரல் கேட்டது. அப்போது காலை மணி 07.30 இருக்கும். உள்ளே சோளக்காட்டுக்குள் போய் பார்த்தேன். கண்ணில் படவில்லை. இதை ஒரு சில போது தான் பார்த்திருக்கிறேன். இது கூடு கட்டாது அடுத்தவனை நம்பி இருக்கும் பறவை.சாம்பல் நிறத்தில் சிக்கரா போன்றது. நிலா காயும் போது இது ‘எனது காதலி எங்கே?’ என இந்தியில்(pee-kahan?) கேட்கிறதாம். ‘மழை வருகிறது’ என மராத்தியிலும்(paos-ala)சொல்கிறதாம். இரு வாக்கியங்களும் அருமை. எதையாவது நினைத்துக்கொண்டு கேட்டால் அதுவாகத்தான் நமக்குத்தோன்றும்.
ஆங்கிலேயன் மூளைக்காய்ச்சல்(Brain fever) என்பது போல ஒலிக்கிறது என்கிறான். மூளைக்காய்ச்சல் வந்தவன் போல பிதற்றுகிறதா! சிக்கரா ஹாக் போல பறக்கவும் வல்லது. கம்பளிப்பூச்சி, மற்ற பூச்சி, பெர்ரி, காட்டுப்பழங்கள் உண்ண ஹாக் போல ஏன் பறக்கவேண்டும்?
சலிம் அலி இப்பறவையின் கூவலை எப்படி வர்ணிக்கிறார் படியுங்கள்; A loud, screaming brain-fever, brain-fever, repeated with monotonous persistency 5 or 6 times, rising in crescendo and ending abruptly. இதன் கூவல் ‘நோட்ஸ்’ வைத்து ஒரு பாடல் எழுதி ‘ட்யுன்’ போடலாம் என இருக்கிறேன்.
எது எப்படியோ! இப்பறவையின் விடிந்தும் விடியாத கூவல் இனிமை. குயிலக்கா…குயிலக்கா… என எனக்குப்பாடத்தோன்றுகிறது. இதை அடிக்கடி குயில் போல பார்க்கமுடியவில்லையே என எனக்குள் ஏக்கமிருப்பது உண்மை தான்.



Saturday, May 17, 2014

பச்சை வாயன்

Small Green billed Malkoha
(Rhopodytes viridirostris)

