Showing posts with label Migrant watch. Show all posts
Showing posts with label Migrant watch. Show all posts

Tuesday, January 17, 2017

அமர் லகுடு (Amur Falcon)



அமர் லகுடு வேட்டையாடிய பகுதி



அமர் லகுடு (Amur Falcon)
அமர் லகுடு வருஷா வருஷம் சைபீரியாவிலிருந்து நாகாலாந்து வழியாக, வடக்கு இந்தியப்பகுதி வழியாக கிழக்கு மற்றும் தெற்கு ஆப்ரிக்கா வலசை போவதாக சொல்லப்பட்டுள்ளது. இந்த வருஷம் கேரள எல்லை மலம்புழா அணைக்கட்டுக்குப்பின்புல நீரின் புல்வெளியில் பூச்சிபிடித்துக்கொண்டிருப்பதாகச்சொன்னது அதிசயத்தை வரவழைத்தது. டிசம்பர் மாதவாக்கில் நண்பர் விஜயகுமாரும், சரஸ்வதியம்மா உடன் மாருதியில் சென்றோம். அதிஷ்டகரமாக எங்கள் கண்களில் (Passage Migrants)  அவை மாட்டின. மைனாவை விடச்சின்னதாக உள்ளது. ஆணைவிடப்பெண் அழகாக உள்ளது. இது மாறுபட்ட காட்சி. பொதுவாக ஆண் பறவைகள் தாம் அழகாகக்காட்சி தரும்.
மலம்புழா நீர்ப்பிடித்தம் ஓரமாகப் பாவப்பட்ட தார் சாலை வழியாகவே ஐந்து கி.மீ. சென்றிருப்போம். பிறகு மண்பாதை, இடைஇடையே இரண்டு பத்தடி அகல ஓடைகள். எதிரே பரந்த புல்வெளி. நிறைய நண்பர்கள் புகைப்படம் எடுத்து முக நூலில் ஒட்டி விட்டதால் எனக்கு புகைப்படம் எடுக்க ஆர்வமில்லாமல் போயிற்று. நண்பர் எடுத்துக்கொண்டிருந்தார். பத்து அமர் லகுடுகளைப்பார்த்திருப்பேன். குறுக்கே ஓடும் உயர்ந்த ஒயரில் அமர்வது, பிறகு பூச்சி பிடிக்க, hovering  செய்து கீழிறங்க புல் தரையில் பூச்சி பிடிப்பது என்ற பழக்கம் புதுமையாக இருந்தது.    
எப்படித்தான் இவ்வளவு தொலை தூரம் பறந்து வந்து பிறகு திரும்புகிறதோ! இது அதிசமானது. வருஷாவருஷம் வருவது ஒரு வழி, போவது சற்றே வழி மாற்றிச்செல்வது என மனிதனின் ஆராய்ச்சி இன்னும் தேவை எனத்தோன்றுகிறது. நாகாலாந்து வரும் போது நாகா மக்கள் இவைகளை வேட்டையாடி உணவுக்காக விற்பது நடந்து கொண்டிருந்ததை தற்போது NGO –க்களும் காட்டிலாகாவும் நாகாக்களை திருத்தி இருப்பதாக செய்தி வாசிப்பு உள்ளது.
இவை தங்கித்தங்கித்தான் ஆப்ரிக்கா செல்கிறது. பிறகு சைபீரியா திரும்புகிறது.வட இந்தியா வழியாகச்செல்வது, இந்த வருஷம் தெற்கே வந்தது அசாதாரணமாக உள்ளது. ஒரு வேளை போனவருஷமே வந்து, யாரும் பார்க்கவில்லையோ என்னவோ! காலநிலை மாற்றத்தால் தெற்குப்புறமாக வந்திருக்குமோ! சிகப்பு லகுடு (Kestral) மாதிரியான பழக்கவழக்கங்கள்.
எங்கள் கண்ணில் முதலில் பட்டது சிகப்பு லகுடு தாம். ஆனால் அமர் லகுடு சிகப்பு லகுடைவிட சற்று அதிக எண்ணிக்கையில் கூடுகிறது என்று டாக்டர் சலிம் அலி சொன்னதைக்கண்கூடப்பார்த்தோம். இவை மாலை வேளையில் அதிக வேட்டையில் இறங்குகிறது. சைபீரியாவில் நீர் உறைய பூச்சி தேடி இவ்வளவு தொலை வருவது வியப்பிலும் விய

