அடிகளார் வனம்
Protect our Environment Trust, Sulur jointly working with Vanam India Foundation, Palladam (visited on : 12.07.2106)
![]() |
அடிகளார் வனம், ஆறுமுத்தாம் பாளையம், திரு. பழனிசாமி |
![]() |
கல்லுக்குழி -----மரங்களுக்கு நீர் பாய்ச்சும் கல்லுக்குழி |
சின்ன சாத்தன்
அடிகளார் வனம் சாந்தலிங்க அடிகளாரால் துவக்கி
வைக்கப்பட்டது. தவத்திரு சாந்தலிங்க அடிகளார் வனம் என்று நாமம் சூட்ட அவர் மறுத்துவிட்டதால்
அடிகளார் அதாவது தொண்டர் வனம் என அழைக்கப்படுகிறது. இது ஒரு வித்தியாசமான பூமி. கிடைநீர்
தேங்கிக்கிடக்கும் பெரிய கல்லுக்குழிக்கு அருகில் உள்ள ஒரு அடி, மண் மட்டுமே பாவிய
பாறைக்காடு. காற்று உய்……ஊய் என நரிகள் ஊழையிட்டது போல இருந்தது. ஆடி மாதக்காற்று ஆனியிலேயே ஆரம்பித்து விட்டது. தென்
மேற்குப்பருவ மழை பல்லடம் பகுதி வரை வருவதற்குள் வலிமையிழந்து மெலிந்து விட்டது. இந்த
மேட்டு கல்லாங்காடான 13 ஏக்கர் கோயில் நிலத்தில் 7 ஏக்கரில் மரக்கன்றுகள் நடப்பட்டு
பராமரிக்கப்படுகின்றன.
பல்லடம் வடகிழக்குப்பகுதியில்
உள்ள இந்த வனத்துக்குச்செல்ல நாரணாபுரம், சேடபாளையம் மார்க்கமாக தார் சாலையில் 8 கி.மீ
பயணித்து, ஆறுமுத்தாம் பாளையத்தை அடையவேண்டும். பிறகு ஊரைத்தாண்டியதும் அரைக் கீ.மீ
சரளைமண் வண்டித்தடத்தில் போனால் அடிகளார் வனம் வரும். ஆறுமுத்தாம் பாளையத்தில் 250
குடும்பங்கள் உள்ளன. இவர்கள் 1 லட்சம் ரூபாய் சீட்டு இருபது அங்கத்தினருடன் நடத்தி,
சீட்டுத்தொகையாக வந்த 1 லட்சத்தை அவர்களுக்குள் வட்டிக்கு விட்டு, மரநாற்று பாரமரிப்புக்கு செலவிடுகின்றனர். மாதம்
ஆயிரம் சம்பளத்துக்கு ஒருவரை நியமித்துள்ளனர்.
வாரம் இரண்டு முறை சொட்டுநீர் திறந்து விடுகின்றனர்.
ஒவ்வொரு மணி நேரம் சொட்டுநீர் விடுகின்றனர். இதை இரண்டு மணி நேரமாக நீட்டிக்கலாம். ஏனெனில் இந்த
முறை பருவ மழை, இது வரை நம்மை வந்து சேரவில்லை. மேலும் பாறைக்காடாக இருப்பதால் நீர்
கொஞ்சம்சேர்த்து விட்டால் பாறை கொஞ்சம் இளகும். கல்லுக்குழியிலும் கிடை நீர் வேண்டுமளவு
உள்ளது. அதில் ஒரு கொம்பன் ஆந்தை (Indian Great Horned Owl)-யைப்பார்த்து பரவசமாகிப்போனேன்.
இந்த மூன்றடி உயர ஆந்தை மயிலைக்கூட தன் கால்களில் தூக்கிச்செல்ல வலிமையுண்டு. இவை கல்லுக்குழியில்
ஜோடியாக பாறைப்பிளவுகளில் வாழும். எலி. பெருக்கான், வேலி ஓணான், உணவாக எடுத்துக்கொள்ளும்.
விவசாயிகளுக்கு நண்பன். கல்லுக்குழியில் நீர் கிடைநீராக நாள்பட இருப்பதால் சற்றே கருப்பாக
இருந்தது.
அருகிலுள்ள அறிவொளி நகரில்
2500 குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டுள்ளன. நீர் இறைக்க மோட்டார் மற்றும் ஜெனரேட்டர்
பொருத்தப்பட்டுள்ளன. புளியமர நாற்றுக்கு இடைவெளி அதிகமாக விட்டதால் அதிக காய் காய்க்கும்.