அதிகாலைப்பொழுது காகம் கரையும் வேளையில்

சின்னப்பச்சைவாயன்

            புத்தபெளர்ணமியன்று(14.05 2014) மருதலை அடிவாரம் தெற்குப்பகுதிக்குச்சென்றோம். விஜயகுமார், மோகன் பிரசாத், ராமச்சந்திர மூர்த்தி ஆகியோர் முதல் நாள் பேசி முடிவு செய்து, இரண்டு மோட்டர் சைக்கிளில் கிளம்பினோம். நகரத்திலிருந்து 15 கி.மீ இருக்கும். முதல் நாள் இரவு மழை பெரியதாகப்பெய்து,  அருமையான பறவை நோக்கலுக்கு வழிவகுத்திருந்தது.மழை வாய்க்கால் சுவடுகள், அந்த ஈரப்பதம், நெகிழ்ந்த மேற்பரப்பு மண், உழுது விட்ட குறிஞ்சி நிலம், சாம்பல் நிற மேகங்கள் நிறைந்த வானம்என்னைகுதூகலத்தில்ஆழ்த்தியது.வானம்பாடிக்குருவிகள் (Bush Lark)மின் கம்பிகளிலும் தரையிலும் கண்டுரசிக்க முடிந்தது. ஈப்பிடிச்சான்கள்( Small Green Bee eaters) அங்குமிங்கும் பச்சை காட்டின. ஒரு குறு முயல்(Rabbit) வேகமாக வெட்டவெளியில் ஓடியது மனதைக்கவர்ந்தது. முயல் இருந்தால் குள்ளநரி இருக்கும்.
            மலை முழுக்க வேல மரங்கள். இது ஒரு முட்காடு நிறைந்த மலை. யானைகள் நடமாட்டம் சில சமயம் இருக்கும். நெட்டைக்காலி(Paddy field Pipit) ஒன்று வேலிக்கல்லில் காட்சி தந்தது. மலை அடிவாரம் என்றால் சிறு கோயில் உருவாகிவிடும். வனபத்ரி கோயில் உள்ளது. கோயிலுக்குப்போகும் வழியில் மூன்று அரச மரங்கள், ஒரு ஆழ மரம் பெரியதாய் குடைவிரித்திருந்தன. அரசமரத்தின் கிளைகளில் ஜெஸ்பல் ஒட்டுண்ணி கொடிகள் தொங்கிக்கொண்டிருந்தன.இந்தக்கொடி ஜெஸ்பல்(Jezebel) என்ற இன வண்ணத்துப்பூச்சிகளுக்கு உணவுத்தாவரம். இந்த உணவுத்தாவரத்தின் பெயரை வைத்தே அதை உணவாக உண்ணும் வண்ணத்துப்பூச்சிக்கு பெயர் வந்துள்ளது என மூர்த்தி சொன்னார். தரையிலிருந்த நன்னாரி, வேரில் வாசமிருக்கும் செடி சிறியதாக வளர்ந்திருந்ததை மோகன் காட்டினார்.
              இந்தியன் ராபின் (Indian Robin) ஜோடி ஆனந்தமாக இங்குமங்கும் பறந்து பூச்சி பிடித்துக்கொண்டிருந்தது. சிக்ரா(Shikra) வானத்தை அளந்து கொண்டிருந்தது. ஆலமரத்தடியில், யானை வருவதைத்தடுக்க கால்வாய் போல பெரிய குழி வெட்டப்பட்டிருந்தது. காட்டுக்குள் அப்படியே மண் பாதை சென்றது. மூர்த்தி கேழ்வரகு உப்புமா கொணர்ந்தை பங்கிட்டு உண்டோம். சுவை கூட்டியது நாவில்.. அதுவும் வனத்துக்குள் உண்டால் அதீத சுவையிருக்கும். வரப்பு, வனப்பாதை என நடந்து இயற்கையை அதிசயத்தோம். கரிச்சான்(Black Drongo) பல குரலில் பாடி சூலழை இனிமையில் தள்ளியது. காடைகள்(Grey partridge) மூன்று என்ன மாயமாய் போக்குக்காட்டுகின்றன். இவைகள் லென்ஸ்க்கு சிக்குவது நமது அதிஷ்டம்.
           

பச்சை வாயன்(Small Greenbilled Malkoha) மிக நாணம் கொண்ட பறவை. சின்னப்பச்சை வாயன், பெரிய பச்சை வாயன் என்று இரண்டு வகை உளது.இதில் எங்கள் கண்ணுக்கு தரிசனம் தந்தது சின்னப்பச்சை வாயன். இதன் அலகு பச்சை. கண்ணைச்சுற்றி நீல நிற தீற்று. இவை நம்மைக்கவரும். பறப்பதில் சவளை. அதனால் முட்புதருக்குப்புதர் மெலிதாகப்பறந்து ஒளிந்து கொள்கிறது. தரையில் இறங்குவது அற்பம். உண்ணுவது;  வெட்டுக்கிளி, பல்லி, சிறு விலங்கு, மான்டிஸ், புழு என்பன. கூட பெர்ரிப்பழமும். இப்பறவை ஒன்றை வேல மரங்களுக்கிடை பார்த்து ரசித்தோம். இதைப்பல முறை பார்த்து ரசித்திருக்கிறேன். புகைப்படப்பெட்டிக்குள் அடைப்பதற்கு, படு முயற்சி வேண்டும். 

