Sunday, August 19, 2012

கொள்ளாதவன் வாயில் கொலுக்கட்டை

கோவை பள்ளபாளையம் குளத்தில் பறவை நோக்குதலில் இருந்தபோது ஒரு அரியகாட்சி கண்ணில் தென்பட்டது. குளத்தின் வடகரைக்கு அருகாமையிலிருந்த விவசாயக்கிணற்றின் படியில் தண்ணீர் பாம்பு வெய்யிலுக்கு படுத்திருக்கிறது என்று படம் எடுத்து, வீட்டுக்கு வந்து படத்தைப்பெரிதாக்கிப்பார்த்தால் வியப்பு. கிணற்றில் ஒரடி நீளமீன்கள் நீந்திக்கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது. பொதுவாக தண்ணீர் பாம்பு தவளைகளைச்சாப்பிடும். இப்படியும் நடக்குது!!

அன்பின் பகிர்வில் பிற ஜீவன்கள்

எச்சில் பூச்சி (Spit Bug )
புல்வெளிகளில் உலவும் போது சில இடங்களில் புல்லின் மேல் நீங்கள் வெள்ளை நுரைகளைப்பார்த்திருப்பீர்கள். நீங்கள் அதை, யாரோ எச்சில் துப்பிப்போயிருக்கிறார்கள் என்று நினைத்திருப்பீர்கள். ஆனால் நடந்தது வேறு.  புகைப்படத்தில் காணும் எச்சில் பூச்சி தன்னைச்சுற்றி ‘வழுவழு எச்சிலைத்துப்பி(Mucus) உள்ளே சந்தோசமாக அமர்ந்து விடுகிறது. காரணம்;-
(1) வெய்யிலுக்கு குளிர்ச்சியாக இருக்க (2) எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு.

ஆச்சர்யமாக உள்ளதா? இன்னொரு ஆச்சர்யம் என்னவெனில் இதைப்பற்றி ஒரு சித்தர் அந்தக்காலத்திலேயே பாடியுள்ளார். இதோ;-

‘புல்லினுள் இருக்கும்பூச்சி பொருந்த வெண்ணுரையுண்டாக்கி
மெல்லிய தண்ணீர் வீட்டில் வெயிற்படாதிருக்குமாபோல்
சொல்லிலே நாகை நாதர் தோய்ந்திடச்சூட்சங் கண்டாற்
கல்லிலே தெய்வமில்லைக் கருத்திலே தெய்வம் நெஞ்சே.

                                                -கணபதி தாசர்
                                            நெஞ்சறி விளக்கம்

Saturday, August 18, 2012

பறவை மீட்பு




முக்குளிப்பான் மிட்பு   Little Crebe (Tachybaptus ruficollis)

ஒரு காலைப் பொழுது பறவை நோக்கலுக்கு போனபோது ஏரி மேட்டில் ஒரு எட்டு வயது சிறுவனும், சிறுமியும் நின்றிருந்தனர் சிறுவன் பெயர் மணி கண்டன் என அவனைவிட்டுப் பிரியும் போது தெரிந்து கொண்டேன். அவன் ஒரு திசையை நோக்கி சிறுகற்களை ஏரி மேட்டில் பொறுக்கிப்பொறுக்கி வீசிக்கொண்டிருந்தான். அவன் வீசிய திசையைப் பார்த்தால், அங்கு ஒரு முக்குளிப்பான் மிதந்து கொண்டிருந்தது.

‘டேய்! ஏண்டா! கல் வீசறே? பறவைக்கு காயம் ஆயிடுமே!

‘அது வலைல மாட்டிருச்சு, தப்பிக்க கல் வீசறே.

‘வலைல மாட்டின பிறகு கல் வீசனா தப்பிக்குமா? பரிசல்ல மீன் பிடிக்கறவங்க இருக்காங்களா?

‘எங்க மாமா இப்படிப்போயிருக்காரு, வருவாரு.ஏரிமேட்டின் மேற்ப்பகுதியைக்காட்டினான.

மீனகளைப்பிடிக்க வேலி போட்டமாதிரி 4 அடி ஆழத்துக்கு நீருக்குள் வலையிருக்கும். வலை குளப்பரப்பில் தெரியவும் மிதக்கவும்  வெள்ளைத்தெர்மக்கோல் துண்டங்களை மிதக்க விடுவர். அந்த நாடகளில் படகு அல்லது பரிசலில் சென்று வலையை வீசி மீன் பிடிப்பர். தற்போது வேலி வலை ஓரமாக பரிசலில் சென்று வலையைத்தூக்கி சிக்கியிருக்கும மீனகளை ஒவ்வொன்றாகப்பிடித்து பரிசலில் போடுவர்.

