Wednesday, April 20, 2016


ஆலமரத்தின் கதை





ஆலமரத்தின் கதை
            ஆலமரத்தின் விதை ஒரு மீன் முட்டையை விட சிறியதானாலும் வளர்ந்துவிட்ட பிறகு ரஜ, கத, துரக, பதாதிகள் கீழே தங்க நிழல் தந்து நிற்கும் ஒரு தடாகம். எத்தனை ஜூவராசிகள்! அட! அட!  அப்போதைய காலகட்டத்தில் கிராம சபையென்ன, சிறார் ஊஞ்சலாட்டமென்ன, பெண்கள் ஊர் வம்பென்ன, என எப்போதும் குழுமுமிடமாக இருக்கும். அக்காலத்தில் பணியர் என்ற வியாபார இனம் இம்மரத்தடியில் குழுமி வியாபாரம் செய்வர். ஆலமரத்தடியில் வியாபாரம் நடத்தினால் கொடுக்கல், வாங்கல் பிரமாதமாக நடக்குமாம். விழாக்கள் வேறு இம்மரத்தடியில் ஜோர் படுமாம். பல மருத்துவ குணங்களை உள்ளடக்கியது. பணியர் இதனடியில் கூடுவதால் இதற்கு Banyan Tree என்று நாமகரணம் செய்விக்கப்பட்டது. எனது மர குருநாதர் வேலுசாமி ஐயாவுக்கு இந்த மரம் எனில் உயிர். அவரது உற்ற தோழர் பழனி ஐயா ஆலான் என்று தான் பகருவார். இருவரும் வாட்ட சாட்டமாக 6 அடிக்கு மேல் 80 வயது தாண்டி இருந்தனர். பழனிக்கவுண்டர் கடின உழைப்பில் தண்ணீர் சுமந்து, சுமந்து மரங்களை செலக்கரிசிலில் வளர்த்தார். வேலுக்கவுண்டர் காசு செலவு செய்தார். இவ்வளவு கடின உழைப்பிலும் ஊர் மக்கள் விட்டேத்தி- யாக இருப்பது எனக்கு வியப்பாக உள்ளது. ஒருவரும் துணைக்கு வரவில்லை. இளைஞர்கள் தாங்கள் உண்டு தங்கள் படிப்பும், கனவுக்கன்னிகளும் உண்டு என்று இருக்கின்றனர். பிற மனிதர்கள் தானுண்டு தங்கள் பொண்டு, பிள்ளையுண்டு என பிழைபைப்ப்பார்த்து கடுகு உள்ளத்தோடு இருக்கின்றனர். ஆலமரம் இனி இப்பூமியில் அதுவும் ஊருக்குள் வாழ முடியாத நிலை ஏற்பட்டு விட்டது எனலாம். காரணங்கள்;-
# இடத்தை அடைக்கிறது (ஆம்! ரியல் எஸ்டேட் பாதிக்குமே!)
#வேரும் விழுதும் விடும் போது அருகில் உள்ள கட்டிடம் பாதிக்கும்.

கொஞ்சம் நஞ்சம் இருக்கும் மரங்களின் விழுதுகளை ஊன்ற விடாமல் மரத்தின் கீழ் வியாபாரம், தண்டுகளில் ஆணியடிப்பது, விழுதுகளில் ஊஞ்சலாடுவது, இதில் மாடு, எருமை குட்டி ஈனும் போது வரும் நஞ்சை பையிலிட்டுக்கட்டுவது, விழுது ஊன்ற வழியில்லாமல் தார் ரோடு இடுவது, ஏரி மேட்டில் வைத்து, விழுது நீரில் ஊசலாடுவது போல சகல விதமான துன்மார்க்க செயல்களையும் செய்து ஆலானை வாழ வழியற்றுப்போகுமாறு செய்வது மனிதன் உள்ளத்தில் கருணை என்பது துடைத்தெறியப்பட்டதைக்காட்டுகிறது. நீங்களெங்கே! நம் முன்னோர்களெங்கே! மண்ணில் ஆசை வைத்த மக்கள் உருப்படுவது கிடையாது. ஆலானுக்கு நிச்சயமாக இடம் தர மாட்டார்கள். அந்தகோ!
நீ மரமல்ல மகான்