Sunday, March 23, 2014

 காதல் பறவைகள்
Love Birds

காதல் பறவைகள் என்று ஏன் பெயர் வந்தது எனில் அவை அடிக்கடி முத்தம் கொடுத்துக்கொள்ளும். ஜோடி இல்லையெனில் இறந்து விடும். தனித்து ஒரு பறவை மட்டும் இருக்காது. வண்ண, வண்ண நிறத்தில் கண்ணையும், மனதையும் கவரக் கூடிய பறவைகள். இவை நம் நாட்டுப்பறவைகள் இல்லை. நம் நாட்டில் வளர்ப்புப் பறவைகளாக கூண்டுக்குள் தான் பார்க்கலாம். வெளியில் சுதந்திரமாக பறந்து திரிந்தால் கழுகு, பருந்துகளால் ஆபத்து. இவை ஆஸ்திரேலியப்பறவைகள். அங்கிருந்து கப்பலில் வியாபார நிமித்தம் இறக்குமதியாக, இவை இந்தியாவில் புறா மாதிரி வளர்க்கின்றனர். விற்பனை நடை பெறுகிறது. இவற்றை வீடுகள், நிறுவனங்கள் என வளர்ப்போர் உண்டு.
பறவைகளின், ஒலி(Sound therapy) மனதை சந்தோஷப்படுத்துகின்றன. உடலையும், மனதையும் ஓய்வுக்கு கொண்டு செல்கின்றன. நீலம், மஞ்சள், வெண்மை, பச்சை எனப் பல வண்ணங்களில் நம்மைக் கவருகின்றன. இவை சப்திப்பது மனதுக்கு இதமாக இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் ஆயிரக்கணக்கில் பறக்கும். பறக்கும் போது வேகத்துடன் பெரிய மேகம் வருவது   போல கிச், கிச் என பேரோலியுடன் வரும்.அப்போது கழுகுகள் உள்ளே பறந்து வந்து சும்மா அலகைத்திறந்து வைக்கும். ஒன்று மாட்டிக்கொள்ளும். அப்படி ஆயிரக்கணக்கில் இரையாகும்.
இவை தன் ஜோடியுடன் மிக நெருக்கமாக இருக்கும். முத்தமழை தான். அலகோடு அலகு இணைத்து அடிக்கடி முத்தம் கொடுக்கும். கூண்டிலேயே இணை சேர்ந்து முட்டை வைத்து அடை காத்துக் குஞ்சு பொரிக்கும்.ஐந்து வரை கூட வைக்கும். முட்டை ஓவல் வடிவத்தில் வெள்ளையாக இருக்கும். இதன் உணவு தினை, பொதினா கீரை, கொத்துமல்லி இலை. ஆண் அலகு அடிபாகம் சற்று நீல நிறம். பெண்ணுக்கு அலகு அடிபாகம் மஞ்சள், பிறகு வெள்ளை. பகல் முழுதும் கிச், கிச் என ஒலி எழுப்பும். மாலை ஆறு மணிக்கு மேல் நிஷப்தம். அதி காலையில் மீண்டும் ஒலி எழுப்ப ஆரம்பித்து விடும். கூண்டுக்குள் ஒன்றையொன்று துரத்திக் கொண்டும், ஊஞ்சலில் ஆடியும், தன் ஜோடியோடு நெருங்கி அமர்ந்தும், கண்ணை உருட்டிப்பார்த்துக் கொண்டும், தனது அறையான மண் சட்டி அல்லது மரப்பெட்டி போய் வந்து கொண்டுமிருக்கும் .
முட்டை (குறுமட்டை) வலுவிழந்ததாக இருப்பின் அதை உணர்ந்து கீழே தள்ளி விட்டு விடும். அது உடைந்து நொறுங்கும். ஜோடி என்பது குறிப்பாக ஒன்றுடன் மட்டுமே இருப்பதில்லை. (Polygamy). மலட்டுத்தன்மையோடு இருக்கும் ஒரு காதல் பறவை தனது சக பறவையின் குஞ்சுகள் ஒன்றிரண்டை கொன்று விடுவதை பார்க்க முடிகிறது. ஊனமாகப்பிறந்த பறவை சாகவேண்டியது தான். சரிவரப்பறந்து கூட்டுக்குள் இருக்கும் மண்சட்டி அல்லது மரப்பெட்டிக்கு வர முடியவில்லையானால் தளமட்டத்தில் இருக்கும். அதிக நடமாட்டமில்லையெனில் எறும்புகள் கபளிகரம் செய்து விடும். குஞ்சுகளுக்கு தாய் பறவை தினை ஊட்டும்.அடைகாப்பது இரண்டு வாரம். இவற்றுக்கென்று ஒரு வாழ்க்கை உண்டு. இவை வாழ்வதோடு மாநிடரை சந்தோஷப்படுத்தவும் செய்கின்றன.


Sunday, February 2, 2014

வெண்தலைச்சிலம்பன்
White headed Babbler
(Turdoides affinis)
 தைமாதக்குளிர் பனியில் உறைந்து போன நிழற்ப்படம்

எனது இல்ல மதில் சுவர் மேல் 

மனிதருக்கு வாழும் கலை சொல்லித்தர வேண்டியது உள்ளது.
ஆனால் பறவைகளுக்குத்
தேவையில்லை.



