Himalaya Trekking
ட்ரெக்கிங்-கை வனவலம் என்று சொல்வேன்.
மழை
வரும் போலிருந்தது, தூறல் போட ஆரம்பித்ததும்,
காமெராவை உறையில் போட ஆரம்பித்தேன்.மழை பெய்தால்
வழுக்கி, வழுக்கி வரவேண்டியதுதான். பெரும்
மழை பெய்தால் ட்ரெக் பை, துணிகள் நனைந்து எடையேறி நடப்பது படுசிரமமாகிவிடும்.
நடுங்க ஆரம்பித்தோம். 'இடிஇடி'த்தது.மரங்களடியில் அமர முடியாது. இடி விழலாம். பயந்தவாறு நடந்தேன். அண்ணாந்து பார்த்தால், மலைப்பு கொள்ள வேண்டியிருந்தது. எப்படி ஏறப்போகிறோம்!
அவ்வளவு தூரமா! என திகைப்பு ஏற்பட்டது.எனவே பத்தடி தூரம் மட்டும் பார்த்துக்கொண்டு நடந்தால் போதுமானது. 'மடங்கி மடங்கி'ஏறினோம். மழைத்தூறல்-- ஏறும் போது, இரு கைகளாலும், 10 கிலோ எடை முதுகுப்பையாலும், புவியீர்ப்பை மையத்தில் சரியாக
விழச்செய்து நடந்தோம்.
அந்த
வழியாக மூன்று இமயமலைப் வாசிகளான இளம் பெண்கள் முதுகில்வெண்சாக்குடன் வந்தனர்.’பஹன்
ஏக் போட்டோ’ என தயவாகக் கேட்டு நிழற்படம் எடுத்தேன். அவர்கள் கால்களில் வெறும்
சாதாரண ‘கட் சூ’. விரல்களில் லேஸ் போட்டவாறு நடக்கின்றனர். எங்களுக்காக மலைமீது,
பனிக்குளிரில் காய்கறி, அரிசி, கோதுமை கொண்டு போகின்றனர். அவர்கள் தங்கள் வயிற்றுப்பாட்டுக்காக
எப்படியெல்லாம் தங்களை சிரமப்படுத்திக்கொள்கிறார்களென என் மனம் கசிந்தது. அவர்களுக்கு
பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் கொடுத்தேன். தன்யவாத்பஹனோ
ஆஹா!
வாழ்நாளில் இது போல பரவசத்தின் உச்சியில் இருந்ததில்லை. தொலைநோக்கியில் ராதாப்பாணியிலிருந்து பார்த்த நீலநிறடெண்ட் வந்தது.
அங்கு சிறு திறந்த வெளிக்கடை. தீ, கட்டைகளில் எரிந்து
கொண்டிருந்தது. இதயமும், நுரையீரல்களும்
அழுத்தி,அழுத்தி ஆக்சிஜன் எடுத்து, கரியமலவாயுவை
வெளியேற்றிக்கலைத்துப்போய், கால்கள் கெஞ்ச, உச்சியை அடைந்து ஓய்வெடுக்கும் முதல் பத்துநிமிஷங்கள், ஆஹா! இந்த சின்னசாத்தன் வெறும் எழுத்துகளால் விளக்க முடியாது.
அதை மலையேறி உணர வேண்டும்.
பனிமலைவாசி,அலுமினிய
திறந்த
‘கெட்டி’லில் கொதித்த தேநீரில் புதினா,
இஞ்சி எல்லாம் இட்டு அருமையான தேநீர் தயாரித்துத்தந்தார். தேநீர் எட்டு ருபாய். பனிரெண்டாயிரம் அடி உயரத்தில் கிடைக்குமா?
வாவ்! அருமை! பனிமலை வருடிய
குளிருக்கு தேநீர் 'சுடச்சுட' தொண்டையில் இறங்கியது. அந்த இடம்
சுவர்க்கமாக இருந்தது. ஐஸ் கட்டி மழை பெய்தது.எனது தோள்பை மீது வீழ்ந்து அரைஅங்குலத்துக்குப்படிந்தது. குகை என்று சொல்ல முடியாத, உள்வாங்கிய குழிவில் அமர்ந்திருந்தோம்.
அருகில் தீ எரிந்து கொண்டிருந்தது. குளிருக்கு
படு இதமாக இருந்தது. உள்ளங்கை வாட்ட தீ நாக்குகள். ஓ! சுவர்க்கம் இது தானா! கருப்பு நாய் மேல் ஐஸ் துகள்கள்வீழ்ந்தன. பாவம். அதை என்னருகில் வரவழைத்து நிறுத்தினேன்.
ஆலம்கட்டி மழை பார்த்து எவ்வளவு நாளாயிற்று. சுற்றிலும் ஐஸ்கட்டி மலை மடிப்புகள், இரண்டடியில் எரியும் நெருப்பின் கனப்பு. கையில் சுடச்சுடத் தேநீர். இறைவன் என்னுள் சுகந்தமாக ஆனந்திக்கிறார். மலையேற்றமா! வனவலமா! உடலும், மனமும், ஆன்மாவும் ஒரே லயம் தோழா! ஏறி ஏறி கால்கள் கெஞ்ச, மூச்சிறைப்பது எனக்கு மட்டும் கேட்க, காதோரம் ஜிவ்வென இரத்தம் ஏற சிரமத்தின் உச்சியால் 12,000 அடி உச்சி அடைந்தேன். Welcome to Nagaru-என துணி பேனர் தெரிய, கீழே வாழ்வா, சாவா, என்று வந்த தோழர் தோழியருக்கு இமயமலை எதிரொலிக்க கேம்ப் பகூன்சி என குதூகலமாகக்கத்தினேன்.
மேலே சொன்னது எனது
‘இமயவலம்’ நூலின் 91-ம் பக்கம்-இந்த நூல் பயண இலக்கியத்தில்
ரூ- 10000 பரிசு பெற்றது. தமிழக நூலக ஆணைக்குழு இந்த நூலைத்தேர்வு செய்து, 600 நூல்களை
தமிழக அனைத்து நூலகங்களுக்கும் வழங்கியது. 2004-ல் என் வாழ்வில் நடந்த நிகழ்வை பகிர்கிறேன்.
wonderful writeup sir.congrats...
ReplyDeleteவலைப்பூ வருகையாளரே,
Deleteதங்கள் பாராட்டுக்கு நன்றி. 'இமயவலம்' நூலை வாசிக்க வேண்டும்
என்ற ஆவல் எழவில்லையா?-சின்ன சாத்தன்.