Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Tuesday, November 3, 2015

என்னெதிரே ஒற்றை இருக்கையில்..............

































என்னெதிரே ஒற்றை இருக்கையில்
நான் இசைத்த பாடலைப் பாடும் உனக்கு,
உயிரை உறிஞ்சும் குரல் வளமை;
விரல் நயனங்களும், புருவ ஏற்ற இறக்கமும்
உதட்டுச்சுழிவும், கண்களின் உயிர்ப்பும்
பாடும் பாவமும், சொல்லாமல் சொல்லும்
உனது ரசிப்பை; அபரிமித ரசனையை;
எனது இசைக்கு மேலும் உயிர்ப்பானாய்
தென்னம் பாளையென பற்களின் ஒளிர்வும்
ஓ! நாக்கில் ஊறிவரும் எனது பாடலும்
என்னவென்று சொல்வேன்! தோழி!
இதுவே நமது கடைசி சந்திப்பா?
இந்த உடலான இசைக்கு
உன் உயிர் கலந்த குரல் உயிர்ப்பூட்டும்
தேனும், கற்கண்டும் கலந்த கலவை-இது
தெவிட்ட ஞாயமில்லை! தோழி!
மேலும் சந்திபோம் என்பதில்லாத போது
இந்த இனிமையான பாடல் ரீங்காரமிடும்
என்னைச்சுற்றிஉன் நினைவுகளைப்போல…………….சின்ன சாத்தன்


Tuesday, October 13, 2015

இராமநாதபுரத்தில் தம்பியோடு வசிக்கும் அம்மா குடை எடுத்துப்போகச்சொன்னாள், ஆனால் அதை அசட்டை செய்தவன் மழையில் நனைந்து காளான் விடைத்தது போல ஆனேன். சூலூர் பேருந்து நிறுத்தத்தில் இறங்கியவன் நான் வசிக்கும் வீடு 15 நிமிசத்தில் போக வேண்டியது, இரண்டு மணிப்பொழுது ஆனது. அப்போது மழை கவனிப்பு என்னை மகிழ்வில் ஆழ்த்தியது.  எத்தனை பேர் மழையை வசை பாடியபடி இருந்தீர்கள்? ஓ! மக்களே! காய் கறிச்சாறு அருந்த, ஒரு கடையில் அமர்ந்தவன், சுண்டலும் உண்டவாறு பையிலிருந்த ஒரு காகித்த்தை எடுத்து கவிதை எழுத, நேரம் போனது தெரியவில்லை. பெருத்த மழை, தூரல் மழையாக மாற, சாலையில் நடந்தவாறு எழுதிய தமிழ் மழைக்கவிதையை பாடியபடி இல்லம் சேர்ந்தேன். இதோ! தமிழ் மழையில் நனையுங்கள்!

மழை நீர் வடித்தவை குழாய்களல்ல
அவை நீர் வீழ்ச்சிகள்
சாலையில் எழும்பியவை மழைத்துளிகளல்ல
அவை காதலி முத்தமிட்டுச்சிலிர்த்த மயிர்க்கால்கள்
மழை சாடியவை சவுக்கடிகளல்ல
அவை மத்தளம் வாசிக்கும் கோல்கள்
சாலையில் ஓடுயவை மழைக்கோடுகளல்ல
அவை விளையாடும் சிறார்கள்
சாலையோரம் நெழிந்தவை வெறும் நீரல்ல
அவை உயிர்ப்பிக்கும் அமுத தாரைகள்
சாலையில் புடைத்தவை மழைக்கொப்பளங்களல்ல
அவை அரிசியிட்ட பானையின் கொதிப்புகள்
சாலையில் வீழ்ந்தவை மழைக்கோடுகளல்ல





அவை விளையாடும் சிறார்கள்
மழைக்காற்றால் சிலிர்த்தவை மேனிமட்டுமல்ல
மழை கோதிவிட்ட கேசரங்களும்
அத்தோடு மழையிலாடும் இலைகளும் தாம்…….
எங்கும் அணைத்தவை குளிர் கரங்கள்
மழையை வாழ்த்தியபடி, அதை அனுபவித்த படி
ஒதுங்கிய கடையோரம் கவிதை பாடினேன் தமிழை
தேநீர் அருந்தியபடி………………………………….
நீங்களும் தமிழ் மழையில் நனையட்டுமேயென


                                                                        சின்ன சாத்தன்.