                              நான் உங்களுக்கு கொடுப்பதெல்லாம் புதுத்தகவல்களாக சுவராஸ்யமாக இருக்கும். சொன்னதையே சொல்வது எனக்கு கூட அழுப்புத்தட்டும். Babbler- என்ற ஆங்கிலவார்த்தைக்குப்பொருள் ஒன்றுபட்ட பலகுரல்கள். வெண் தலை சிலம்பன்கள் ஆறு-ஏழு என குழவாகச்சுற்றுவது, வசிப்பது எல்லோருக்கும் ஆச்சர்யமாக இருக்கும். ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்ற தாத்பர்யம் கடைப்பிடிக்கின்றன. இடையூறு தரும் பறவையாகட்டும், பூனையாகட்டும் ஒன்று பட க்ளிங், க்ளிங் என ஒரு சேரக்கத்தி அத்துடன் இறக்கையை விரித்துக்காட்டி, மூடி பயமுறுத்தி விரட்டும். சாதாரணமான மைனா, காகம், செண்பகம், கொண்டலாத்தி என்பன போன்றவற்றிற்கு பயப்படாதவை. 
           இவற்றில் ஆண் எது, பெண் எது எனக்கண்டு பிடிக்க தலை முடியைப்பிய்த்துக்கொள்ள வேண்டும். அவற்றின் குணாதிசயத்தை வைத்தும் கண்டு பிடிக்க முடியாது. எல்லாம் ஒன்று போலவே இருக்கும். கூட்டிலிருக்கும் குஞ்சுகளுக்கு எல்லா சிலம்பன்களும் உணவூட்டும். எல்லாமும் காவல் காக்கும். அடை காக்கும். குஞ்சுக்குத்தான் எத்தனை அம்மாக்கள் எத்தனை அப்பாக்கள். யாரோடு யார் ஜோடி என்றும் தெரியாது. ஏழு சகோதரிகள் ஆனால் அதில் சகோதரர்களும் இருக்கிறார்கள். அதில் யார் யார் கணவன் மனைவி என்பதும் தெரியாது. வாஸ்தவத்தில் அதற்குள் ஜோடிகள் மாற்றிக்கொள்ளும் எனத் தோன்றுகிறது. குழுவுக்குள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி சாயக்குறியிட்டு அவற்றோடே பல நாட்கள் சிறகடித்தால் தெரிய வரும். 
                             ஒரு சமயத்தில் மூன்று நீலநிற முட்டை மட்டும் வைக்கும்(பழைய காலத்தில் 4). இரு ஜோடி வைத்தால்  ஆறு இருக்கலாம். ஆனால் நான் பார்த்தது மூன்று தான்.ஏழு சிலம்பன் எனில் அவற்றில் மூன்றாவது பெண்ணாக இருந்து, ஒன்பது முட்டை வைக்கலாமே!அப்படியில்லை. அதனால் இந்தக்குழுவின் மர்மம் இன்னும் அவிழ்க்கப்படவில்லை. இந்தக்குழு மர்மம் பெரிய சாம்பல் சிலம்பன்(Large Grey Babbler), காட்டுச்சிலம்பன்(Jungle Babbler), குவாக்கர் சிலம்பன் (Quakker Babbler) போன்ற அனைத்து சிலம்பன் குழுவுக்கும் பொறுந்தும்.
                  குழு சிலம்பன் பூச்சி வேட்டையில் ஒரு ஆதாயம் என்னவெனில் ஏழு பறவைகளும் சூழ்ந்தும், குதித்தும், ஒரு சேர முன்னேறித் தேடும் போது நிறையப்பூச்சிகள் இடம் பெயறும். அப்போது லபக், லபக் என குழு உறுப்பினர் பிடித்துக்கொள்ளலாம். இவை இடம் பெயறும் போதெல்லாம் சப்திக்கிறது! ஏனெனில் ஒருவரையொருவர் பிரியாமல் இருக்கத்தான். குழு பிரியாமலிர்க்கத்தான். ஒரு குழு உறுப்பினர் இன்னொரு சிலம்பன் குழுவில் சேராது எனலாம். மனிதன் எப்படி வேண்டுமானாலும் கூட்டு வைத்துக்கொள்வான். 
                        இவை காகத்தைப்போல எதுவும் உண்ணும். என் வீட்டு முன்புள்ள விஜய விநாயகர் கோவில் படியில் வைக்கப்படும் சர்க்கரைப்பொங்கல், ஸ்தம்பத்தின் மீது வைக்கப்படும் சர்க்கரை அவல் என என் கண்பட பார்த்திருக்கிறேன். இவை தரையைக்கிளறி இரை தேடுவதால் தாழப்பறக்கும் விதமாக இறைவன் மெலிதான பலமற்ற சிறகுகளைத் தந்துள்ளார். ஒரு பர்லாங்கு கூட ஒரே சமயத்தில் பறக்க இயலாது. இவை ஏழு பேர் கொண்ட குழுவாக இருப்பினும் சுடலைக்குயில் (Pied crested Cuckoo)திருட்டுத்தனமாக தன் முட்டைகளை சிலம்பன் கூட்டிலிடுவது நல்ல தமாஷ்! இவை சுடலைக்குயில் சப் அடல்ட் எனத்தெரிந்தும் உணவு ஊட்டுவதை எனது இரண்டு கண்ணால் பார்த்துள்ளேன். தன் இனமாக இருப்பின் அடுத்த குழுவிடம் சண்டையில்லை. வெவ்வேறு குழுக்களாக வெவ்வேறு இடங்களில் இரை தேடுகின்றன். ஆனால் சிலம்பனில் பெரிய சாம்பல் சிலம்பன் குழு போல வேறு குழுவாக இருப்பின் விரட்டுகின்றன. இதை நான் என் இரண்டு கண்ணால் பார்த்தேன்.  
                             ஒரு முறை மீன்காரி மீனைச்சுத்தம் செய்யும் போது, அவளைச்சுற்றி நல்ல காகம், அண்டங்காகம்,பூனை, நாய், சிலம்பன் அமர்ந்திருந்தன. சிலம்பன் ,மீன் கூட உண்ணுமோ! பிறகு தான் தெரிந்தது, மீன் குடலை புழு என நினைத்து அமர்ந்திருந்தது உணர்ந்தேன். இன்னும் இவை எப்படி குளிக்கின்றன? இரவில் எங்கு தங்குகின்றன? சுடலைக்குயிலிடம் எப்படி ஏமாறுகிறது? மற்றும் கூடு பற்றிய தகவல்கள் அறிய எனது”Diary on the nesting behavior of Indian Bird” நீங்கள் படிக்கலாம்.