ஆலமர நிழல் கிராம மையம்
அக்கால கிராம மக்களுக்கு நன்றி
ஆல் எனக்கு ஒரு சின்னத்தடாகம்
தர்ம சிந்தனை கிராமத்தாருக்கு;
ஆல் மக்கள் நீதிசபை
ஆலம் பழங்களின் சிகப்பு
இதயம் சுண்டும் காதலி விழிகள்
தடாகம் நிறையப் பறவைகள்
கிளைகள் தோறும் பறவையொலி
ஓ! ஆலே! வாழ்ந்தாலுன் போல
பெரு வாழ்வு வாழனும் பூமியில்
உன் மடி தொங்கும் விழுதுகளில்
ஊஞ்சலாடுவேன். சந்தன நிழலே!
மனசுக்குள் ஆனந்தம் முட்டும்
மைனா நானா வித ஒலி கூட்டும்
வா! உண்ணு! இளைப்பாறு!
செர்ரி நிறப்பழங்கள் அசைந்து கூப்பிடும்.
குக்குறுவான், மாங்குயில், கொண்டைக்குயில்
நீந்தும்; ஆல் எனக்கு சின்னத்தடாகம்.
சிறார் கும்மாளமிடும் திடல்
உன்னை அன்னாந்து பார்த்து
பெருமூச்சு விடுவேன்; முத்தமொன்று
கட்டிப்பிடித்து ஈய்வேன்
ஆயின் என் கைகள் போதாது
பரந்த மனசு போல நீ விரிந்தவன்
தர்மவான் போல உயர்ந்தவன்
உனை அண்டி எத்தனை ஜீவன்கள்!
ஆல் எனத்தழைத்து விரியணும்
ஆசி நல்கல் இப்போது புரியது.

நீ மரமல்ல மகான்!

Monday, April 4, 2016


இரக்கம் என்பது சிறிதும் இல்லையடா……!

Both Photo taken by Sri T.R.A. Arunthavaselvan

கொண்டலாத்தி (Hoopoe) 
 இரக்கம் என்பது சிரிதும் இல்லையடா……!
பொள்ளாச்சி, பணிக்கம் பட்டி மஹா சைவம் ஆசிரமத்துக்கு போயிருந்தேன். தோப்புகள்  மற்றும் வானம் பார்த்த நிலங்கள், மழை பெய்தால் புற்கள் தோன்றும் பூமியாகிப்போயின.அங்கு நானும் நண்பரும் உணவுக்காக ஸ்கூட்டரை உருட்டிப்போகும் மண் பாதை தெற்குப்புறம் தோகைகள் உதிர்ந்து போன மொட்டைத் தென்னை மரங்கள். அங்கு வேலை நடந்து கொண்டிருந்தது. விசாரித்துப்பார்த்த போது, வீட்டு மனைகள் பிரிப்பதாக சொன்னார்கள். எனக்கு ‘திக்’கென ஆயிற்று.
தென்னை காய்ந்து போன மரங்கள் தாம், ஆனால் அதன் உயரமான தண்டுகளின் துளைகளில்  புள்ளி ஆந்தை, பச்சைக்கிளி, பனங்காடை, மைனா, மரங்கொத்தி, கொண்டலாத்தி  என சாதாரணமாக நாம் பார்க்கக்கூடிய பறவைகள் முட்டைகள் வைத்து குஞ்சு பொரிக்கும்.  துளைகள் இப்பறவைகளால் ஏற்படுத்துவதல்ல, ஏனெனில் இதன் அலகுகள் அப்படியொன்றும் வலிவில்லை. காய்ந்த மரங்களின் தண்டுகள் வெய்யிலுக்கும், மழைக்கும் இளகிப்போய் துளை ஆவதுண்டு. இந்த பொந்துகளை இப்பறவைகள் பயன்படுத்திக்கொள்ளும். தற்போது மார்ச் (பங்குனி). இன்னும் ஒரு மாதத்தில் சித்திரை சுழி மழை வரும். பிறகு தென்மேற்குப்பருவ மழை. அப்போது நிறையப்பூச்சிகள் கிளம்பும். பிப்ரவரி நமக்கு வஸந்த பருவம். குளிர் முடிந்து கதிரவன் கதிர்கள் உக்கிரமாக எத்தனிக்கும் போது பழங்கள், மலர்கள் அரும்பி மலரும், காய்க்கும். எனவே இப் பறவைகளுக்கு இனப்பெருக்கம் செய்யும் காலமிது.
இந்த ரியல் எஸ்டேட் பேராசைக்காரகள் காய்ந்த தென்னை மரங்களை வெட்டத்தொடங்கினர். நானும் நண்பரும் உணவுக்குச்செல்லும் போது பேசிப்பார்த்த போது,குஞ்சோ அல்லது முட்டையோ இருந்தால் அந்த மரங்களை வெட்ட மாட்டோம் என்றார். ஆனால் மூன்று வாரம் கழித்து வெட்டி சாய்த்தார்கள். எமக்குத்தெரிந்து மூன்று கிளிக்குஞ்சுகள் மண்ணோடு மண்ணாகின.