Monday, April 7, 2014

கொசு உள்ளான் My book "DIARY ON THE NESTING BEHAVIOUR OF INDIAN BIRDS" available in ON LINE http://www.marymartin.com/web/selectedIndex?mEntry=140646 -


                                         
Winter visitor

Little Stint (Calidris minuta)                                              Migrant watch
            
     இந்த சின்னஞ்சிறிய பறவைகள் வடகிழக்கு, மற்றும் சைபிரியாவிலிருந்து வருவது ஆச்சர்யத்தை வரவழைக்கிறது. 2கிலோ கூடஇருக்குமா என எண்ணவைக்கும் கோழிக்குஞ்சு போன்ற பறவை 3000 மைல்களுக்கு மேல் பறந்து என்னை பார்க்க வருவது மேலும் அதிசயம். என்னை என்றால் எமது சூலூர் குளத்துக்கு வந்து, மற்ற வேடர்(Waders)களோடு கரையோரம் சிறு பூச்சி, சிப்பிப்பூச்சி,நத்தை போன்றவற்றை தேடித்தேடி, ஓடி உண்ணுவது அழகு. ஞாயிறுப்பொழுது காலை, ஒரு முதுவேனிலில் குளத்துக்கு நடந்து, தெற்குப்புற வழியில் எனது வனப்பு காதலியான குளத்தை அணுகினேன்.
            மேற்குப்புறம் அமர்ந்து தொலை நோக்கியில் பார்த்துக்கொண்டிருந்போது ஒரு மாயக்கம்பளம் மேற்கிலிருந்து மிதந்தும் வேகமாகவும் வந்தது. நீர் சூழ்ந்த சிறு திட்டில் ஒவ்வொன்றாக அமர, நான் கண்கொட்டாமல் பார்த்திருந்தேன். உலகில் நானும் கொசு உள்ளான்கள் மட்டுமே இருந்தோம். அந்த நிமிஷம் நழுவியது எதுவும் இவனுக்குத்தெரியவில்லை. இந்தக்குழுவில் 50 பறவையாவது இருக்கும். ஓடியும், நின்றும், அலகை நீரில் மூழ்கடித்தும் காலை வேளை உணவை எடுப்பது  கண்சிமிட்ட முடியாத கனவுக்காட்சி. என்னே! சுறுசுறுப்பு!
முதுகு தீற்றலான மரநிறம், வயிறு வெள்ளை, கால்களும், அலகும் கருப்பு.அலகு ஒரு அங்குலத்தில் நேர். தொந்தரவுக்கு ஆளானால், ஒருசேர, ஒருமித்தும், கட்டுக்குலையாமல் பறப்பதும், அப்படிப் பறக்கும் போது வெண்வயிறு கதிரவனின் கிரணங்களில் பளீரிடுவது பெண் வெள்ளை இடை போல கிரக்கமான சங்கதி. இவை சிறியவையாக இருப்பதால், பெரிக்ரன் ஃபால்கன் (Peregrine Falcon)போன்ற கழுகுகளுக்கு இரையாவது பரிதாபம். எதிரியைப்பார்க்கின் உடனே மனோவேகத்தில் பறக்குமிவை சதுப்பு நிலத்தில் தரைக்கூடுகளை இடுவது சைபிரியாவில் தான். மேலும் இவை பறக்கையில் கூர் இறக்கைகளில் வெள்ளை நிற லேசான கோட்டினைக் காணலாம். சலிம் அலியின் திறமையான ஆங்கில புலமையில் குழுப்பறக்கும் விதத்தை எப்படி வருணிக்கிறார்.ரசியுங்கள்! ‘When disturbed, the birds fly off swiftly all together in an orderly compact mass, their white undersides flashing in the sun from time to time as they turn and twist in unison”