Friday, January 17, 2014


Kentish Plover flocks in Adayar estuary                         
(Charadrius alexandrinus)  

அடையார் முகத்துவாரத்தில் சிறிய உப்புகொத்திகள்

In flight a narrow white wing-bar and prominent white sides of tail distinctive-Dr. Salim Ali
முகத்துவாரத்தில் முகத்தை நீட்டிக்கொண்டு கட்டியிருக்கும் கட்டிடங்கள்

அழகானதொரு கோவா கடற்கரை மணல்வெளியில் ........... 
சிறிய உப்புக்கொத்தி-                                                                        
மணல் கோழி

சிறிய உப்புக்கொத்திகளை நான் கோவாவின் ஒரு அழகான கடற்கரையில் முதன்முதலாக சந்தித்தேன். இவை நமது நாட்டுப்பறவைகள். மணலில் விளையாடியும், புதைந்தும், குடுகுடு வென ஓடியும் அழகு காட்டும் குருவி (+) பரிமாணப்பறவைகள். இவற்றினை குழுவாகத்தான் பார்க்கலாம். பலர் இவற்றை மோதிரக்கோழி(Little Ringed Plover)யென சத்தியமாக எண்ணி விடுவார்கள். இரண்டுக்கும் வேறுபாடு; மோதிரக்கோழிக்கு கழுத்தில் இடைவெளியற்று,வளையமிட்ட கருப்பு, நெற்றியில் கருப்புப்பட்டை. இது இருந்தால் அது கழுத்தில் மோதிரமிட்ட கோழி என அறிந்து கொள்ளலாம்.
சிறிய உப்புக்கொத்திக்கு முன் நெற்றியில் வெண்கோடு,குறுகிய கண் தீற்றல், மார்பில் சிறு கருப்புப் பட்டை. இப்படி இருந்தால் அது மணல் கோழி. மலையாளத்தில் தமிழை விட பொறுத்தமான பெயர்கள் பறவைகளுக்கு சூட்டியுள்ளனர், என்பதைச் சொல்லத்தான் வேண்டும். தொந்தரவு என உணர்ந்தால் குழுவாகப்பறந்து மீண்டும் மணலில் அமருமிவை பறக்கும் போது சன்னமாக ட்ர்ர்ர் என இரு முறை கத்தி, ’எந்திரிங்கடா, பறப்போம், மனுஷன் எவனோ வர்ரான்’ எனப்பறப்பது ஒரு கவிதை. இருவிடலைப்பையன்கள் அப்படி அடையார் முகத்துவாரத்து மணல்வெளியில் நடந்து வந்த போது தான், பறந்து போகும் நிலை நிழற்ப்படம் சாத்தியமானது.
இவை மணல் குழிவை அலை தொடாதவாறு ஏற்படுத்தி முட்டைகளை வைக்கும். அல்லது காய்ந்த ஆற்றுப்டுகையில் தாவரங்களுக்கிடையே வைக்கும். முகத்துவாரத்தில் முகத்தை நீட்டிக்கொண்டு இந்த மாதிரி ராட்ச்சத்தனமாக(ன) கட்டிடம் கட்டலாமா? நீச்சலடிப்பவர், மீன்பிடிப்பவர், பிக்னிக் மக்களென பறவைகளை இறங்கவிடாமல் செய்தது பரிதாபம். சென்ற காலங்களில் நிறையப்பறவைகள் காணமுடிந்தது. இப்போது நான் பார்த்தது; Small green Bee-eater(1), Curlew(1), Common Sandpiper(1). Little Egrets (5) மட்டுமே. எனக்கு நிறைய ஏமாற்றம்.