பொள்ளாச்சிநெடுஞ்சாலை நான்கு வழிப்பாதை ஆகிக்கொண்டிருக்கிறது. நான் போன மாதம் சென்றிருந்த போது நானும் நண்பரும் நெடுஞ்சாலை ஓரம் மேற்குப்புறமாக நின்றிருந்த மழை மரத்தில் அதாவது தூங்க வாகை மரத்தின் கிளைகளில் நான்கைந்து காகத்தின் கூடுகள் பார்த்தோம். அப்போது இரு சிறுவர்கள் உண்டிவில்லில் கூட்டை அடிக்க, நாங்கள் அவர்களைத்துரத்தினோம். கைபேசி படம் எடுக்கப்பின்னால் ஓட, அவர்கள் பயந்து பாதம் பிடரியில் பட ஓடினர். அப்பாடா! நான்கு கூடுகள் காப்பாற்றி விட்டோம். சரி! கண்ணுகளா! நெடுஞ்சாலை அகலமாகிக்கொண்டிருக்கிறது, தெரியுமில்லே! இப்ப என்ன செய்வே மக்கா? மனிதன் சுயநலத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்வான். செய்யத்தயங்கவும் மாட்டான். இயற்கை மவுனமாக கண்காணித்துக்கொண்டு தான் உள்ளது. இயற்கையின் பின் விளைவுகள் பயங்கரமாக இருக்கும்.  

