Thursday, August 30, 2012

இமயவலம்


இமயவலம்
Himalaya Trekking

நாகருவில் காலை 3.15 மணிக்கு கேம்ப் உதவியாளர் எழுப்பிவிட்டார். பல் தேய்க்க முடியாது.சுற்றிலும் நேற்றைய பனிப்பொழிவில் மூன்றடிக்கு பனி படிந்துவிட்டது. எங்கள் கேம்ப் கூடாரங்கள் இடமின்மையால்சரிவிலிருந்தது. எங்கு நோக்கிலும் பனிமலைகள்.20 கிலோ மூட்டை முதுகில் ஏற்றி வரிசையாக நின்றோம். எண்ணிக்கை முடிக்க தடுமாற்றம்.இரவு தூக்கமின்மை தான் காரணம்.மூன்று முறை தப்பிதமாகி பிறகு சரியாகியது.காலை 5 மணிக்கே வெளிச்சம். எங்கும் பனிக்கட்டி. நடந்தோம் பனியில் ஒரு அடி புதைந்த நடை. உயரமான பனி மலை உச்சிகள், சரிவுகள, ஊடே ஊடே தாள நெகிழ்ந்த தடாகங்கள்.
மரமற்ற பனி வெளி. பத்தாயிரம் அடி உயரத்துக்கு மேல் தாவரங்கள் வளராது. நான் உலாப்போனது 13800 அடி உச்சி. சார்ப்பாஸ் எனும் இமயம். கண்களில் பனிக் கண்ணாடி. இது இல்லையானால் கண் கூசும். அனைத்து வெப்ப உடைகளும் உடலில் இட்டுக்கொண்டு, குளிரில் நடுங்கியவாறு நடந்தோம். மூக்கிலிருந்தும், வாயிலிருந்தும் உடம்பின் சூடான புகை வெளியானது. பனிமலையில் ஏறினாலும் சில சமயம் தாகமெடுத்தது. பனிக்கட்டியை எடுத்து வாயில் போட்டுக்கொண்டேன். சார்பாஸ் எனும் இடம் இரு மலைகளுக்கிடையே பனி வெட்டவெளி. வாழ்வில் இது போல மகிழ்வும், துக்கமும் கொண்டதில்லை. பனிமலைகளை உயிரைக்கையில் பிடித்துக்கொண்டு ஏறுவது, பிறகு கி.மீ கணக்கில் பனி சமவெளியில் நடப்பது என காலை 5 முதல் மதியம் ஒரு மணி வரை நடந்தேன், ஏறினேன். பல முறை வழுக்கினேன்.கைகளில் உறையோடு பனிப்பாறைகள் பற்றி ஏறினேன். கடப்பேனா? இல்லை சமாதியாகி விடுவேனா?
ஒரு முறை பனிப்புயல் எழுந்து சரிவிலிருந்து, மேலே அலை அலையாகச்சென்றன.வயிற்றில் பயப்பந்து எழந்து அடங்கியது.சரிவில் வழுக்கிப் போனால் யாரும் அவரைத்தூக்கி வரமுடியாது. எங்கு போய் விழுவாரோ! மேலே ஏறி வர பிடிமானம் கிடையாது. பனிப்பொழிவு ஏற்பட்டால் நாங்கள் அதோகதி தான். ‘அவலான்ச் ஒரு சின்ன கோலி குண்டு போல புறப்பட்டால் பெரிய கால்பந்து போல வந்து மோதினால் கதை முடிந்த்து. பனிக்கட்டி எடையிருக்காது என்று எண்ண வேண்டாம். அடித்தால் கால் முறிந்து விடும். கால்கள் நடுங்கிக்கெஞ்சின. பல சமயம் விலங்கு போல ஏறினேன். நான் காலுக்கு ஒரு சாக்ஸ் தான் அணிந்திருந்தேன். Frost bite எனும் பனிக்கடி கால் விரல்களுக்கு ஏற்பட்டால் அந்தப்பகுதி விரலில் மட்டும்இரத்த ஓட்டமிருக்காது.பிறகு கால் விரல் எடுக்க வேண்டியது தான்.
திடீரென மூடுபனி எழுந்தது. பயம் வயிற்றைக்கவ்வியது. வழி தெரியாமல் எப்படிப்போவது? சில வினாடி ஸ்தம்பித்துப்போனேன் பனி ஓரடி தான் இருக்குமென கால் வைத்தால் சில இடத்தில் முழங்கால் வரை போனது அச்சமூட்டியது. மெல்ல என்முன்னே பள்ளத்தாக்கு விரிந்தது. மூன்றடி அகலத்துக்கு சறுக்கு பாதையமைக்க, மலை உச்சியிலிருந்து முதலில் ஒருவர் செல்வார். அதன்பின் நான். பின்பிட்டத்தைப்பனிக்கட்டியில் பதித்து, கால்கள் இரண்டையும் அகலவிரித்துக்கொண்டு,  ஓ! சொர்க்கமே! இது தான் சொர்க்கம். சாய்வாக படுத்துச்சென்றால் வாவ! என்ன வேகம்! நான் நானாக இல்லாத கணங்களிவை. பின்தள்ளி நின்று பார்த்தால் சறுக்கி வந்த பாதை (சுமார் 5 கி.மீ இருக்கும்) பிரமிப்பாக இருந்தது.

No comments:

Post a Comment