முக்குளிப்பான் தன்னை விடுவிக்க முயறசி பண்ணிக்கொண்டிருந்தது. நீருக்குள் மூழகியும் மேலே வந்தும் முயறசிக்க, வலையில் மேலும் அதிகமாக மாட்டிக்கொண்டது.

நாற்பது வயதினரான பரிசல்காரர் வந்தார். விபரிதம் என்னவென்று சொன்னேன். அவர் பெயர் செந்தில்.

காலை 07.30 இருக்கும். இளம் சூரியன் வந்து விட்ட வேளை தான். பரிசலில் ஏறிக்கொண்டோம். நீரில் சின்னத் துடுப்பை வலித்துக்கொண்டு, பறவை சிக்குண்ட திசை நோக்கி பரிசலை நீரில் நகர்த்திச்சென்றார். வலையில் சிக்குண்ட முக்குளிப்பானை சமீபித்தோம. பரிசலோட்டி கீழே குனிந்து, பறவையை இடது கையிலெடுத்து வலது கை விரல்களால் நைலான் வலைச்சிக்குகளை பொறுமையாக எடுத்தார்.  எடுத்ததும், நான் பறவையை வாங்கிக்கொண்டேன். பரிசலை கரையை நோக்கிச்செலுத்தினார்.

மணிகண்டனும், அவனது தங்கையும் ஆவலுடன கரையில் நின்று கொண்டிருந்தனர். பரிசல் கரையைத்தொட்டதும, எல்லோர்முகத்திலும் குதூகலம். நான பரிசலிலிருந்து இறஙகினேன். பரிசல்காரர் மீண்டும மீன பிடிக்கச்செல்ல எத்தனித்தபோது அவரிடம சொன்னேன;-

‘வலையில் சிலசமயம் பறவைகள் இப்படி மாட்டும். இதை சாப்பிட்டு என்ன ஆகப்போகுது? உண்ண எவ்வளவோ இருக்கு. நீங்க இந்த குளத்துக்கு தலைவனா இருந்து பறவைகளைக்காப்பாத்தணும்.

அவரும் ஆமோதித்தார்.

மணிகண்டன, நான் தான் பறவையைத்தண்ணில விடுவேன்.’ எனச்சொல்ல நான் முக்குளிப்பானை அவனது கைகளில் தந்தேன். அதை சுதந்திரப்பறவையாக நீரில் விடும்போது, அது ‘தட தட வென நீரப்பரப்பில் ரெயில் விடும் என நினைத்தால், ‘குபுக் கென நீரில் மூழ்கிப்பாய்ந்தது. சிறு நீர் வட்டங்கள உருவாகிப்பெரிதாகி மறைந்தன.

‘அடே! அடே! நன்றி கூட சொல்லாமல போயிற்றே! என நான் சொல்ல யாவரும் சிரித்தனர்.
    

Friday, August 17, 2012

பறவை அறிமுகம்




செந்தொண்டை கொண்டைக்குருவி (அ) மணிகண்டன்
Rubythroated Bulbul
(Pycnonotus melanicterus gularis)

இது நமது நாட்டு அழகுப்பறவை.. இப்பறவை சின்னாறு ஆற்றோர மரத்தில் அமர்ந்திருந்ததை நானும்,நண்பரும் பார்த்தோம். பறவை நோக்குதலுக்குச்செல்லும் நண்பர்கள் சிறுவாணியில் பார்க்கலாம். தரைக்கு வராது. இந்த இனத்தை மேற்கு தொடர்ச்சி மலைகளின் ஓரம் பார்க்கலாம். இது நாணப்பட்டு இலைகளில் ஒளிந்து கொள்ளும். புல்புல் கணத்தையும், வெள்ளைக்கண்ணையும், ரூபி நிறத்தொண்டையையும் வைத்து இனம் கண்டறியலாம். பெர்ரிப்பழங்களையும்,பூச்சிகளையும் உண்ணும். இது நண்பர் விஜயகுமார் எடுத்த படம்.

பறவை பாதுகாப்பு


சின்ன நீல மீன்கொத்தி
Small Blue King Fisher
(Alcedo atthis)