Monday, March 21, 2016


வாய்க்கால் குளியல்





            கால்வாய் நீரோடு அகலமாகப்போகும். வாய்க்கால் அதைக்காட்டிலும் குருகலாகப் போகும் எந்நேரமும் அழுப்பு சளிப்பற்று  சலசலவென ஓசை எழுப்பி வேகமாக நகர்ந்து கொண்டே இருக்கும் வாய்க்கால் பார்த்த வசீகரத்தில் நான் தினமும் பல மணி நேரம் அதோடு பிரியாமல் இருந்தேன். சிமெண்ட்டும், கற்களாலும் கட்டப்பட்டு ஒரே நேர்கோடாக நீரைப் வழிந்தோடச்செய்வது மனிதனின் கால்வாய் மற்றும் வாயக்கால். இதன் போக்கை மனிதன் நிர்ணயிப்பான். ஆறோ அதன் போக்கை அதுவே நிர்ணயித்துக்கொள்ளும். அகலத்தில் மாறுபட்டு பள்ளம் கண்ட இடம் நோக்கிப்போகும். பொள்ளாச்சி, பணிக்கம்பட்டி கிராமத்தில் மனிதன் ஓடவிட்டிருக்கும் சிமெண்ட் வாய்க்காலில் இவன் தினமும் இரு வேளை இறங்கி ஆலிங்கணம் செய்வான். அதிகாலை ஆறு மணிக்கு விடிய எத்தனிக்கும் போதும், பகல் போது முடியும் தருவாயிலும் தண்ணீரின் வருடலில் இருப்பான். பனை மரங்களும், பனை பட்சிகளும் இவனை வேடிக்கை பார்க்கும். நீரின் வேகமும், அதன் நிறமற்ற நிறமும், ஒளியற்ற ஒளியும், ஒலியற்ற ஒலியும், இதமும், தணிப்பும் நீர் ஒரு விசித்திரமான கலவை. மேனியில் ஒட்டியும் ஒட்டாமல் ஈரமாக்கி செல்லும் பாங்கு அருமை. நீர் தேகத்தினைக் குளிர்வித்து, இருக்கும் அலுப்பை துடைத்து எடுத்து, மேனியை மசாஜ் செய்து புத்துணர்ச்சி ஏற்படுத்தி விட்டு, நன்றி சொல்வதற்குள் நலுவி விடும் பாங்கு என்னவென்று சொல்வேன். என் தாய் மேனி பிடித்து குளியலிட்டது போல இருக்கும். நீர் விசித்திரமானது. எந்த சோதனைச்சாலையிலும் புறப்படாத உயிரின் ஜுவிதம். அனைத்து உயிர்களின் இரத்தம். தினமும் வாய்கால் நீரைப்பார்த்தே நான்கு மணி நேரம் கழித்திருந்தான் இந்த சின்ன சாத்தன். கால்வாயில் கதிரவன் உதயம் பார்த்தான். கால் ஒட்டிய மண் ஒத்தையடிப்பாதையில் வாய்க்காலோடு இணைந்து   சில போது நடந்தான். சில போது சைக்கிளில் ஆதவனை நோக்கிச்சென்றான். வாய்க்கால் இவனுக்கு எதிர் திசையில் வேகமெடுத்து ஓடியது. கிரணங்கள் நழுவும் நீரில் சிகப்பு நிறத்தில் ஜாலமிட, சற்றே நகர்ந்தால், தங்க நிறப்பொடிகள் மிதந்து போவதைக்கண்டான். எத்தனை ஜிவனுக்கு உயிர் கொடுத்து எந்த எதிர்பார்ப்புமற்று நாள் முழுக்க நோகாமல் ஓடுவது வியப்பளிக்கிறது. ஆடைகளை அவசரமாக களைந்து விட்டு நீரைப்பார்த்து ஆனந்தபட்டு ஓடுவது, எப்படியுள்ளது எனில், ரொம்ப நாள் பார்க்காத, தன் குழந்தையை தகப்பன் அணைக்கத் தவிப்பும், தாயும், மகனும் பிரிந்திருந்த காலம் நெடிது கழிந்து, தாய் மடியில் முகம் புதைக்க ஓடிய சிறுவன் தவிப்பும் தினமும் பூபாள நேரத்திலும், மாலை சந்தியா காலத்திலும் இவனுக்கு இருந்தது. H2 O என விஞ்ஞானி சொன்னாலும் இவனுக்கு என்னவோ பிறவிதோறும் இந்த நீர் தாயாக இருந்தது.

Sunday, March 6, 2016


மலை முகடு- விமர்சனம்
ஓதிமலை

மஞ்சம் பட்டி
மலை முகடு – நூல்
நூலாய்வு……….                                                           சூலூர் கலைப்பித்தன்

