Showing posts with label மரங்கள். Show all posts
Showing posts with label மரங்கள். Show all posts

Sunday, October 2, 2016


செஞ்சேரி 


வனம் இந்தியா பவுண்டேசன் உபயத்தில் மரங்களுக்கு நீர்

நூறு நாள் வேலை வாய்ப்பு பெண் தொழிலாளர்களிடையே திரு. நடராஜ் உரை.


செஞ்சேரி
            செஞ்சேரி மலைக்கு இன்னொரு பெயர் மந்திரகிரி. தென்சேரி என்பது செஞ்சேரி என மறுவி விட்டது. மலைமேல் வேலாயுத சுவாமி வீற்றிருக்கிறார். மலைப்பாறைகுன்றில் ஒரு சுரங்கம் இருப்பதாகவும், அதில் சிறிது தூரம் போனால் மூச்சடைக்கும். அதற்குமேல் போக முடியாது. இந்த கிராமத்தைச்சுற்றி  திருமூர்த்தி அணைக்கட்டு நீர்க் கால்வாய் வருஷத்துக்கு 35 நாட்களாவது ஓடுவதால் இன்னும் பசுமை அப்பிக்கொண்டுள்ளது. பொதுவாக இந்த பருவத்தில் மழையின்னையால் நிலத்தடிநீர் மட்டம் குறைந்து, வாட்டமாகத்தான் உள்ளது. திடீரென ஒரு நாள் வெள்ளிக்கிழமை (2.9.16) செலக்கரிசல் 86 வயதைத்தொட்டும் சுறுசுறுப்பாக வலையவரும் பழனிக்கவுண்டரை என் ஸ்கூட்டர் பின் புறம் அமர வைத்து, அவர் வழிகாட்ட சூலூரிலிருந்து 25 கி. மீ- க்கு அப்பாலுள்ள செஞ்சேரிக்கு பறந்தேன்.
            வழியில் இத்தனை குளம் குட்டைகள் வாயைப்பிளந்து நீருக்காக தவம் கிடக்கின்றனவே என வருத்தமாயிருந்தது. தார் சாலையைத்தவிர நீர் நீச்சல் இல்லாததால் காட்சிகள் அவ்வளவு சோபிக்கவில்லை. தென்னை மரங்களை மிகுதியாகப்பார்க்கிறேன். வழியில் புளியமரத்துப்பாளையத்தில் நூறு வயதான ஆலமரம் விழுதுகளோடு பார்த்து பரவசம் மேலிட்டது. காய்ந்துபோய் பல வருஷங்களான ஒரு பெரிய குளத்துக்குள் ஒத்தையடிப்பாதையில் போய் தார் சாலையில் இணைந்தோம். எனது மூத்த நண்பர் பழனி இருந்ததால், வழி பிசகாமல் சந்திராபுரம்,  வாரப்பட்டி, முத்தக்கோனாம் பாளையம், சுல்தான் பேட்டை வழி காட்டப்பட்டு செஞ்சேரி அடைந்தோம். நல்ல வேளையாக பாதையோரத்தில் வனம் இந்தியா பவுண்டேசனின் பேருதவியால் நடப்பட்ட மரநாற்றுகளுக்கு நீர் வார்க்கும் பணியை மேற்கொண்டிருந்த வனம் இந்தியா ட்ராக்டர் டாங்க் வண்டியை அடையாளம் கண்டு நிறுத்தினோம்.
            நூறு நாள் வேலை வாய்ப்பில் பணிபுரியும் முதிய மகளிர் குடங்களில் ட்ராக்டர் டாங்க்கில் நீர் பிடித்து பாதையார நாற்றுகளுக்கு ஊற்றிக்கொண்டிருந்தனர். அந்த இடத்தில் நாங்கள் சரியாக வந்து சேர்ந்ததில் மகிழ்ச்சி கொண்டோம். நீர் அருகாமையிலுள்ள கிணறுகளில் ட்ராக்டர் டாங்க்கில் பிடித்து ஊற்றுகிறார்கள். மழைமேகங்கள் ஏன் இப்படி ஏய்க்கின்றன எனத்தெரியவில்லை. கரு மேகங்கள் கூடும் ஆனால் ஒரு சொட்டு மழை தென் மேற்குப்பருவ மழை தராது கஞ்சத்தனமாக இருந்துவிட்டது. மனிதன் ஏய்த்தால், இயற்கையும் ஏய்க்கத்தானே செய்யும். ஐந்து நிமிஷத்தில் இந்தப்புனிதப்பணியை மேற்பார்வையிடும் நடராஜன் அவர்கள் மொபட்டில் வந்து சேர்ந்தார். அங்கிருந்த இன்னொரு நண்பர் பொன்னுசாமி என்பவரை செய்ற்குழு உறுப்பினர் என அறிமுகப்படுத்தி வைத்தார்.
            அங்கிருந்து செஞ்சேரி –சுல்த்தான் பேட்டை சாலை, பச்சார் பாளையம், செஞ்சேரி மலை, குமாரபாளையம், வடவேடம்பட்டி, அருகம்பாளையம், குறிஞ்சி நகர், செஞ்சேரி மயானம் என செஞ்சேரி மலையை நோக்கிச்செல்லும் கிட்டத்தட்ட எல்லாச்சாலைகளிலும் மரநாற்றுகள் சாலையோரம் நடப்பட்டு, மூங்கில் கூடைகள் ஆடு, மாடுகள் கடிக்காமல் பாதுகாப்பாக இருக்க நாற்றுகளைச்சுற்றி வைத்திருந்தனர். காற்றில் அசையாமலிருக்க குச்சி நட்டிருந்தனர். நானாவித மர நாற்றுகளைப்பார்க்க முடிந்தது. மூவாயிரம் நாற்றுகளுக்கு மேல் நட்டிருப்பதாகச்சொன்னார். 14.9.16-க்குப்பிறகு 35 நாட்கள் திருமூர்த்தி அணைக்கட்டு நீர் கால்வாய்களில் வருவதால் மேலும் மர நாற்றுகள் நட இருப்பதாக நடராஜன் சொன்னார். அண்ணாரது தன்னலமற்ற பணியைப்பாராட்ட வேண்டும். பல உறுப்பினர்களை ஒருங்கிணைத்து முன்னின்று செயலாற்றுவது அதுவும் அன்றாடம் நேரம் ஒதுக்கிப்பணிபுரிவது குறித்து பாராட்டாமல் இருக்க முடியாது.
            மயானம் காய்ந்து போய் மழையின்மையால் வெப்பம் கொப்பளித்தது. நீர் பற்றாக்குறையிலும் வரிசைக்கிரமமாக நீர் வார்ப்பது சிரமம் தான். தினமும் ட்ராக்டர் டாங்கர் மூலம் தான் மரநாற்றுகளுக்கு நீர் வார்க்க வேண்டியுள்ளது. அதனால் வண்டி தினமும் செஞ்சேரி சாலைகளில் சுற்றிச்சுற்றி வலம் வருகிறது. சொட்டு நீர் இட வழியில்லை. பாதையோர நிழலில் வெய்யிலின் மிகையால் சற்றே ஓய்வெடுத்துக் கொண்டிருந்த நூறு நாள் முதும் பெண்களை ஒரு வேப்பமர நிழலில் நடராஜன் அவர்கள் கையசைத்து வரச்சொல்லித்திரட்டினார். என்னை இரண்டொரு வார்த்தைகள் பேசப்பணித்தார். அருகில் பழனிக்கவுண்டர், இருந்தார். முதலில் நடராஜன் அவர்கள் பேசினார். பிறகு நான் பேசினேன்.

            இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு, பிஷ்நாய் இன மக்கள் ராஜஸ்தானிலும், அதற்குப்பிறகு சிப்காட் நிகழ்விலும் குறிப்பாக பெண் மக்கள் மரங்களை வெட்ட விடாமல் தடுத்தனர். கூடி மரத்தண்டைச்சுற்றி கைகோர்த்து நின்று, முதலில் எங்களை சிரசேதம் செய்து கொன்று விட்டு பிறகு மரத்தின் மேல் கை வையுங்கள் என வெட்டப்பட இருந்த  மரங்களைக்காப்பாற்றினர். அந்த எழுச்சி எங்கு போனது? ஆகவே ஆடு, மாடு கடிக்க விடாமல் காப்பாற்றுங்கள். குடிக்கத்தண்ணீர் நாம் உற்பத்தி பண்ண முடியாது. மழையை வருவிக்க மரங்கள் தேவை, என உரையாற்றினேன். சில மாதங்கள் சம்பளம் வரவில்லை என தாக்கீது செய்தனர், மறுநாளே இது குறித்து, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயித்து ராஜ் மாண்புமிகு மந்திரிக்கு மின்னஞ்ல் செய்தேன்.  

Thursday, September 15, 2016


பொங்கலூர் காட்டூர் புதூர் மர வளர்ப்பு

மன்னிக்கவும் ராஜேஸ் குமார் அவர்களே! தங்கள் சாதனைக்கு பாராட்டுகளைத்
தெரிவித்தே ஆக வேண்டும்.
செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்                                                                       தாற்றின் அடங்கப்பெறின்.
அடக்கமே அறிவுடைமை என்பதை அறிந்து நடப்பவரின் நற்பண்பு, நல்லவர்களால் அறியப்பட்டு அவருக்குப்பெருமையை உண்டாக்கும். இந்த திருக்குறல் ஒன்றே தங்களைப்பற்றி என்னை எழுதத்தூண்டியது.
கெங்கநாயக்கன் பாளையத்தில் வாழும் இளைஞர் திரு. ராஜேஸ்குமார் S.R.S. Japanese Quail Products எனும் நிறுவனத்தை இதே கிராமத்தில் நடத்தி, கிராம மக்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறார். இவர் வனம் இந்தியா பவுண்டேசனின் அறங்காவலராக உள்ளார். இவர் விளம்பரத்தை விரும்ப வில்லையாயினும் நாம் இவரைப்பற்றிச்சொல்லத்தான் வேண்டும். ராஜேஸ் குமார் அவர்கள் பொருத்துக்கொள்ளவேண்டும். உங்கள் சாதனையைச்சொல்லும் போது நாட்டு மக்களுக்கு உத்வேகம் பிறந்து, மேலும் லட்சக்கணக்கான மரங்கள் வளர்ந்து நின்று வான் மழையைப் பொழிவிக்கும்.
4.07.2016- செவ்வாய்கிழமை, பல்லடத்தில் வனம் இந்தியா பவுண்டேசன் வாரக்கூட்டம் முடிந்ததும், வடுகபாளையம் மரநடுவிழாவில் கலந்து கொண்டோம். இந்த விழாவினை இனிதே முடித்துக்கொண்டு நானும், செந்தில் ஆறுமுகமும் ஸ்கூட்டரில் பொங்கலூரிலிருந்து தொலைவில் உள்ள கெங்கநாயக்கன் பாளையம் கிளம்பிப்போனோம். ராஜேஸ் குமார் அவர்களின் அலைபேசி எண்கூட எங்களிடம் இல்லை. அவரைச்சந்திக்க முடியுமா என்றும் தெரியவில்லை. பல்லடத்திலிருந்து 40 கி.மீட்டராவது இருக்கும், தொலை தூரம் தான். மரங்கள் எங்களை காந்தம் போல ஈர்த்து விட்டபிறகு தவிர்க்க முடியவில்லை. இதற்கு முன்பு கெங்கநாயக்கன் பாளையம் சென்றதுமில்லை. ஏனிந்த ஆவல் அவரைப்பார்க்க என, கேள்வி கேட்பதற்குள் சொல்லி விடுகிறேன்.
சுத்துப்ட்டு பதினொரு கிராமங்களில் காட்டூர் புதூர், செம்பட்டப்பாளையம், கெங்கநாயக்கன் பாளையம், சின்னக்காட்டூர், சோளியப்பக்கவுண்டன் புதூர், சந்தநாயக்கன் பாளையம், திருமலைநாயக்கன் பாளையம் ஆகிய கிராமக்குளம், குட்டைகளில் 2300 மரக்கன்றுகள் நட்டிருக்கிறார் இந்த இளைஞர். இந்த நல்ல உள்ளத்தைப்பாராட்ட வேண்டாமா? அவரது மரப்பிள்ளைகளைக்கண்டு மகிழ்ச்சி கொள்ள வேண்டாமா? அது தான் இவ்வளவு தொலைவுப்பயணம். அதுவும் ஸ்கூட்டரில்….. போகும் வழி தெரியாது விசாரித்து, விசாரித்து சக்கரங்கள் உருண்டன. இருமருங்கும் பச்சை பசேலென காட்சிகள். பிஏபி கால்வாய் மலைப்பாம்பு போல அங்கும் இங்கும் நீரற்றுநெளிந்தன. பேரமைதியில் வழுக்கிப்போன பாதையோ அகலமான தார்சாலை. போகும் வழிநெடுக கண்ணுக்கு விருந்து. மனதுக்கும், தேகத்துக்கும் காட்சிகள் சந்தனம் பூசின.