Saturday, February 28, 2015



தேக்கு மரவீடு



தேக்கு மரவீடு

நெடிதுயர்ந்த மரங்கள் ஏனிப்படி இலையுதிர்த்தன!
மழை வேண்டி சிராடி விட்டனவா?
மாணிக்கப் பரல்களாய் சிதறிய நக்ஷத்திரங்கள்
மெல்லக்கவியும் கங்குலூடே ஊரும் ஊர்தி
பாதையிலிருந்த சாமக்குருவி திடுக் கிட்டதை,
வழியமர்ந்த தோட்டக்கள்ளன் மலங்கப்பார்த்ததை
பார்த்துப் பரவசம்; முதலறிமுகமிதுவல்லவோ
சீட்டா வீடு முன் காட்டெருமைக்கூட்டம்
குறுக்கே நகரும் காட்டுப்பன்றி பார்த்தும் பாரா ஆல்
புல்வெளியை இருளரக்கன் இறுக்கும் முன்
பசியாற்ற விளையும் புள்ளி மான்கள் கூட்டமே!
யானை படுத்தது போல மலை படுத்திருப்பதால்
ஆனை மலை யெனப் பெயர் சூட்டப்பட்டதா?
தேக்கு மரத்தாலேயே உருவான மரவீட்டில்
கதிரவன் எழட்டுமெனக் காத்திருந்தேன்
கானகத்துள் காலை நடை புகத்தாமதிருந்தேன்
பார்வை ஊடுருவும் கண்ணாடிச் சாளரங்கள்
முகப்பூச்சென பனி பூசிக் கொண்ட இக்குடிலில்
எஞ்சிய நாட்கள் சுவாசித்திருக்க ஆசை.

சாமக்குருவி – Little Night Jar
தோட்டக்கள்ளன்- Indian Pitta

Top Slip
Wood House---- Year of construction---1978
                          Latitude—10  28.15  north
                        Longitude—76    50.65 east
                        Altitude--- 740 metres above  MSL

                        Morning--- 22.01.2003 –wednesday- 07.10 hrs

Tuesday, January 13, 2015


காதலியே……….
வண்ணத்துப்பூச்சி இறகைப் பரிசளிக்கலாம்
ஆயின் இறகு உதிர்த்தால் மட்டுமே…..
மயில் கழுத்து நிறப்பொட்டு வைக்கலாம்
ஆயின் அது கனவில் மட்டுமே……
வானவில் சேலை நெய்து தரலாம்
ஆயின் அது சாத்தியமா……
நீலோற்பல மலர் விழிகள் ஆக்கலாம்
ஆயின் அது கை கூடுமா…..
கொவ்வைக் கனி உதடு கொடுக்கலாம்
ஆயின் அது நிறைவேறுமா….
வஞ்சிக்கொடி இடை வைக்கலாம்
ஆயின் அது சந்தேகமே…….
தாமரை மொட்டில் கொங்கை உருவாக்கலாம்
ஆயின் அது முடியுமா……..
காயாம்பூ போன்று கூந்தலை வளர்க்கலாம்
ஆயின் அது மெய்ப்படுமா….
முத்துப் போன்று பற்களை கோர்க்கலாம்
ஆயின் அது இணையுமா……
பிறைநிலா நெற்றி செய்யலாம்
                                                                   ஆயின் அது மெய்யா…….
                                                                   பாம்பின் படம் போல அல்குல் அளிக்கலாம்
                                                                   ஆயின் அது உண்மையா…..
                                                                   முழு மதியென வதனம் பூசலாம்
                                                                   ஆயின் இதுவெல்லாம் கவிதையில் மட்டுமே
                                                                   சாத்தியம் காதலியே…….

Saturday, June 28, 2014

நீர் காகம்

சூரியக்குளியலிடும் நீர்காகங்கள்

அரும்பு மீசையிலிருந்த போது நின்னை
காகமெனும் வகையென்றிருந்தேன்.
காகத்துக்கு மாறுபட்டவன் நீ!
தனியாகவமும் கூட்டமாகவும் சஞ்சரிப்பு
வானில் வரிசையாய் உயரே பறந்து
எங்கு போகிறீர் வேற்றூறுக்கா?
நீண்ட பொழுது தாமதிக்கும் பொறுமைசாலி
இலையுதிர்த்த மரங்களில் கும்பலாய் அமர்வு,
அதிசயமாயிருக்கும். நகலில் காகமென
நினைத்து தங்கள் எண்ணத்தோடு போவார்
ஒரேயொரு கருப்பு சேலை கொண்ட ஏழை
நனைந்த சேலை உலர்த்துவது போல,
காலை வெய்யிலில் உலர்த்தி நிற்பாய்.
மீனை மட்டுமே நம்பியிருப்பவளே!
நீரில்லாமல் நீயில்லையாதலின்
நீர் உன் நாமத்தில் முதன்மையாயிற்று.
நீரில் குதியாட்டமிடும் சிறாரென
கூட்டமாக குளத்தில் வரிசையில் விழுந்து
தெப்பமாய் நனைந்து, மிதந்து, தாவி
! உங்கள் களிப்பு இவனுக்கும் தாவட்டும்.
நீர் மூழிகிக்கப்பலென மாறும் காகமே!
மீனைப்பிடிக்க என்ன தந்திரம்!
நெடுங்கழுத்துப் பறவையே! நீர்க்காகமே!