            ஒரு நன்கு வளர்ந்த பறவையை Alma-Ata region, USSR பிடித்து, 9.8.1977 –ல் வளையமிட்டுப்பறக்கவிட்டதில், அதை 25.8.1990 –ல் தமிழ் நாடு கோடியக்கரையில் பிடித்துள்ளனர். அதாவது 13 வருஷம் 16 நாட்களுக்குப்பின்…. சைபீரியாவிலிருந்து, தமிழ்நாடு வருகை தர இவ்வளவு நாட்கள் ஆகியிருக்காது. நமக்கு கிடைத்தது அப்போது தான்…….

Sunday, February 23, 2014

Migrant watch
Common Tern (Sterna hirundo)

ஆலா

Common Terns from Ladak visited Sulur Lake today (23.02.2014)


                வலசை புதிரானது. அதிகாலை எழுந்து மதில் எட்டிக்குதித்து சூலூர் குளத்தை தெற்குப்புறமாக அணுகினேன். பார்த்த பறவைகளே என்னை வலம் வந்தன. திடீரென மேற்குப்புறம் ஆலாக்கள், ஒரு குழு பறந்து கிழக்கு நோக்கிப் பறந்து வந்தன. இவை எந்த வகை ஆலாக்கள்! கருப்பு வயிற்று ஆலாவா! ஆற்று ஆலாவா! மீசை ஆலாவா! சாதா ஆலாவாக இருந்தால் எனக்கு அதிஷ்டம் அடித்தது. சாதா ஆலா லடாக்கிலிருந்து வருவன. அம்மாடி தொலை தூரம்! முதல் முறை இவற்றின் அலம்பலில் என்னால் புகைப்படம் எடுக்க முடியவில்லை. தடதடவென வரிசையாக மின் கம்பியில் அமர்ந்தன. சில பறந்தவாறு அருகில் வந்தன. தவறி விட்டேன். பறந்து வடகிழக்கு பறந்தன.
ஆலாக்களை புகைப்படம் எடுப்பது மிகக்கடினம். குளத்து விளிம்பில் நடந்தேன். ஆதவன் எழ, குளப்பரப்பு வெள்ளி நிறமானது. பறவை நோக்கலும், புகைப்படம் எடுத்தலும் பொறுமையை நிறைய கற்றுக்கொடுக்கும். அரை மணிக்காத்திருத்தலுக்குப்பிறகு மீண்டும் அதிஷ்டமடித்தது. ஆலாக்கள் அலம்பல் மிக அழகானது. பறக்கும் அழகிருக்கே இன்றைக்கெல்லாம் பார்த்து பரவசப்படுவேன். இவை பல நிமிஷங்களுக்கு மரக்கிளையில் அல்லது கம்பியில் அமர்ந்திருக்க முடியாது. ஏனெனில் குட்டையான கால் மேலும் வலுவற்றது. சும்மாங்காட்டியும் விளையாட்டாக மின்கம்பியில் அமர்ந்து எழுகின்றன.
இவை லடாக்கிலிருந்து வந்த சாதா ஆலாக்களே தான். வால் பிளவு பட்டுள்ளது. சிறகுகள் வாலை விட நீண்டுள்ளன. அலகு கருப்பு, உடல் மேற்புறம் சாம்பல் நிறம். முன் நெற்றி வெள்ளை பிறகு கருப்பு தீற்றல். ஆஹா! சந்தோஷம் கொண்டேன். லடாக்கிலிருந்து இம்மாம் தூரம் எப்படி கண்ணுகளா வந்தீங்க? நீர் சூழ்ந்த திட்டில் கூடு வைக்கும் அழகு ஆலாக்களே! தரையில் இறங்கி, என்னருகில் வாருங்கள்! தங்கள் வரவு நல்வரவு ஆகுக, என கைகுலுக்க வேண்டும். Come on my beloved Common Terns!  