ஒரு மணிப் பொழுதுக்கு மேலாக பயணித்து, இறைவன் புண்ணியத்தில் ராஜேஸ் குமார் மேஜை எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்தோம். தேனீர் வரவழைத்தார். அவரது இலக்கு 5000 மரங்கள், இந்தப்பகுதியில் வைப்பது என தனது குறிக்கோலைப்பகிர்ந்து கொண்டார். இதில் பாதி நெருங்கியே விட்டார். மழையின்மையும், கிணற்றில் நீர் குறைவாக இருப்பதாலும் தற்சமயம் தமது சீரிய பணியை நிறுத்தி வைத்துள்ளார். எங்கெங்கு மர நாற்றுகள் நடப்பட்டுள்ளது எனத்தெரிவிக்க, நேரில் பார்த்து பரவசப்பட தமது ஊழியர் ரவியை எங்களுடன் அனுப்பி வைத்தார். இளைஞர் ரவி மோட்டார் சைக்கிளில் முன்னே செல்ல நாங்கள் பின் தொடர்ந்தோம். இவரை சம்பளத்துக்கு நியமித்துள்ளார். இவரது வேலை மரநாற்றுகளை பார்த்துக்கொள்வது, ஆடு, மாடு கடிக்காமல் பாதுகாப்பது. சொட்டுநீர் கச்சிதமாக சொட்டுகிறதா, இரும்புக்கூண்டுகள் ஒழுங்காக நிற்கின்றனவா என்பது போன்ற கண்காணிப்புப்பணிக்கு அமர்த்தியுள்ளது, அறங்காவலரின் அக்கரையையும், மரத்தின் மீது உள்ள அன்பையும் காட்டுகிறது.
 குட்டைகளின் உட்புறம், ஏரி மேடு கீழ்புறம், நீர் அளவாக நிற்கும் பகுதி ஓரங்கள், தடுப்பு அணை வழிந்து நீர் போகும் தடங்கள், எனமரக்கன்றுகள் வைத்து அசத்தியுள்ளார். கூண்டுகள் அவசியமென உள்ள மரக்கன்றுகளுக்கு இரும்புக்கூண்டுகள் வைத்துள்ளதுள்ளதோடு ஆடிக்காற்று அசைக்க முடியாத படி மரப்பாத்திக்குள் சொருகியுள்ளது அருமை. சொட்டுநீர் சிறுகருப்புக்குழாய்கள் குறுக்கும் நெடுக்குமாகப்போய் எப்படியும் மரம் வளர்த்தி தலை சிலும்ப மழை வருவிப்போம் என உறுதி கூறிப்போயின. இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில் தனது தென்னந் தோப்புக்கு நீர் தட்டுப்பாடாக இருப்பினும், அருகிலுள்ள குளம் குட்டை மரநாற்றுகளுக்கு விடுவது, மழை அருகிவரும் காலக்கட்டாயம் என உணர்ந்து, நீர் தரும் விவசாயிகளை நினைத்து நாங்கள் இதயம் நெகிழ்ந்து போனோம். கிராமம் ஒவ்வோன்றாகப்போகும் போது வழியில் பார்த்த மாடு மேய்ப்பவளிடம் இது உங்களுக்காக செலவு செய்து வளர்க்கும் மரங்கள். மாடுகளை மேயவிட்டுவிடாதீர்கள், என்றேன். நிழலில் கூடிக்கிடந்த கிராமியர்களிடம், இது உங்களுக்காக, மழைக்காக, நீருக்காக, நிழலுக்காக நீங்கள் பாதுகாக்க வேண்டும் என்றேன்.
திரு. ராஜேஸ் குமார் இந்த இளம் வயதில் தனது சீரிய பணியை வெளிக்காட்டாமல் தன்னடக்கத்துடன் இருப்பது நினைத்து நெகிழ்து போகாமல் என் செய்வது தோழரே! இவர் பாணி தனிப்பாணி! பாதையோரம் மரக்கன்றுகளை வைப்பதை விட குளம், குட்டை, தடுப்பு அணைவழிந்தோடும் பாதை, ஏரி மேடு சுற்றிலும் வைத்திருப்பது, காலத்துக்கும் இவர் பெயரைச்சொல்லி மரங்கள் தலையாட்டி நிற்கும். கோயிலில் ஒரு ட்யுப் லைட் கொடுத்தாலே வெளிச்சம் வெளியில் கசியவிடாமல், உபயம் என தன்பெயர் பொரிக்கும் காலகட்டத்தில், இவர் தனது பெயரை மரக்கூண்டில் பிணைக்க வேண்டாம் என்று சொன்னதும் வியப்பில் ஆழ்ந்தோம். அவரது அவா என்னவெனில் வனம் இந்தியா பவுண்டேசன் ஸ்டிக்கர் இட்டால், கூட காட்டூர் கிராமப்பொது மக்கள் என பெயர் பொரிக்கலாம் என்கிறார். இவரது மனசு விரிந்து, பரந்தது. வாழ்க! இத்தகைய நல்ல உள்ளங்களுக்காகவாவது பெண்கள் கூடி கும்பியடிப்பது போல கருமேகங்கள்  கூடி மழை பொழிய வருணபகவானை வேண்டுவோமாக!.
பயணித்ததும், எழுத்தும்
 ஆ. சுகுமார் (சின்ன சாத்தன்)
4, எசு.வி.எல். நகர்
சூலூர். 641 402