மலையும் காடும் மனதுக்கு மகிழ்வைக்கொடுப்பனவாகும்.மலையோடும் காட்டோடும் இணைந்து வாழ்பவர்கள் இறைவனோடு உறவாடி வாழ்பவர்கள் என்று கூறலாம். அதனால் தான் சித்தர்களும், முனிவர்களும், தவசிகளும் இயற்கையொட்டி வாழ்ந்தார்கள். நம்மைப்போன்றவர்கள் அப்படியொரு மலைவனவாச ஆனந்தத்தைச் சந்திக்க முயற்சித்தால் சின்ன சாத்தன் போன்றவர்களின் நூலைப்படித்து செல்வது நல்லதாகும்.
            அவர் பயணிக்கும் போது, வனவலத்தை காசு கொடுத்து வராத சுகம் என்கிறார். எப்படியெனில் வனவலம் புத்துணர்வு தரும். அதை தண்டம் என்று யாரும் கூறிவிடமுடியாது. நடக்க மறந்தவர்களுக்கு இது முடியாது. வனவலத்தில் இயற்கை அறிவு, ஒருங்கிணைப்பு, ஒற்றுமை, தைரியம், சமயோசிதம், உடல்வலிவு, பழங்குடி வாழ்க்கை முறை, மூலிகை, விலங்கியல், தாவரவியல், புவியியல், மண்ணியல், திசைகள், வரைபட அறிவு என பலவும் பெறலாம். அதாவது  ஒரு பல்கலைக்கழகப்படிப்பே படிக்கலாம் என்கிறார்.
            தூவானம் காட்டில் தவழும் ஆற்றைப்பிரித்துக் கூறியிருக்கும் விதம் அழகு சேர்க்கிறது. விடலையாறு, வாலிப ஆறு, வயோதிக ஆறு எனப்பிரித்து கூறுகிறார். அங்கிருந்த நீர்வீழ்ச்சியில் இவர் நீராடும் போது இவர் கவிஞரும் கூட என்பதை நீரூபிக்கிறார்.
            நீரோடு நீராகக் கரைந்து போவேன்
            மேகத்தோடு மேகமாக நகர்ந்து போவேன்
வனவிலங்கு கணக்கெடுப்பு எந்த முறையில் எடுக்கப்படுகிறது என்பதை கூறியிருப்பது தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்.
            வாண்டல் டேம் என்று ஒரு டேம். இந்த பயண வழியில் ஒரு மலையருவி வருகிறது.அதில் இவர் மனம் குளிர குளிக்கிறார். நண்பர் இளங்கோவன் கூப்பிடுகிறார். அதற்கு இவர் சலித்துக் கொண்டுகூறும்போது,‘பெண்உதட்டில்முத்தமிட்டுக்கொண்டிருந்தவனைப்பிரியச்சொன்னது போல’… உணர்வில் தோய்ந்து வெளியேற மனமில்லாமல் வந்தேன் என்கிறார். இது இயற்கையோடு இணைந்த இன்பத்துப்பாலின் வெளிப்பாடு.
            நான் அடிக்கடி மலைப்பிரதேசம் செல்லக்கூடியவன். எனக்கென்னவோ இயற்கை மீது அப்படியொரு வசீகரம். நீலவானம், பச்சையாகத்தேயிலைத்தோட்டங்கள், அதன் நடுவே சில்வர் ஓக்மரங்கள், யுகலிப்டஸ்கள் நெடிதுயர்ந்து வானம் துடைக்கும் ஒட்டடைக்குச்சிகள் போன்ற நடுக்கிளைகள். ஓ…என்னவேன்று நான் சொல்வேன்? என்கிறார். அதனால் ஒரு மலைவாழ் பெண் ஆடு மேய்ப்பதை இவர் ஆட்சேபணை செய்கிறார். ஆடு வளர்த்தால் காடு போய்விடும் என்கிறார். என்னே! இவரது இயற்கை வெறி!இயற்கையை விரும்பி தினம் கலந்தால் நோயில்லை.
            மலைமுகடுஆசிரியர்சின்னசாத்தன்நூலின்ஒவ்வொரு வனவலக்கட்டுரைத்தொடக்கத்திலும் உலகப்பேரறியர்களின் பொன்மொழிகளைக்கூறி தொடங்கியிருப்பது அழகு. ‘பூமி அனைத்து மக்களின் தேவைகளையும் பார்த்துக்கொள்ளும். ஆனால் தனி மனிதனின் பேராசைக்கு அது ஈடு கொடுக்க முடியாது’ - மகாத்மா காந்தி. இவை இயற்கையை சீரழிக்காதீர் என தாக்கீது கொடுக்கின்றன. பின் வரும் கட்டுரைகள் இயற்கையை ரசித்து இன்புறத்தூண்டுகின்றன.
            வனவலம் பத்து நாட்களுக்கு ரீங்காரமிடும். பிரியும் போது ஏக்கமாகயிருக்கும். அங்கங்கே உதிர்வும், பிரிவும் இருக்கும். இப்படித்தான் பிறப்பும், இறப்பும். தனித்தனியாக வருவோம். போவோம். யாரும் எவரும் சேர்ந்தே இருப்பதில்லை, எனத்தத்துவம் பேசுகிறார். பெருமாள் முடி மலைப்பயணத்தில் ஆசிரியர் GPS எனும் (Global position system) கருவியின் பயன்பாட்டை விளக்குகிறார்.
            மானாம்பள்ளி வனவலக்கட்டுரையில் ஆசிரியர் கொங்கு நாட்டு வரைபடத்தைக்கூறுகிறார். வனம் கொன்ற வரலாறு எனக்கூறும் இவர் ஆங்கிலப்பேராசைக்காரர்கள் எப்படியெல்லாம் வனத்தை அழித்தனர் என படம் பிடித்துக்காட்டுகிறார். தர்மலிங்க ஸ்வாமி மலை என்ற மலையேற்றக்கட்டுரையில் அந்தப்பகுதியில் இருக்கும் ராணுவப்பயிற்சி முகாமைக்குறிப்பிடும் போது ‘ராணுவத்துக்கு செலவழிக்கும் பணமிருந்தால் உலகிலேயே வறுமையை ஒழித்து விடலாம்’ என்கிறார்.
            கழுகு மலை மலையேற்றக்கட்டுரையில் அங்குள்ள கோயில் முற்றுப்பெறாமல் பாதி நிலையில் நிற்கிற நிலை கண்டு வேதனையில் ஆசிரியர் அதைப்பற்றிக்கூறும் போது, ‘ எனக்கு இந்த வெட்டுவான் கோயில் முற்றுப்பெறாமல் நிற்பது கவலை அளிக்கிறது. இனிமையான கீதம் பாதியில் நின்றது போல……அழகிய இளம் பெண் தன் யவ்வன வயது கடக்கும் முன்னே இறந்து விட்டது போல…. சுவராஸ்யமான கதை பாதியில் நின்றது போல… என வர்ணனை படிப்போரையெல்லாம் வருத்தத்தில் ஆழ்த்துகிறது.
            நீர் காகம் இறுதிப்பகுதி வேட்டைக்காரனுக்கும், பறவை ப்ரியருக்கும் நடக்கும் சம்பாஷணை போர் வித்தியாசமான உக்தியில் போகிறது. வேட்டைக்காரன் நீர் காகத்தை சுட விரும்புவதை, பறவைப்ரியர் அதை எப்படியெல்லாமோ தடுத்தும், இறுதியில் வேட்டைக்காரன் வெற்றிக்களிப்பில் நீர் காகத்தை சுட்டு வீழ்த்துவது மனதில் வடு ஏற்படுத்தி விட்டு நினைவில் அகலாத சம்பவமாக உள்ளது.