            

Friday, January 10, 2014

Curlew
(Numenius arquata)                                                        Migrant Watch
குதிரை மலை கோட்டான்
           
இதற்கு குதிரை மலை கோட்டான் என்று ஏன் பெயர் வந்தது? என்று தெரியவில்லை. இப்பறவையும் நானும் முன்னமே புலிகாட் கடற்கரைப்பகுதியில் அறிமுகமாகி பல வருஷங்களாயிற்று. 5.01.2014 ஞாயிறு அடையார் முகத்துவாரத்தில் நானும் நண்பர் பாஸ்கரும் பார்த்து ரசித்தோம். அலகு வலைந்தும் நீளமாயும் உள்ளது இதன் தனித்துவம். இதன் மூக்கை ஸ்கேல் கொண்டு அளக்க அரை அடி எனப்பதிவு செய்திருக்கறார் Dr. சலிம்அலி. இது மிகவும் எச்சரிக்கையான பறவையாக இருப்பதால் புகைப்படம் எடுப்பது தூரத்திலிருந்து தான் முடியும். பறக்கும் போது கர்லு எனக்குரல் கொடுப்பதால், இதற்கு ஆங்கிலப்பெயர் Curlew எனவே வைத்து விட்டனரோ! இது என்னைப்பார்க்க வடக்கு ஐரோப்பா (அ) கிழக்கு சைபிரியாவிலிருந்து வந்திருக்க வேண்டும். இது குளிர்கால வருகையாளர். விஷா இல்லாமல் இப்பறவை எத்தனை காலமும் இங்கு தங்கலாம். ஆனால் இது மார்ச் மாதம் எனக்கு டாடா, பை….பை காட்டிவிடும். குழுவாக வரும். தனியாக இப்போது கண்டேன். ஆஹா! குதிரை மலை கோட்டான்கடல் அலை உள் வாங்கும் போது,அலை ஓரமாக ஓடியும், நடந்தும், நின்றும் கடல்நீர்அலைதிவளைகள் கொணறும் மிருது மணலில் லார்வா, நத்தை, ஆயஸ்டர் களைப் பிடித்து உண்ணும் அழகு நான்  சென்னையை விட்டு கோவை வந்தும் நினைவில் புரளுகிறது.



Monday, December 30, 2013


      மாரிக்குருவி-மழைகுருவி


நீர் மேனியைக்கிள்ளிப்போகும் மாரிக்கருவி

மாரிக்குருவிகள் எவ்வளவு இருக்கும்? எனது வீட்டு முன்பு மாநாடு

Common Swallow
(Hirundo rustica)
மாரிக்குருவி
            
     இமயத்திலிருந்து வரும் இந்த குருவி பரிமாண, மாரிக்குருவிகளுக்கு மழையென்றால் பிடித்தமானது. தரையொட்டியும், வானத்து நீலவெளியிடையும் இவை அனாயசமாக பறந்தும், திரும்பியும், நம் மீது மோதவந்தது போல வந்து கடைசி நிமிஷத்தில் வளைந்தும் போகும் குறும்பு ரசிக்கக்கூடியதாகவும் இருக்கும். இவை காஷ்மீரத்து கருப்பு ரோஜாக்கள் என்பேன். பறவை பிதாமகர் சலிம் அலிக்கு ஊதாத்தேன்சிட்டு (Purple Sunbird) பிடிக்குமெனில் என் குருநாதருக்கு மாங்குயில் (Golden Oriole) பிடிக்குமெனில் எனக்கு மாரிக்கருவி பிடிக்கும். ஏனெனில் இதன் குறும்புத்தனம். பறந்தவாறே இருக்கும். என்னே! சுறுசுறுப்பு! ஏரி நீர் பரப்பின் மேல் பறந்துவாறு நீர்மேனியைக்கிள்ளுவதும், தரையை மோப்பம் பிடித்தவாறு பறந்து கொசு பிடிப்பதும், நீல வானில் பறக்கும் சிறு பூச்சிகளை லாவகமாக வேட்டையாடுவதும் அட!அட! என்ன குதியாட்டம்! இந்த பறவைகள் பறப்பதில் ஒரு கம்பீரம், ஒரு நளினம், ஒரு தன்னம்பிக்கை இருக்கும்.
            