Saturday, September 3, 2016

கல்வெட்டு
அனுப்பபட்டி கல்வெட்டு
கூலித்தொழிலாளி





புளியமரங்கள்

ஆசிரியர் (ஓய்வு)
 அனுப்பபட்டி தர்ம சிந்தனையாளர்          

       அனுப்பபட்டி கிராமம் அப்போது செழிப்பான கிராமமாக இருந்திருக்க வேண்டும். இந்த கிராமத்தில் தான் பிரசித்தி பெற்ற விஞ்ஞானி ஜி.டி. நாயுடு பிறந்தார்.
1947-ல் சுதந்திரமடைந்த ஆண்டில் ஒரு கல்வெட்டு அனுப்பபட்டி பெரிய தனக்காரர்  (லேட்)திருவாளர் நா. வெங்கிடுசாமி நாயுடுவால் நிறுவப்பட்டு கிராமத்து மையப்பகுதியில் கல்தூண் ஒன்று நடப்பட்டுள்ளது. அதில் கண்டுள்ள வாசகம் பின்வருமாறு;-
1947 வந்தே மாதரம் சுதந்திரோதய சர்வ ஜித்துக்கு கா.நெ.மா. 200-ம் 18  7 1/A 5  80 11 ஜெய்ஹிந்த். நாவே அனுப்பபட்டி , இவ்வூரில் ஹரிஜனர் முதலிய ஏழைகளின் கல்வி வசதிக்காக   56 புளிய மரங்கள் வளர்க்கப்பட்டிருக்கின்றன.
கல்வெட்டுப்படி 1947-லேயே 56 புளிய மரங்கள் வளர்க்கப்பட்டு பலனுக்கு வந்து விட்டன. இந்தப்புளியமரங்களெல்லாம் அனுப்பபட்டிஏரியைச்சுற்றிய மேட்டு பன்டு-களில் இன்றும் ஆண்டுக்கொரு முறை  பலன் தந்து நிழல் பரப்பி வருகின்றன.
நா. வெங்கிடுசாமி நாயுடுவின் தர்ம சிந்தனையை எண்ணி வியப்பதோடு நிற்காமல், எந்தக்காலத்திலும் எல்லோராலும் மனமார போற்றக்கூடிய செயலாகக்கருதப்படுகிறது. அவர் புதல்வர்  திரு. அப்பாசாமி நாயுடு, பேரன் திரு. தாமோதரசாமி நாயுடு, கொள்ளுப்பேரன் திரு. ராமமூர்த்தி என வம்ச வழித்தோன்றல்களுக்கு  இந்த தர்ம காரியத்தால் காலத்துக்கும் புண்ணியமும், போற்றலும் தொடரும். கொள்ளுப்பேரன் மட்டுமே தற்போது உள்ளார்.
திரு. ராமமூர்த்தி தற்போது காரணம்பேட்டையில் வசிக்கிறார். 56 புளிய மரங்களின் காய்களால் வரும் பலனை நிர்வகிக்கும் உரிமை, அதாவது புளியங்காய்களில் வரும் வருமானத்தை நிர்வகித்து ஹரிஜன் முதலான ஏழைக்குழந்தைகளுக்கு ஆண்டு தோறும் கல்விக்கு செலவிடும் பொறுப்பு, எப்படியோ திரு. நா. வெங்கிடுசாமி நாயுடு வம்சத்திடமிருந்து, வருவாய்துறையினர் கைக்குப்போக, (1.8.76-க்கு முன்பு) நா. வெங்கடுசாமி நாயுடுவின் தர்ம காரியம் தொடராமல் போனது வருத்தத்திற்குரியது. அவரது குறிக்கோள், அவா நிறைவேறவில்லை. 56 புளிய மரத்தின் ஆண்டு பலன் ரூ. 50000 (சுமார்) ஏழைக்குழந்தைகளின் கல்விச்செலவுக்குப்போகாமல், தடம் மாறி ப்போனது வருத்தப்படக்கூடிய விஷயம்.

                      இதை ஈடு செய்யும் விதமாக1.8.1976- அன்று பேரன் தாமோதரசாமி நாயுடுவும், சுப்பே கவுண்டரும், (வெங்கிட்டாபுரம்) ஒரு ஜாய்ன்ட் அக்கவுண்ட் கூட்டுறவு விவசாய வங்கி, அனுப்பபட்டியில் ரூ 1619 /- வைப்புத்தொகையாக வைத்து, அதில் ஆண்டு ஒன்றுக்கு வரும் சொற்ப வட்டியை ஏழைக்குழந்தைகளுக்கு சுதந்திரதினத்தன்று சாக்லெட் வாங்கத்தான் பயன் படுத்தக்கூடியதாக உள்ளது.
இந்த தடம் மாறிப்போன புளியங்காய்ஆண்டுப்பலன் மீட்டெடுக்க, ஹரிஜனம் முதலான ஏழைகள் முயற்சியில் ஈடுபட, அவர்களுக்குள் ஒற்றுமையில்லை. அவர்களில் படித்து நல்ல உத்தியோகத்தில் இருப்பவர்கள், வெளியூரில் தங்கினாலும், தங்கள் சமூக முன்னேற்றத்தில் அக்கறையில்லாமலும், பிறந்த கிராமத்தை நினைத்துப்பார்க்காமலும் இருப்பது இன்னும் வருத்தமளிக்கறது என அனுப்பபட்டியில் வேலை பார்த்து ஓய்வு பெற்ற எண்பது வயது தாண்டிய திரு. மாசிலாமணி சொல்கிறார். இதையே வெங்கிட்டாபுரம் கூலித்தொழிலாளி திரு. குமாரசாமி  உண்மையென ஆமோதிக்கிறார்.
மேலும் திரு நா. வெங்கிடுசாமி நாயுடுவின் கொள்ளுப்பேரன் திரு ராமமூர்த்தி கல்வெட்டு தர்ம சாசனப்படி தனது சந்ததியின் உரிமையை நிலை நாட்ட நீதிமன்றம் செல்வது குறித்து அந்தக்குடும்பத்திற்கும் அக்கறை இல்லை. இதனால் அனுப்பபட்டி ஹரிஜன் உள்ளிட்ட ஏழைக்குடும்பக்குழந்தைகள் கல்விச்செலவுக்கான இந்த சலுகையை இழந்து நிற்கின்றனர்.
திரு. நா. வெங்கிடுசாமி நாயுடுவின் கல்வெட்டு சாசனத்துக்கும், அவருடைய நல்லதொரு சமூக சிந்தனைக்கும்  புறம்பாக  வருவாய்த்துறையினர் எப்படி செயல் படலாம் என்பது தான் நம் முன் நிற்கும் மில்லியன் டாலர் கேள்வி.
காலஞ்சென்ற திரு நா. வெங்கிடுசாமி நாயுடுவின் தர்மசிந்தனையை புளியமரங்களின் பலன் மூலமாக ஏழை, எளிய குழந்தைகளின் கல்விக்கு உதவ எண்ணிய சீரிய சிந்தனையை நாம் பாராட்டாமல் இருக்க முடியாது. தற்போது இந்த தர்ம சிந்தனை வேறு கிராமங்களில், ஊர்களில் தொடருகிறதா எனத் தேடிப்பார்க்க வேண்டும்.
சின்ன சாத்தன்