Monday, March 3, 2014



நிழற்படக்கவிதை

                                               காலைப்புலர்வு


                                                                                      சின்ன சாத்தன்

இதோ! இந்த சுகந்த ஓவியம் ரசிப்பீர்!
ஒரு வினாடியில் அழிக்கப்பட்டுவிடும்
அள்ளி அள்ளிக் கண்களில் பருகிவீர்
இரவும் புலர்வும் சந்தித்த வேளை
இந்த ஓவியம் நாளைய சந்திப்பிலிருக்காது
மாறுபட்ட ஓவியங்கள் தீட்டப்படும்
புலர்வு அந்தியை நோக்கி நகரும்
அந்தி புலர்வை விரும்பிச் செல்லும்
இறப்பும் பிறப்புமாகச் சுழன்றோம்
ஓவியம் வானமெனும் தூரிகையில் தீட்டியது
அதைப் பிரதி பலிக்கும் கண்கள் ஒரு இரட்டைத்தடாகம்
நேற்றைய புலர்வைப் போல நாளையிருக்காது
அது எப்போதுமே புதுமை விரும்பி
விநாடிகள் ஒவ்வொன்றும் புத்தம் புதுசு
நாம் தான் இறந்த காலத்தில் வாழ்கிறோம்.

Thursday, February 27, 2014

நிழற்படக்கவிதை
                                            அந்தி

                                                                                             சின்ன சாத்தன்

இரவில் போஜனம் தேடும் ஜீவன்களே
வெளியில் வருக! இருள் கவிந்தாயிற்று
அந்தி வானச்சிகப்பு உவமைக் கவிஞர்ளே!
போர்க்கள குருதிக் குளத்து சிகப்பிது
நாணிய மங்கை கன்னக் குங்குமமிது
இறைவன் பிரதி மாலை மயக்கும் ஓவியன்
மாற்றி மாற்றி வண்ணம் தீட்டுவான்
நேற்று மாலை போல இன்றில்லை
இன்று மாலை போல நாளையிருக்காது
அனு மாலையும் புத்தம் புது ஓவியம்
மணப்பெண் கன்னி கழிய காத்திருந்த மாலை
பகலவன் காய்ச்சிய சூடு தணியும் பூமி
பறவைகள் ஓய்வெடுக்கப் பறந்த திசைகள்
கங்குல் மெதுவாய்க் கவிழ மறைந்தன
விளக்குகள், நட்சத்திரங்கள், நிலவு
தொடங்கும் ஆட்சி ,உதயமாகும் வரை……..

Saturday, August 24, 2013


NATURE NATURE NATURE NATURE NATURE NATURE NATURE NATURE NATURE NATURE NATURE



இயற்கை என்றுமே சரியானது

NATURE IS ALWAYS RIGHT

கவிதை ஆன்மாவின் இளைப்பாறல்













காளான்களாய் சாலையில் குடைகள் முளைக்க
மழைக்கரங்களதில் தாளமிட்டு மகிழ,
நீந்தியவாறு நாமக்கோழிகள் நனைய
தெரியுமதற்கு தன் நாமம் அழியாதென்று;
இலைகளின் தலையைத்தட்டிய மழைக்கரம்                      
அமிர்தமூட்டியது நிஜமே! தெரிகுது
குதித்தாடிய இலைகளின் குதூகலத்தில்;
மின் கம்பத்திலமர்ந்த பறவைகளே! இறகு கோதாதீர்!
இன்னும்  மேகத்தில் மழையுண்டு.
காதலி முத்தமிட மயிர்க்கால்கள் சிலிர்த்ததென
தடாக நீர்மேனி சிலிர்த்தது நிஜமே!
வாழிய! மழை! மாதம் மும்மாரி பொழியவே!
இன்னும் மேகத்தில் மழையுண்டு! நண்பரே!
குடைதேடி, தூசிதட்டி வைக்கலாமே!--------------   சின்ன சாத்தன்
-

Re-connect to Nature  Re-connect to Nature

Wednesday, July 31, 2013




மயக்குதே! 