       மாரிக்குருவிகள் காஷ்மீர், மற்றும் இமயக்குளிரின் 3000 அடிக்கு மேல் தான் காதலும் பிறகு குஞ்சுகளும் பெற்றுக்கொள்ளும். மக்கள் இங்கு உலவித்திரியும் மாரிக்கருவிகளை ஒரு வகை சிட்டுக்குருவி என் நினைத்துக்கொள்வர். இவை எப்படி திடீரென ஆகஸ்ட் மாதம் நம் பகுதிக்கு வந்தன என்ற எண்ணமற்ற மக்கள் காசு தேடி ஓட்டமா ஓட்டம். மாரிக்குருவிக்கு சுறுசுறுப்பு பிடிக்கும், எனக்கும் தான். அவைக்கு மழைத்தூறலும், குளிரும் பிடிக்கும், எனக்கும் தான். அவற்றிற்கு குறும்புத்தனம் பிடிக்கும், எனக்கும் தான். மாரிக்குருவி என எனது வலைப்பூவிற்கு பெயர் வைக்க நினைத்து, ஆங்கத்தில் சிக்கலென பிறகு மழைகுருவி என நண்பர்களிடை கலந்து முடிவாயிற்று. இப்பறவைகள் ஏரிப்பரப்பு கன்னத்தை கிள்ளுவதை புகைப்படமெடுக்க பள்ளபாளையம் குளத்தில்  50 படமெடுத்தும் சரியாகவரவில்லை. புகைப்படக்கலைஞர் யாராவது இதை முயன்று பார்க்கலாமே! அப்படிக்கிடைத்தால் எனது e-mail: sukubird@gmail.comஅனுப்பலாம். அவருக்கு Rs. 10000 பரிசு பெற்றஇமயவலம்என்ற Trekking- நூல் பரிசாக வழங்குவேன்.
            
      மாரிக்கருவிக்கு தாம்பாடி, தகைவிலான், தலையில்லாக்குருவி, அடைக்கலான், தைலான் என்பதோடு நான் செல்லமாக வைத்த பெயர் மழைகுருவி. அதுவே எனது வலைப்பூவின் பெயர். இந்த துறுதுறுப்பறவைகள் அந்தி கருக்க, நீர் சூழ்ந்த முள் மரங்களில் குழுவாகத்தங்கும். அப்போதெல்லாம் என் இல்லம் அலாதியாயிருக்கும், இப்போது மாதிரி வீடுகள் இல்லை. மழைகுருவிகள் தொலைபேசிக்கம்பிகளில் மாநாடு நடத்தும். இப்போது அரிதாகிவிட்டது. ஒவ்வொரு வலசைப்பருவத்திலும் நான் முதன் முதலில் பார்க்கும் மாரிக்குருவியை  எங்கு? எப்படிஎந்தத்தேதி, மாதம், வருஷம்? யாருடன்? எந்த நேரம்? என என் டைரியில் பதிவு செய்வேன். வலசை எப்போது வந்தன எனத்தெரிந்து விடும். ஒன்று கூட தென்படவில்லையாயின் மீண்டும் இமயத்திற்கு திரும்பு பயணம் என உணர்ந்து டைரியில் பதிவு செய்வேன். இதை சென்ற வலசைப்பருவத்தில் மாரிக்குருவி எப்போது வந்தது? எப்போது திருப்பியது? என புள்ளிவிபரம் தெரியும். தனது டைரியில் பார்த்த பறவைகளைப் பதிவு செய்து life list வைப்பவர் மட்டுமே Sincere Bird Watcher. அவரிடமிருந்து சில உபயோகமான விபரங்கள் கிடைக்கும். உதாரணத்துக்கு மாரிக்குருவி இந்த வலசைப்பருவத்தில் அதிகமாக வரவில்லை! தாமதாக வந்தது. ஏன் தாமதம்? சும்மாவாவது லட்சங்கள் செலவு செய்த காமெராவில் படம் எடுத்து FB –ல் இடுபவர் Like-ல் அவர் Like. இவர்களெல்லாம் Photographers. நல்ல புகைப்டக்கலைஞராக வாழ்த்துகள்.
மாரிக்குருவிகளின் வரவு சென்ற வலசைப்பருவம் போலில்லை. ஏன்?