23.08.2016

Wednesday, April 20, 2016


ஆலமரத்தின் கதை





ஆலமரத்தின் கதை
            ஆலமரத்தின் விதை ஒரு மீன் முட்டையை விட சிறியதானாலும் வளர்ந்துவிட்ட பிறகு ரஜ, கத, துரக, பதாதிகள் கீழே தங்க நிழல் தந்து நிற்கும் ஒரு தடாகம். எத்தனை ஜூவராசிகள்! அட! அட!  அப்போதைய காலகட்டத்தில் கிராம சபையென்ன, சிறார் ஊஞ்சலாட்டமென்ன, பெண்கள் ஊர் வம்பென்ன, என எப்போதும் குழுமுமிடமாக இருக்கும். அக்காலத்தில் பணியர் என்ற வியாபார இனம் இம்மரத்தடியில் குழுமி வியாபாரம் செய்வர். ஆலமரத்தடியில் வியாபாரம் நடத்தினால் கொடுக்கல், வாங்கல் பிரமாதமாக நடக்குமாம். விழாக்கள் வேறு இம்மரத்தடியில் ஜோர் படுமாம். பல மருத்துவ குணங்களை உள்ளடக்கியது. பணியர் இதனடியில் கூடுவதால் இதற்கு Banyan Tree என்று நாமகரணம் செய்விக்கப்பட்டது. எனது மர குருநாதர் வேலுசாமி ஐயாவுக்கு இந்த மரம் எனில் உயிர். அவரது உற்ற தோழர் பழனி ஐயா ஆலான் என்று தான் பகருவார். இருவரும் வாட்ட சாட்டமாக 6 அடிக்கு மேல் 80 வயது தாண்டி இருந்தனர். பழனிக்கவுண்டர் கடின உழைப்பில் தண்ணீர் சுமந்து, சுமந்து மரங்களை செலக்கரிசிலில் வளர்த்தார். வேலுக்கவுண்டர் காசு செலவு செய்தார். இவ்வளவு கடின உழைப்பிலும் ஊர் மக்கள் விட்டேத்தி- யாக இருப்பது எனக்கு வியப்பாக உள்ளது. ஒருவரும் துணைக்கு வரவில்லை. இளைஞர்கள் தாங்கள் உண்டு தங்கள் படிப்பும், கனவுக்கன்னிகளும் உண்டு என்று இருக்கின்றனர். பிற மனிதர்கள் தானுண்டு தங்கள் பொண்டு, பிள்ளையுண்டு என பிழைபைப்ப்பார்த்து கடுகு உள்ளத்தோடு இருக்கின்றனர். ஆலமரம் இனி இப்பூமியில் அதுவும் ஊருக்குள் வாழ முடியாத நிலை ஏற்பட்டு விட்டது எனலாம். காரணங்கள்;-
# இடத்தை அடைக்கிறது (ஆம்! ரியல் எஸ்டேட் பாதிக்குமே!)
#வேரும் விழுதும் விடும் போது அருகில் உள்ள கட்டிடம் பாதிக்கும்.

கொஞ்சம் நஞ்சம் இருக்கும் மரங்களின் விழுதுகளை ஊன்ற விடாமல் மரத்தின் கீழ் வியாபாரம், தண்டுகளில் ஆணியடிப்பது, விழுதுகளில் ஊஞ்சலாடுவது, இதில் மாடு, எருமை குட்டி ஈனும் போது வரும் நஞ்சை பையிலிட்டுக்கட்டுவது, விழுது ஊன்ற வழியில்லாமல் தார் ரோடு இடுவது, ஏரி மேட்டில் வைத்து, விழுது நீரில் ஊசலாடுவது போல சகல விதமான துன்மார்க்க செயல்களையும் செய்து ஆலானை வாழ வழியற்றுப்போகுமாறு செய்வது மனிதன் உள்ளத்தில் கருணை என்பது துடைத்தெறியப்பட்டதைக்காட்டுகிறது. நீங்களெங்கே! நம் முன்னோர்களெங்கே! மண்ணில் ஆசை வைத்த மக்கள் உருப்படுவது கிடையாது. ஆலானுக்கு நிச்சயமாக இடம் தர மாட்டார்கள். அந்தகோ!
நீ மரமல்ல மகான்