Thursday, May 9, 2013









Recognize?
(Answer in next Blog)


சோகப்பாடகன்
Indian Plaintive Cuckoo
(Cacomantis passerines)



குக்கு இனப்பறவைகள் பெறும்பாலும் பாடக்கூடியவை. அதனால் இவைகளைத்தமிழில் பெயர்  வைக்கும் போது குயில் என்றே வழங்குகிறோம். Pied crested cuckoo-ற்கு சுடலைக்குயில் என்கிறோம். இது நமது பகுதிக்கு வந்து பாடினால் சில நாட்களில் மழை வரும் என்கின்றனர். இதற்கு மேடையும் ஒலிபெருக்கியும் அமைத்துக்கொடுக்கலாமா? Indian Plaintive Cuckoo-வை சிறுகுயில் எனச்சொல்கின்றனர். அதுவும் சோகப்பாட்டு! அதன் பெயரிலேயே தெரியுது சோகம்.இது பி-பி-பிப்பி-பிப்பீ-பிப்பி-பிப்பீ ஏன நமக்கு கேட்கும்படி தெரியும் மரத்தின் உயரக்கிளையில் அமர்ந்து பாடும். இது கூடுகட்ட சோம்பேரித்தனப்பட்டு கதிர்குருவி (Warbler) இனப்பறவைகளை செவிலித்தாய்களாக்கி, அவற்றின் கூட்டில் முட்டைகளை கள்ளத்தனமாக இட்டு விட்டு, ‘எனக்கொரு மகன் பிறப்பான், அவன் கதிர்குருவி வளர்த்தாலும், என்னைப்போலவே இருப்பான்எனப்பாடித்திரியும் போலிருக்கிறது.
           
இதனை முதலில் Blue Rock Thrush என நினைத்து ஏமாந்தேன். பறவைகளை இனம் காண்பது மூளைக்கு வேலை. அது ஒரு மர்மத்தினை விடுவிப்பது. ரகசியத்தை வெளிக்கொணர்வது. ‘த்ரில்ஆனது. பறவையிடம் போய் ID please? என்றால் அது சொல்லுமா? நாம் தான் நமது வசதிக்காக பிரித்து வைத்துள்ளோம். அதனால் நாம் தான் கண்டுபிடிக்கவேண்டும். இப்பறவையின் நீல நிறம், பார்த்த இடம் மலை அடிவார பாறை இடம், மேலும் வாலில் வெண்தீற்றல், கோடுகள் இல்லாததால், இது Blue Rock Thrush(நீலப்பூங்குருவி) என எண்ணவைத்தது. அதற்குப்பிறகு, கண்கள் சிவந்துள்ளது, வாலும் அடி வயிறும் சேறும் (vent)  இடம் வெள்ளை. வாலில் மெலிதாகத்தோன்றும் வெள்ளைப்புள்ளிகள் zoom செய்து பார்த்ததில் அதுவும் சன்னமாகத்தெரிகிறது.பாடும் போது நாம் கை அசைப்பது போல இது இறக்கையையும், வாலையும் தளர்வாகத்தொங்க விடும். அது பழக்க தோசத்தால் நாங்கள் பார்த்த போது, அதாவது பாடாத போதும் அப்படி அமர்ந்தது. (வலது படத்தில் காண்க.) மேலும் குக்கு இனப்பறவைகளுக்கு கண்களை சிகப்பாக்கி அந்த கள்ளத்தனத்தை இயற்கை வெளிக்காட்டுகிறது. Eg: Coucal, Koel, Sirkeer Cuckoo,  etc. திருடன் கண்கள் போல் குக்கு இனப்பறவைகளின் கண்கள் வித்தியாசமாகத்தெரிகின்றன. Cuckoo- பற்றி பல நூல்கள் வெளிவந்துள்ளன. Identification of Birds is an interesting art and if we solve that mystery, we will get immense joy atleast for another few days.  