பருவநிலை மாற்றம் (Climate change)

Roosting-க்கு நீர்சூழ்ந்த முள்மரங்களை, பேராசை மக்கள் வெட்டி விட்டனர்.

     வேறு காரணம் இருக்கலாம். என்னுடன் கலந்துரையாடுங்கள். வலைப்பூ வந்து படித்துவிட்டுப்போனால் மட்டும் போதாது. ஒரு வலசைபருவத்தில், சிறுவர் சிலர், ஒயரில் அமர்ந்த மாரிக்குருவிகளை உண்டிவில்லால் சிலவற்றை வீழ்த்தி விட்டனர். இதை வழியில் வந்தவன் பார்த்து, அவர்களுக்கு போதனை வகுப்பு நடத்தினேன். இது போல பல பறவைகளைக்காப்பாற்றிய சம்பவங்கள்  Bird Rescue’  எனும், எனது நூலில் வெளிவரும்.


Monday, December 23, 2013

சோளக்குருவி
Rose-coloured Starling (Sturnus roseus)

            
         இப் பறவைக்குப் பெயர் தமிழில் ரோசா மைனா, சூரைக்குருவி, சோளக்குருவி என நாமகரணம் செய்துள்ளனர். சூரைக்கருவி என்று ஏன் பெயர் வந்தது? இவை 500 – க்கு மேற்பட்ட பறவைகள் கூட மேகம் மாதிரி சோளக்காட்டின் மேல் பறந்து வந்து சோளக்கதிர்களைச் சூரையாடுவதால், நம் விவசாயிகள் இப் பெயர் வைத்திருப்பார்களோ! அத்தோடு லோகஸ்ட் (Locust) களை அழித்து விவசாயிக்கு நன்மையும் செய்கின்றன, என்பதை மறந்துவிடக்கூடாது. இவை கிழக்கு ஐரோப்பாவிலும், மேற்கு மற்றும் மத்திய ஆசியாவிலிருந்து, நமது நாட்டுக்கு வரும் பறவைகளில் முதலில் வலசை வரும் பறவைகள் என சலிம் அலி தனது The Book of Indian Birds-ல் One of our earliest winter visitors. Begins arriving July-August, depart by mid April-என்று பதிவு செய்துள்ளதை நினைவு கூறுகிறேன்.
            சோளக்குருவிகள் கோவைப்பகுதிக்கு இன்னும் வரவில்லை. இதை பல பறவை கண்காணிப்பாளர்கள் ஆமோதிக்கின்றனர். டிசம்பர் முடியப்போகிறது, அவை இன்னும் ஏன் வரவில்லை? நான் இப்பறவைகளை அரக்கோணத்தில் பட்டிமேடு குளத்தோர மின் கம்பி மற்றும் முட் செடிகளில் பத்து எண்ணிக்கையில் கண்டு தினத்தந்தியில் செய்தி கொடுத்தேன். ரயிலில் கோவை திரும்புகையில் ஊத்துக்குளி வரும் முன்னரே சோளக்காட்டுக்கு மேலே செல்லும் மின்கம்பிகளில் சொற்ப அளவில் பார்த்தேன்.