ஆலமர நிழல் கிராம மையம்
அக்கால கிராம மக்களுக்கு நன்றி
ஆல் எனக்கு ஒரு சின்னத்தடாகம்
தர்ம சிந்தனை கிராமத்தாருக்கு;
ஆல் மக்கள் நீதிசபை
ஆலம் பழங்களின் சிகப்பு
இதயம் சுண்டும் காதலி விழிகள்
தடாகம் நிறையப் பறவைகள்
கிளைகள் தோறும் பறவையொலி
ஓ! ஆலே! வாழ்ந்தாலுன் போல
பெரு வாழ்வு வாழனும் பூமியில்
உன் மடி தொங்கும் விழுதுகளில்
ஊஞ்சலாடுவேன். சந்தன நிழலே!
மனசுக்குள் ஆனந்தம் முட்டும்
மைனா நானா வித ஒலி கூட்டும்
வா! உண்ணு! இளைப்பாறு!
செர்ரி நிறப்பழங்கள் அசைந்து கூப்பிடும்.
குக்குறுவான், மாங்குயில், கொண்டைக்குயில்
நீந்தும்; ஆல் எனக்கு சின்னத்தடாகம்.
சிறார் கும்மாளமிடும் திடல்
உன்னை அன்னாந்து பார்த்து
பெருமூச்சு விடுவேன்; முத்தமொன்று
கட்டிப்பிடித்து ஈய்வேன்
ஆயின் என் கைகள் போதாது
பரந்த மனசு போல நீ விரிந்தவன்
தர்மவான் போல உயர்ந்தவன்
உனை அண்டி எத்தனை ஜீவன்கள்!
ஆல் எனத்தழைத்து விரியணும்
ஆசி நல்கல் இப்போது புரியது.

நீ மரமல்ல மகான்!

Wednesday, January 27, 2016


எனது Trekking நூல் " மலை முகடு' வெளி வந்து விட்டது. நூல் பெற sandhyapathippagam@gmail.com தொடர்பு கொள்ளவும்.  



ஆலமரம் கார்த்திகையில் இலைகள் உதிர்க்காதே!
            
                       செலக்கரிசலிலிருந்து 86 வயது இளைஞர் பழனிக்கவுண்டர் தொலை பேசினார்.
“சந்தைப்பேட்டையில் நிற்கும் 25 வயசு ஆலமரம் சுத்தமா இல உதிர்த்துச்சு! நீங்க இதுக்கு என்ன பண்ணுவீங்களோ, தெரியாது. ஆலன எப்படியாவது பொழைக்க வைக்கணும்.”

ஸ்கூட்டரில் 10 மைல் தூரத்திலிருக்கும் செலக்கரிசல் கிராமத்துக்கு விரைந்தேன். இலைகளெல்லாம் உதிர்த்து பரிதாபமாக நின்றது. எத்தனை பேருக்கு நிழல் கொடுத்து நின்ற மரம். அதன் உடம்பில் சில ஆணிகள். மனிதன் விளம்பரத்துக்காக அடித்திருந்தான். ஏசுவிற்கு சிலுவையில் ஆணிகள் போல எனக்குத் தெரிந்தன.  விரல்கள் போன்ற சிமிறுகள் லகுவாக ஒடிந்தன. உள்ளே ஓட்டை, அதில் சிறு வெண்புழுக்கள். பழங்கள்கரிந்து போயிருந்தன. மாதிரிகளை எடுத்தேன். நோயாளியாய், எலும்புகூடாய் நின்ற 50 அடி உயர ஆலமரத்தை புகைப்படம் எடுத்தேன். மறுநாள் கோயம்புத்தூர் IFGTB சென்று விவசாய அதிகாரி ரோகிலா, Dr. மோகன்,(Pathology) மற்றும் Dr. Jacob (Entomology) ஆகியோரைக்கலந்து ஆலோசிக்க, பெரிய ஜிவனை பழைய மாதிரி உயிர்ப்பிக்க சில வழிவகைகள் கிடைக்கப்பெற்றேன். மீண்டும் செலக்கரிசல் சென்று, ஒரு கை வாகு கிளையை ஒடித்துப்பார்க்க அதில் வெண் பாலும்,வெட்டக்கடினமாயும் இருந்தது. சிகிச்சை அளிக்கலாமென முடிவு செய்து சூலூரில் டைக்களவஸ் 100 மிகி வாங்கிக்கொண்டு ஸ்கூட்டரில் பறந்தேன். பத்துக்குடம் நீர் (அங்கு கிடைப்பதற்கு அரியது!) சேகரித்து, மருந்தை அதில் கலக்கி, வேலுக்குட்டி ஊற்றினார். பழனிக்கவுண்டர் கடப்பாரையில் குத்திக்கொடுக்க, வேரைச்சுற்றிலும் ஊற்றினார். இந்த ஆலமரம் பிளைக்குமா ? வீழ்ந்து படுமா? சிவபெருமானே உணர்வார். மனித முயற்சி ஒரு அளவோடு மட்டுமே…….வேலுக்கவுண்டர், கூட இருந்தார் . சிவனை வேண்டிக்கொண்டோம். இரண்டு கவுண்டர்களும் செலக்கரிச்சலில் பசுமைப்புரட்சி செய்தவர்கள். அவர்களின் சேவை மகத்தானது. மருந்து கிளை முழுதும் பரவ 1000 லிட்டர் ரூ 200 என வண்டியில் நீர் வாங்கி, மடை கட்டி  ஊற்றினோம். இது மாதிரி வாரம் ஒரு முறை வண்டி நீர் ஊற்றி சிவபெருமானை வேண்டி பிரார்த்தித்தோம். பலன் கொடுப்பது அவர் அனுகிரகத்தில், என்ன நிகழும்?…………………

Tuesday, June 30, 2015


மரம் எனது உயிர்


86 year old Sri Palanisami in action. He planting a Mango sapling in front of their village Library