Left side still taken by my friend R. Vijayakumar 

Joke
 கணவன்;(மனைவியடம்) Bird watch போயிட்டு வர்ரேன்.

மனைவி; cooling glass வேணுமா?

NB: Blog visitors are requested to spread our Blog ID to your chums.

Wednesday, March 20, 2013

சிகப்புத்தலை நுண்ணிச்சிறை
Rufousfronted wren- warbler
(Prinia buchanani)

                அரக்கோணத்தில், அப்போது ரயில்வேயில் பணி செய்தவர் ஆங்கிலோஇந்தியர்கள். அவர்கள் ஆங்கிலமும், ஆங்கிலேயர்கள் போல் நடை, உடை பாவனையும் என்னைக்கவரும். இப்போது ஓரிருவர் மட்டுமே தட்டுப்படுகின்றனர். ஆங்கிலேயர் தொப்பி, கோட்டு, சூட்டு, கவுன், ப்ராக், ஆங்கிலம் எங்கு போயிற்று? இறைவன் காட்சிகளை மாற்றி, மாற்றி அமைக்கிறார். ஒவ்வொரு நாள் சூர்ய அஸ்தமனம் போல…..
                திருவாலங்காடு அல்லிக்குளத்தில் மனதைப்பறிகொடுத்து, ரயில் தண்டவாளம் தாண்டி அப்புறம் போனால் நான்கடி உயரம் வளர்ந்த நீரில் நிற்கும் புற்களில் ஒரு ஜோடி சிட்டுகளிள்டூயட்’. ஆஹா! அருமைதழும்பாத நீர் பரப்பு, வட்ட, வட்ட அல்லி மிதக்கும் இலைகள் பின்புலமாகக்கொண்டு சந்தோஷ காதல் பாட்டு. கதிர்குருவி () நுண்ணிச்சிறைகளை இனம் காண்பது மிகக்கடினமானது. தலை பழுப்புசிகப்பு, வெள்ளைப்புருவம், வால் ஓரம் வெள்ளை விளிம்பு, அடிப்பகதி வெண்மை. அத்தோடு கண்ட இடம் முக்கியம். முட்காட்டின் இடையிருக்கும் நீரில் தடித்த நீண்டபுற்கள். மேலும் ஜோடியாக இருந்தது. இவை உன்னை அடையாளம் காட்டிக்கொடுத்தது என் தேவதையே! ஆந்திராவைத்தாண்டி எம் தமிழ் நாட்டு எல்லையோரம் என்னைக்காண வந்தது அதிசயம்வரலாறு காணா புதுமை! இதை என் குறிப்பேடில் எழுதி வைப்பேன்.

Wednesday, March 13, 2013




 வானம்பாடியைப்பார்க்காமலேயே கவிதை எழுதும்
கவிஞர்களே! இதோ அந்தமேடையில்லாப்பாடகன்!