காலைப்பொழுதில் பறவை கண்காணிப்பில் இருந்த போது, பெரும் மழை பெய்ய, ஆங்காங்கு பள்ளங்கள் நிறைந்தன. ஒரு சின்ன நீர் நிலையை ஒட்டி நடந்து போனேன்.அப்போது ஒரு சின்ன நீலமீன்கொத்தி ‘ச்சிச்சீ ‘ச்சிச்சீ எனக்கத்திக்கொண்டே அந்த நீர்நிலைக்கு மேலே மண் சுவற்றின் ஒரு துவாரத்தில் போவதும் வருவதுமாக இருந்தது. அதன் நடவடிக்கையை குடையைப்பிடித்துக்கொண்டு பார்த்துக்கொண்டிருந்தேன்.
அதன் பரிதவிப்பு புரிந்து போயிற்று. அந்த மண்தடுப்பு சுவர் துவாரத்துள்ளே முட்டைகள் இருக்கும். பள்ளத்தில் நீர்மட்டம் வேறு உயர்ந்து கொண்டிருந்தது. இன்னும் கொஞ்சநேரத்தில் நீர்மட்டம் உயர்ந்து,கூட்டு துவாரம் உள்ளே நீர் புகுந்து விடும்.முட்டைகள் நீரில் மிதந்து வெளிவந்து சேதமடைந்துவிடும்.
     என்ன செய்யாலாம்? நண்பனின் பக்கத்து தோட்டத்துச்சாலைக்கு சென்றேன். சாலைக்குள் இருந்த மண்வெட்டியை எடுத்து வந்தேன.குடையை மரக்கிளையில் தொங்கவிட்டேன்.சரிவான இடத்தில் பொத்து விட்டால் பள்ளத்தின் நீர்மட்டம் உயராது. ஒரு இடத்தினை தேர்ந்தெடுத்து பொத்துவிட ஆரம்பித்தேன். மழையில் வேலை செய்வது கடினமாக இருந்தது. பத்து நிமிட உழைப்புக்குப்பிறகு நீர் ‘தப,தப என விழ, நீர்மட்டம் குறைய ஆரம்பித்தது.இனி மீன்கொத்தி தவிக்க வேண்டாம். எனது தவிப்பும் அகன்றது. மீனகொத்தி புரிந்து கொண்டு அமைதியாக ஒரு கொம்பிலமர்ந்தது.

சிட்டுக்குருவி தப்பியது  
House Sparrow (Passer domesticus)

அந்த நாள் மவுனவிரதம். மாடி 'சிட்அவுட்'டில் நின்றிருந்தேன். மணி இரண்டிருக்கும். பசியோடு இருந்தேன். முயல் பிடிப்பவன் தெருவில் முதுகுத்தூளியில் தொங்கவிட்ட குழந்தையோடு வந்தான். கையில் உண்டிவில். வீட்டிற்கு எதிரே உள்ள வேப்பமரத்தில் ஒரு குருவி உட்கார்ந்திருந்தது. குருவியை குறி வைத்தான்.மவுனத்தில் இருந்ததால் என்ன செய்வதென்று தெரியவில்லை. கை தட்டினேன். ‘குருவி என்றான்.நான் ‘வேண்டாம் எனக்கையாட்டினேன். அவன் வெறுப்போடு போனான். குருவி தப்பியது. இரண்டு நிமிடம் கழித்து எனக்கு உறைத்தது. அவனுக்கும், அவனது குழந்தைக்கும் பசி, எனக்கும் பசி. பசி யாவருக்கும் ஒன்று தான். முயல் பிடிப்பவனுக்கு பத்து ரூபாயாவது கொடுத்திருக்கலாம். அதற்குள் தெருமுனைக்குப்போய்விட்டான். மீண்டும் கைதட்டினேன். அவன் திரும்பி வந்தான். அவனிடம் பத்து ரூபாய் கொடுக்க, அவன் அதை குழந்தையிடம் கொடுத்து மகிழ்ந்தான்.எனக்கும் குருவி தப்பியதில் மகிழ்ச்சி.

சுற்றுச்சூழல்


பள்ளிக்கரணை சுற்றுச்சூழல்


இது சென்னையை ஒட்டிய சதுப்புநிலப்பகுதி. 3170 எக்டேராக இருந்தது தற்போது 317 எக்டேராக சுருங்கி விட்டது. குப்பையைக்கொட்டியும், ஐடி கம்பெனிகள் கட்டிடம் எழுப்பியும் சாதனை படைத்து விட்டனர். சதுப்பு நிலம் உயிர் கோளத்தில் முக்கிய பங்காற்றுகிறது.அதை கிஞ்சித்தும் நினைத்துப்பார்க்காமல் மாநகரக்குப்பைகளை மாநகராட்சி கொட்டுவதும், ஐடி கம்பெனிகள் ஜன்னல் அற்ற கட்டிடம் கட்டி ஏர்கண்டிசனரில் பணியாற்றுவதும் சுற்றுச்சூழல் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்ற மனோபாவத்தைக்காட்டுகிறது. தென்அமெரிக்க பறவைகள் Grey headed Lapwing சென்ற வலசைப்பருவத்தில் இந்த அழுக்குப்பகுதிக்கு வருகை புரிந்தன. இதோ! அந்தக்குப்பை மேட்டில்  பரிதாபத்துக்குரிய வெளிநாட்டுப்பறவைகள். இங்குள்ள ஐடி கம்பெனிகளுக்கு  வருகை புரியும் வெளிநாட்டினர்,மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் எனப்பாடிச்செல்வரோ!, இந்தப்பறவைகள் ‘தூதெறி என எச்சமிட்டுப் பறந்திருக்கும்.