S/Sri Palanisami( 86 age) and Velusami,(81 age) Selakarachal villager, 


மரம் எனது உயிர்
இதை கலங்கல் கிளை நூலகத்திறப்பு விழாவின் போது மேடையில் சொன்னவர் 81 வயது மனதளவில் இளைஞர் திரு. வேலுசாமி, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். இவர் செலங்கரிசல் எனும் கிராமத்தைச்சார்ந்தவர். காற்று பொச, பொச என வீசும் நீர் தட்டுப்பாடு உள்ள கிராமத்தில் ஆயிரம் மரம் வளர்த்த ஆபூர்வர். இவரது விவசாய நிலம் கைகொடுக்காதது போல, இங்கிருக்கும் பெரும்பாலான விவசாயிகள் அதே நிலைமையில் உளர். விவசாய மேட்டுக்காடுகளை காற்றாலைக்கு விற்றும், வாடகைக்கும் தந்து விட்டனர் பல விவசாயிகள். மர வேலுசாமி உண்மையில் மரம் தான். மரம் போல பலனை எதிர் பார்க்காமல் மரங்களை நட்டு வளர்க்கிறார். தனது சொந்தக்காசை செலவு செய்து மரங்களைப் பேணுகிறார்.
இது மாதிரி ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியரைப்பார்ப்பது அரிது. தனது இரண்டு மாத ஓய்வூதியப்பணம் ரூ. 40.000-த்தை வேலியிட்டு, மரநாற்றுகள்  கோயிலைச்சுற்றி, வைத்துள்ளார். நூலகத்தைச்சுற்றி, ஊராட்சியைச்சுற்றி மரங்கள் வைத்து வளர்த்து சோலைக்குள்அவை இயங்குவது போல குழுகுழு வென உள்ளது. மக்கள் மூடர்களாக உள்ளனர். ஆடு வளர்க்க மரக்கிளைகளை ஒடிக்கின்றனர். இவரது நண்பர் திரு, பழனிசாமி, 86 வயது பிராயத்தவர் இவருக்கு உறுதுணையாக உள்ளது, பக்கபலம். இரவுப்பொழுது கூட ஆடு வளர்க்கும் மூடர்கள் மரச்சிமிறு முறிப்பவர்களை நான் எப்படித்தடுப்பது என்கிறார்கள், இந்த பசுமைப்போராளிகள். புங்கன், நாவல், வேம்பு, மலையரசு, மரமல்லி, அரசு, அத்தி, மா என வகை, வகையாக வைத்து வளர்த்துள்ளனர்.
நான் கல்யாணமுருங்கை வேண்டுமென கேட்க, தார் சாலையோரமிருந்த ஒரேஒரு மரத்தில் அரிவாள் கொண்டு வந்து மூன்று கோல்கள் முள்ளுடன் வெட்டிக்கொடுத்த, இந்த இளைஞர்கள் வயதில் தான் முதியவர், ஆனால் செயல்களில் இளமை ததும்புகறது. கோயில், பள்ளி, அரசு அலுவலகம், பாதையோரம், புறம்போக்கு நிலம் என மரநாற்றுகள் நடப்பட்டு, அவைகளை வளர்த்து பசுமைப்போர்வையால் செலக்கரிசல் கிராமத்தைப்போர்த்தியுள்ளனர். பல வருடங்குளுக்கு முன்பு இவரது கிராம வீட்டுக்குச்சென்று என்னை அறிமுகப்படுத்திவிட்டு, என்னால் முடிந்த ரூ. 500 கொடுத்து அவரை மனசாற வாழ்த்தினேன். இவரை இளைஞர்கள் முன் உதாரண புருசராக ஏற்று, ஒவ்வொரு கிராமத்திலும் மர வேலுசாமி உருவெடுக்க வேண்டும்.
 உங்களுக்குள் உயிர் மூச்சாக சுழலுவது மரங்கள் சுத்திகரித்த காற்று. பிறகேன் மரங்களை உதாசினப்படுத்துகிறீர்கள்? நமது வாழ்வு ஆதாரமே மரங்கள் தாம். அவைகளை அழித்து விட்டு இன்னொரு சோமாலியா போல இந்தியாவை ஆக்குதல் தகுமா? தற்போது, எங்களின் நமது சுற்றுச்சூழலைக்காப்போம் ( protect Our Environment Trust) POET-என்ற இயக்கத்தின் மூலம் மரநாற்றுகளை மூட்டையிலிட்டு, கோவை கணபதியிலிருந்து செலக்கரிசல் கிராமத்துக்கு, 35 கி.மீ ஸ்கூட்டரில் பிரயாணித்து, ஆர்வப்பட்டு வளர்த்த முன்வரும் விவசாயிகள், மற்றும் மாணவிகள், குடிமக்கள் என இலவசமாக வினியோகிக்கிறோம். சில மரநாற்றுகளை நடவும் செய்தோம். இளைஞர்களே!  ஒரு பத்து விழுக்காடு மரத்தை நேசித்து, உங்கள் ஊரை, உங்கள் கிராமத்தை பச்சைக்கம்பளம் போர்த்துங்கள். காய்ந்து போன நதிகள் மீண்டும் உயிர்தெழும் தோழர்களே! நம்பிக்கையோடு செயல் படுங்கள். நீருக்காக, கேரளத்தையும், கர்நாடகத்தையும் கையேந்தி நிற்கும் அவலத்தை ஒழிப்போம். மரங்களை வளர்த்து மழை வருவிப்போம். சுபிட்சம் எங்கும் பரவி ஓடும் தோழா! நம் சுபிட்சத்தை மரம் பார்த்துக்கொள்ளும்.
ஓ! மரமே! எனதுஉள்மூச்சு உனது வெளிமூச்சு
எனது வெளிமூச்சு உனது உள்மூச்சு


Friday, March 14, 2014


பருவ காலங்கள்




Pink poui (Tabebuia rosea)