வானம்பாடி
Oriental Sky Lark

            திருவாலங்காடு அல்லிக்குளம் மனதை அள்ளிச்சென்றது.அங்கிருந்து சென்னை ரயிலில் செல்லச்செல்ல நகர்புற சாக்கடைகள் தென்படும் ஏரிகளில் கலப்பதால், ஆகாயத்தாமரை பரவி அல்லி மலர்களை தள்ளி காணாமல் அடித்து விட்டன. ஏனெனில் ஆகாயத்தாமரை சாக்கடை நீரில் ஊட்டமாக வளரும். அல்லி, தாமரை மலர்களுக்கு நன்னீரும், சேறும் தேவை. இப்படித்தான் என் சூலூர் செங்குளம் தாம்பூ மத்தில் தாமரைகள் மலர்ந்திருந்தன. மனிதனின் ரசனை இப்போது பணத்திலிருக்கிறது. நீர் குழாயில் தரப்போய் குளம், ஏரி முக்கியத்துவம் மறைந்து, தற்போது நீர் நிலைகள் பெரியகுப்பைத்தொட்டியாகி விட்டன. அரக்கோணத்தில் உள்ள ரயிலடி ஒட்டிய பேட்டிமூர்(ஒரு ஆங்கிலோஇந்தியரின் பெயர்.அப்போதெல்லாம் இவர்கள் அதிகம் வசித்த ஊர்) ஏரியில் பறவை நோக்கலில் லயித்திருந்த போது ஒருவர்இந்த ஏரியை எப்போது கண்டம் பண்ணப்போகிறார்கள்?’ என்று வினவினார். இந்த ஏரியில் பிளாட் போட நினைக்கிறாரோ! நிலத்தடிநீர், காற்றில் குளிர்வு, பறவைகள் தரும் பரவசம், நீரை நம்பியிருக்கும் மற்ற ஜிவராசிகள், வேண்டாமா? சுற்றிலும் மரங்களுடன் நடைபாதை அமைத்து ஓடலாமே! ஆரோக்யம் கிடைக்குமே! எனக்கென்னவோ பணத்தை விட அல்லி மலர்களும், அல்லிக்குளமும், இந்த வானம்பாடிக்குருவியும் அதிமுக்கியமாகப்படுகிறது. அன்று அந்த அல்லிக்குளத்தை ஒரு காதலியைப்பிரிவதைப்போல பிரியமனமில்லாமல் பிரிந்தேன்.

Monday, October 8, 2012

பறவை அறிமுகம்


அன்றில் பறவை
Black Ibis (Pseudibis papillosa)

தண்மதிக் கண்ணியி னானைத் தையல்நல் லாளோடும் பாடி
உண்மெலி சிந்தைய னாகி உணரா வுருகா வருவேன்
அண்ண லமர்ந்துறை கின்ற ஐயா றடைகின்ற போது
வண்ணப் பகன்றி* லொ டாடி வைகி வருவன கண்டேன்
     கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.
                                   திருவாரூர் பதிகம்அப்பர் தேவாரம். 4-ம் திருமுறை
                                                  
பகன்றி எனில் அன்றில் Black Ibis (Pseudibis papillosa) பறவை. 5-ம் நூற்றாண்டிலேயே அப்பர் தொலை நோக்கி இல்லாமல் பல பறவைகளை தேவாரத்தில் பதிவு செய்துள்ளார். இப்பறவைகள் ஆணும் பெண்ணுமாக புன்செய் நிலங்களில் இரை தேடும்.  மாலை நேரங்களில் நீர் அருந்த நீர் நிலை நாடிச்செல்லும். உயர்ந்த பனை,தென்னை மரங்களில் தங்கும். இணையில் ஒன்று மரித்தால் மற்றது உயிர் வாழாது. அதனால் இலக்கியவாதிகளுக்கு இதன் மேல் காதல்.  உயர்ந்த மரத்தில் பெரிய மேடை  போல குச்சிகளை வைத்து கூடு கட்டும். வரண்ட புல்வெளி, தரிசு நிலங்களில் இரை கிடைக்கும் வரை அங்கேயே இருக்கும். நான் இப்பறவைகளை கூந்தகுளத்தில்  பார்த்து  ரசித்துள்ளேன்.

Thursday, October 4, 2012


ஆலா
Gull-Billed Tern
(Gelochelidon nilotica)

கோவை சிங்கை மற்றும் சுலூர் குளத்தில் ஆலாவை இந்த வலசைப்பருவத்தில் பார்த்தேன். சுலூர் குளத்தில் ஆலாவை நெருக்கத்தில் நிழற்ப்படம் எடுக்கமுடிந்தது. இது பருத்த அலகு ஆலா. மேற்கு வங்கம், பாங்களாதேஷ், பாகிஸ்தான் நாடுகளிலிருந்து வலசை வந்தது. காகத்தின் பரிமாணம். நிறம் வெள்ளையும் சாம்பலும் கலந்தது.தலை கருப்பு. கடற்காகம் (Gull) போல பருத்த அலகு. இதன் கால்களும், பருத்த அலகும் கருப்பு. குளிர் பருவத்தில் கண்ணைச்சுற்றி கருப்பு திட்டு. தனியாக அல்லது சிறு குழுவாக நீர் மேல் பறந்து, திடீரென நீர்ப்பரப்பில் பாய்ந்து நீர்ப்பூச்சி/ நண்டு பிடிக்கும்.  கடற்கரைப்பறவையானாலும் உள்நாட்டு நீர்நிலைகளுக்கும் வலசையின் போது வருவதுண்டு.