என்னை மயக்குதே! 

மயக்குதே! 








என்னை மயக்குதே!
ஆவாரம்பூ மஞ்சலும் கொத்தமல்லி வாசமும்
                                    மயக்குதே….எனை மயக்குதே
தைமாசக்குளிரும் அதில் நின்ற மரங்களும்
                                   மயக்குதே….எனை மயக்குதே
சோளக்காடும் அதில் போர்த்திய பனியும்
ஊர்வேலங்காடும் அதன் ஒத்தையடிப்பாதையும்
                                  மயக்குதே….எனை மயக்குதே
காதலி விழியோரப் பார்வையைவிட
பொன்வண்டும் தும்பிகளின் சிறகடிப்பும்
மயக்குதே….எனை மயக்குதே
       மாங்குயிலும் மழைக்குருவியும் போல்                                           
தமிழ் விரகனின் இயற்கை வர்ணனையெனை
மயக்குதே….எனை மயக்குதே


Sunday, March 3, 2013



நிலா
 நிலாவே நிலவே நிலாவே                
இதுவரைஎத்தனை பேர் பாடினரோ
நிலாவே
யுகங்களாக எத்தனை பேர் மயங்கினரோ
நிலாவே
முற்றத்தில் தவழ்ந்தும் கடலில் மிதந்தும் நதியில் நெளிந்தும்
மயக்கியது போதும்
நிலாவே நிலவே நிலாவே
கானகம் பொழிந்த பால்நிலாவே
எத்தனை காதலுக்கு சாட்சியாயிருந்தாய்
நிலாவே
ஜன்னலோரம்முகம் காட்டும் நிலாவே
தேநீர் அருந்த வருவாயா
நிலாவே நிலவே நிலாவே
ஏரியில் முகம் பார்க்கும் வெண்ணிலாவே
தலையணை முகம் புதைக்க வருவாயா
நிலாவே நிலவே நிலாவே


Tuesday, February 26, 2013

இயற்கை அழகை விஞ்ச முடியுமா! 





இயற்கை போற்றி!

மலர்களின் நிறம் இயற்கையின் மொழியோ!
மகரந்தம் தங்கத் துகள்களோ! வாசனை மொளனமோ!









வானில் நிலாவைத்தேடி ஓடிய கண்கள்
நக்ஷ்சத்திரங்களிருந்தும் நிலாவைத் தேடக்காரணமென்ன?
கண்களே!கண்களே! இமைக்க மறப்பீரோ!







                                                                                                 மண்ணில் கொஞ்சமே எடுத்து நிறையவே கொடுத்து
மரம் மாதிரி வாழும் மனிதமெங்கே?
தேடு!தேடு! கண்களே!

















அடேங்கப்பா! இந்த நீர்காகங்களின்   மாநாட்டுக்கு                                      வாழ்த்துக்கவிதை நீங்கள் பாடுங்களேன்!







Friday, September 28, 2012

கவிதை



ஈசல்




மழை பெய்து முடிந்தது; ஈசல்கள் பறந்து வந்தன
மஞ்சள் கிரணங்கள் சாய்வாக விழுந்து மயக்கின
மாலை கவியும் முன்னம் ஈசல் வாழ்வு முடியும்
யாவரையும் மரணம் தழுவப்போவது நிச்சயம்
அதில் யாருக்காவது மாறுபட்ட கருத்துண்டா?
அப்போதுதான் இறகு விரித்த ஈசல்களுக்கு ஆனந்தம்
மஞ்சள் வெய்யிலில் மயங்கிச் சிறகடித்துத் திரியும்
விளக்கேற்றியதும் அதைச்சுற்றிக் கும்மாளமிடும்
வாலிபத்தில் மது, மாது, மாளிகை, மயக்கம்
இரவுக்குள் இறகு உதிர்ந்துத் தரையில் புரளும்
முதுமையில் தெம்பிழந்து மரணப்படுக்கை வீழம்
ஈசல்களுக்குப் பிறந்த அன்றே மரணம் நிச்சயம்
நமக்கோ ஒவ்வொரு உறுப்பாக மந்தமாகி
நெய்தீர்ந்து மெல்ல அவியும் விளக்குப் போல
அவிந்து போவோம். வாழ்ந்ததில் நிம்மதியுண்டோ?
ஏன் இப்படி? ஈசல் வாழ்வு வாழவா பூமி வந்தோம்!

சின்னசாத்தன் எழுதிய தியானக்கவிதை நூலிலிருந்து............