பருவ காலங்கள்

தமிழ் மண்ணில் பருவ காலங்கள் ஆறு. கார் காலம், கூதிர் காலம், முன் பனிக்காலம், பின் பனிக்காலம், இளவேனிற் காலம், மற்றும் முதுவேனிற் காலம். ஆனால் மேற்கத்திய நாடுகளில் நான்கு பருவ காலங்கள். வசந்த காலம்(Spring), வேனிற் காலம்(Summer), குளிர் காலம்(Winter) மற்றும் இலையுதிர் காலம்(Autumn). மேற்கத்தியருக்கு மூன்று, மூன்று மாதங்களாகப் பருவ காலம். நமக்கு இரண்டு, இரண்டு மாதங்களாக பருவ காலம். கார்த்திகை, மார்கழி பின் பனிக்காலம். பங்குனி, சித்திரை முதுவேனிற் காலம், தை, மாசி இளவேனிற் காலம், புரட்டாசி, ஐப்பசி முன் பனிக்காலம், வைகாசி, ஆனி கார் காலம், ஆடி, ஆவணி கூதிர் காலம்.
உலக வெப்பமயமாதலில் நமது நாட்டில் பருவ காலங்கள் வெகுவாக மாறி விட்டன. ‘ஆடிப்பட்டம் தேடி விதைவைகாசி, ஆனியில் தென்மேற்குப்பருவ மழை அடை மழையாக இருக்கும். மழை விட்டதும் ஆனியில் விதைப்பார்கள். ஆடி, ஆவணி குளிர் காலம். மழை பெய்ததில் குளம், குட்டை நிறைந்திருக்கும், பூமி குளிர்ந்திருக்கும். ஆடிக்காற்று வீச கூதிர் எனும் குளிரில் சாளரம் திறக்கவிடாது. குளிர் காற்றில் நடுங்கிப்போய் தீமூட்டி குளிர் காய்வர். கார்த்திகை தீபம் வரிசையாக வீடு தோறும் ஏற்றும் போது அத்தோடு பனிக்காலம் முடிகிறது. சித்திரையில் கொழுத்தும் வெய்யில் முடிய முடிய இடி மின்னலுடன் மழை. ஐப்பசியில் வடகிழக்கு பருவ மழை. சார மழை, கொங்க மழை, அடை மழை, எனப்பெயர் வைத்து அழைத்த மழைகள் எங்கே? மக்கள் தொகை, வாகனப்பெருக்கம், காடு அழிப்பு, மாந்தரின் பேராசைக்கு ஈடு கொடுக்க முடியாமல் சிதையும் இயற்கை, இதுவெல்லாம் பருவ காலங்களை பாதித்து விட்டன.
வெப்பம், அதிவெப்பம், மிக அதிவெப்பம், அக்னிவெப்பம் என்று, தானே பருவ காலங்களை மனிதன் மாற்றி விட்டு, குளிர் சாதனப்பெட்டி வைத்து உட்கார்ந்து விட்டான். இந்த அவல நிலை மாற அடர்ந்த காடுகளை உருவாக்கவேண்டும். மலைகளில் ஊர் சமைத்ததை கைவிட்டு சமதளம் வந்து குடியேற வேண்டும். மீண்டும் மலைகளில் காடுகள் உருவாக்கினால் பருவ காலங்களை மீட்டு எடுக்கலாம். இல்லையெனில் வரும் காலங்களில் பருவ காலத்தை நாம் கணிக்க முடியாது திணருவோம்.
இப்போது இந்த மாசி மாதம் இளவேணிற்காலம். இது நமக்கு பனி முடிந்து கதிரவன் இதமான வெப்பம் தரும் பருவம். இலைகள் உதிர்ந்து, மலர்கள் வர்ஷிக்கத் தொடங்கி விட்டன.

மரங்களைப்போற்றுவோம்

Sunday, March 24, 2013


                                                                 




என்னைச்சுற்றி மூச்சு விடும் மரங்கள்
                         நான் வளர்த்த மரங்கள்



வேம்பு   
பிங்க் கேசியா     நெல்லி
பியர்ல் புரூட்       கொய்யா                                    
மரமல்லி
குல்மோஹர்
பர்ப்பிள் பாகுனியா                                                                          
சப்போட்டா                                            
                                                           என்எநனநண்பர்களை என்னோடு      
                                                                                   வைத்துக்கொண்டேன்.


                                                                 நானும் நீயும் உயிருள் உயிர்
                                          
சவன்டால்                                              கரியமல வாயு விட நீயதை சுவாசித்து
சப்போட்டா                                        
                                                                எனக்குப் பிராணவாயு ஊட்டினாய்
தேக்கு                                                
                                                                தினம் நீருற்றி உபசரித்தேன்
அருவி மரம்                                           வெப்பம் தணித்து என்னைக் குளிர்வித்தாய்
பூவரசு                                                    களையெடுத்து ஊட்டமாக்கினேன்
இலந்தை                                               சிகப்புப்பூ கம்பளம் விரித்தாய்
கிளிசிரிடியம்                                         இவன் படுத்துறங்க அழைத்தாய்
புளியமரம்                                               தண்டிலேரிய கரையான் தட்டினேன்
ஆலமரம்                                                சாமரமாய் காற்றுவீசி நின்றாய்
நாவல்மரம்                                            தளிரிலை அன்போடு வருடினேன்
மழைமரம்                                              கற்கண்டுப் பழம் ஈன்று தந்தாய்
அரசமரம்                                               நல்ல நண்பனில்லாக் குறை தீர்த்தாய்
மலைஅரசன்                                          உள்ளங்கை இருந்த நண்பனே!
கொடுக்காபுளி                                       வானுயர வளர்ந்து நின்றாய்
வில்வமரம்                                             அன்னாந்து பார்த்தேன்
மாமரம்                                                   சந்தனமென நிழல் பூசி விட்டாய்
மரமல்லி                                                 நண்பனே! நான் ஊற்றியதோ வாளிநீர்
அத்தி                                                       நீயோ நகர்ந்த கருமேகத்தை நிறுத்தி
சரக்கொன்றை                                      அருவியாகக் கொட்ட வைத்தாய்
அசோகமரம்                                          நீ ஒருவனே போதும் நண்பனாய்
பெல்டாபாரம்                                        நீயும் நானும் உயிருக்குள் உயிர்
பெபுபியா ரோசியா                               
இலுப்பை
நாகலிங்கம்
உசிலை
உலவம்பஞ்சு மரம்
கடம்பமரம்                                             மரமில்லையேல் மனித             
                        சமுதாயம் இல்லை
ஏழிலிலைப்பாலை
புங்கன்
மலைவேம்பு
பாதாமி
புன்னை
ஜக்கரண்டா
கொன்றை