            சென்ற வலசைப்பருவங்களில் சூலூர் ஊர்வேலன்காடு, குளத்தில்(Roosting) இரவுத்தங்கல், சின்னக்குளப்பகுதி கிழக்கு குப்பை மேடு, குனியமுத்தூர் மேற்குப்புற குளம் என நிறைய சோளக்குருவிகளக்கண்டு களிப்புற்றேன். ஒரு பருவத்தில் எனது வீட்டு மதில் ஓரமிருந்த முள்முரங்கை(Erithrina indica) மரத்தில் மலர்ந்திருந்த கிரிம்சன் நிற மலர்களில் தேனுறிஞ்ச ஒரு கூட்டம் அமர்ந்தது.எனக்கு மகிழ்ச்சி கரைபுரண்டோடியது. அவைகள் நம்மூர் மைனாக்கள் துரத்தும் வரை இருந்து ஊர்வேலன்காடு நோக்கிப்பறந்தன. எத்தனைப்புகைப்படங்கள் எடுத்திருப்பேன்! கருமேகம் மாதிரி, ஒரு மாஜிக் கம்பளம் போல் ஆயிரக்கணக்கில் பறந்து வந்து சூலூர் குள நடு நீர்க்கருவேலமரங்களில், அந்தி சாயும் வேளையில் ஒருசேர அமரும். ஆதவன் மலைக்குள் மறைய, என்னால் நல்ல புகைப்படங்கள் எடுக்க முடியாமல் தவிப்பேன். ஏப்ரல் மத்தியில் சோளக்குருவிகள் ஐரோப்பா செல்ல ஆயத்தம். கொஞ்சம் கொஞ்சமாகக்  சோளக்கருவிகள் குறைய, நான் வழியனுப்பி குட்லக்சொன்ன நாட்களவை.
            இப்போது மருந்துக்குக்கூட சோளக்குருவி கோவைப்பகுதியில் இல்லை. யாருக்கு என்ன நஷ்டம்? அவை இங்கு வருகை புரியாததற்குக் காரணம், என் அறிவுக்கு எட்டியவை;-

     

சூறைக்காற்றோ!

இரவுத்தங்கல்

மாஜிக்கம்பளமோ! சூலூர் குளத்துக்கு இரவு தங்குலுக்காக வருகை

அரக்கோணம், வேலூர் மற்றும் சித்தூர் தினத்தந்தி செய்தி
1.    இருந்த சோளக்காடுகள் வீட்டுமனைப்பிரிவுகளாகிவிட்டன.
2.    எனது குருநாதர் ரத்னத்தை அலைபேசியில் தொடர்பு கொண்டபோது அவர் இப்படிச்சொன்னார்; ‘வடகிழக்குப்பருவ மழை குறிப்பிட்ட நேரத்தில் வந்தாலும், கோவைப்பகுதிகளில் தாமத மழை அதனால் சோளம் விதைப்பு தாமதமானது. சோளக்குருவி களும் இன்னும் வரக்காணோம்.’
3.    சோளக்குருவிகள் தங்க முள்மரங்கள் இல்லாதபடி மக்கள், மீன்பிடிப்பவர் குளத்துக்குள்ளிருந்ததை, வெட்டி தண்ணீர் காயவைத்து உடம்புக்கு ஊற்றிவிட்டனர். இதை பஞ்சாயித்து, கார்பரேசன், பொதுப்பணித்துறை என்ற அரசு இயந்திரம் எதுவும் தடுக்கவில்லை. சோளக்குருவி பாதுகாப்பாகத்தங்க நீர் சூழ்ந்த வேலமரங்களை விரும்புகின்றன.

வேறு காரணம் எதாவது இருந்தால் நீவிர்  எனது வலைப்பூவில் சொல்லலாம்.

First three snaps used from other co-bloggers for environmental education purpose. Thanks for them.