ஒரு சில நாற்றுகள் வரண்டுள்ளதை மாற்றலாம். மற்றபடி எல்லா நாற்றுகளும் நல்ல நிலையில்
உள்ளன. காற்று மரக்கன்றுகளை அசைத்துக் கொண்டே
இருப்பதால், வேர் பிடிப்பு எளிதில் ஏற்படாது, எனவே சின்னக்குச்சிகளை அருகில் நட்டு,
கயிற்றில் மரக் கன்றுகளை இணைக்கலாம். காட்டுகோரைப்புற்கள் நான்கு அடி வளர்ந்தவை, தங்க
நிறத்தில் சரிந்துள்ளன. பார்க்க அழகாக உள்ளன. அவைகளை களைச்செடிகள் எனப்பிடுங்காமல்
விட்டுவைத்ததை பாராட்டுகிறோம். இவை நீரைப்பிடித்து வைக்கும். அதே சமயம் வரண்டு போனபின்பு
உரமாகி விடும். அதிலிருந்து விழும் சின்னச்சின்ன விதைகளை உண்ண வளைகளில் இருந்து எலிகள்,
மற்றும் பறவைகள் வரும். அவைகளைப்பிடித்து உண்ண கொம்பன் ஆந்தை வரும். இயற்கையின் உணவுச்சங்கலியைகண்டு
வியக்காமல் இருக்க முடியவில்லை.சங்கலியை உடைப்பது மனிதன் தான்.
இயற்கையை ஒட்டி வாழ்தலே நலம்
பயக்கும்.அடிகளார் வனத்துக்கு ஒரு பெரிய இரும்பு கேட் உள்ளது. அதில் அடிகளார் வனம்,
வனம் இந்தியா பவுண்டேசன் மற்றும் ஆறுமுத்தாம் பாளையம் கிராமப்பொதுமக்கள் எனப்பெயர்
பொரித்த பலகை இருத்தல் நலம். இந்த கோரைப்புற்களுக்கு மனிதன் தீயிடாமலும், கேபிள் திருட்டுப்போகாமலும்
கண்காணிக்க வேண்டியுள்ளது. இந்த புனிதப்பணியை திரு. பழனிசாமி அவர்கள் முன்னிருந்து
செய்கிறார் அவர் உழைப்பையும், நல்ல எண்ணத்தையும் பாராட்ட வேண்டும். மீதமிருக்கும்
6 ஏக்கர் கல்லாங்காட்டில் இன்னும் மரக்கன்றுகள் வைத்து வளர்த்திட திட்டம் இருப்பதாக
திரு. பழனிசாமி சொன்னார்.
தற்போது மரநாற்றுகள் 1500 வைத்து
வளர்த்து வருகின்றனர். இடத்தைச்சுத்தப்படுத்த JCB, சொட்டுநீர் குழாய்கள், மோட்டார்,
ஜெனரேட்டர், மர நாற்றுகள் ஆறுமுத்தாம்பாளையம் கிராம மக்களுக்கு அளித்து, வனம் இந்தியா
பவுண்டேசன் ஆக்கப்பூர்வ செயலுக்கு பொருளாதார ஊக்கம் தந்துள்ளது. சுற்றிலும் வேலி கற்கள்
நடப்பட்டு, கம்பி வேலியை ஊர் பொதுமக்கள் இட்டுள்ளனர். போகும் வழியில் சேடபாளையத்தில்
தார் சாலையோரமாக ஒரு பெரிய குட்டை நீரற்று
வாய் பிளந்து உள்ளது. குட்டை ஓரங்களிலும், தடுப்பு அணைப்பகுதியிலும் பசுமை ஏற்படுத்த,
ஊர் மக்களில் சிலருக்கு பசுமை விதையை தூவலாமே என்று யோசனை என்னுள்ளே மூண்டது.
ஒரு சிலரே நாட்டை பசுமைப்பாதையில் வழிநடத்திச்செல்கின்றனர். அதில் வனம் இந்தியா பவுண்டேசன்
பங்கு பெறுவதில் மகிழ்ச்சியடைகிறது. திரு. பழனிசாமி அவர்களுக்கும், அவரைச்சார்ந்த,
சீட்டு உறுப்பினர்களுக்கும் உடல் உழைப்பை நல்கும் நல் உள்ளங்களுக்கும் வனம் இந்தியா
பவுண்டேசன் நன்றியைத்தெரிவித்துக்கொள்கிறது.
இந்த வனம் மாத இதழை வாசிக்கும்
ஒவ்வொருவரும் திரு. பழனிசாமி போல அவரவர் ஊருக்கு பொதுத்தொண்டு ஆற்ற வேண்டும், என்ற
எண்ணத்தை விதைக்கவே சீரிய செயல் புரியும் அன்பர்களை மாதாமாதம் அறிமுகப்படுத்துகிறோம்.
பாறைக்காடு, நீர் அருகிலுள்ள
கல்லுக்குழி, அந்தப்பகுதியில் வாழும் மக்களில் பெரும்பகுதியினர் இயற்கையை பற்றி சிந்தனையற்றவர்,
மழையின்மை, ஆளை வீழ்த்தும் காற்றுடன் உற்றுப்பார்க்கும் வெட்டவெளி என்ற இத்தனை எதிர்
காரணிகளிலும் சமாளித்து மரம் வளர்த்துவது என்பது இமாலய சாதனை. சுவாமி விவேகானந்தர்
கூறியது நினைவில் அலைமோதியது.
மலைபோன்ற சகிப்புத்தன்மை
இடைவிடாத முயற்சி
எல்லையில்லா நம்பிக்கை
இவை நற்காரியத்தில் வெற்றி தரும்.
_____சுவாமி விவேகானந்தர்.
No comments:
Post a Comment