வனவலப்பயணம், மலையேற்றம், இலக்கிய நயமான இருவேறு துருவத்தில் இயற்கை பற்றிய கணவன் மனைவி சம்பாஷணை, கட்டுரைகளில் பறவைப்பிரியர்களுக்கு விருந்து, பல இயற்கை சால் அறிவுப்பொக்கிஷம் என கைப்பிடித்து வனத்துக்குள் அழைத்துச்செல்லும் சின்ன சாத்தன், இயற்கை அன்னைக்கும், ஏன் தமிழன்னைக்கும் புதிய அணிகலன் பூட்டி அழகு பார்க்கிறார். வாசித்தால் நாமும் தான். தமிழுக்குப்புதுமை படைக்கும் நூல். இது ஒரு பசுமை இலக்கிய விருந்து.

Tuesday, February 16, 2016

மலை முகடு

Click to get my book thro’ on line “Malai mugadu” www.sandhyapublications.com 




எனது எட்டாவது நூல் வெளிவந்து விட்டது. இதில் 20 வனவலப் பயணக்கட்டுரைகள் எழுதியுள்ளேன். வனப்பயணியின் அனுபவக்கட்டுரைகள். மேற்குத்தொடர்ச்சி மலையின் முகடுகளைத்தொட்டு வந்த த்ரில் அனுபவம். பார்த்த தாவரங்கள், விலங்குகள், மற்றும் பறவைகள் பதிவு நடந்துள்ளது. 20 கோட்டு ஓவியங்கள் வாசிப்பவருக்கு மேலும் ஆர்வத்தைப்பெருக்க இடம் பெற்றுள்ளன. அணிந்துரை ம. குணசேகரன் எழுதியுள்ளார். இவர் எண்ணற்ற வனவலம் சென்றவர். எனது நண்பர். இவர் எழுதியது முற்றிலும் பொருத்தமானது. தோழமை ஓவியர்கள் செல்வநாயகம் ஆண்ட்ரூஸ், முழுமதி மற்றும் இவன். யாவருக்கும் நன்றி. அட்டைப்படம் புகைப்பட நண்பர் என். ராதாகிருஷ்ணன் என எனது நண்பர் பட்டாளம் துணைபுரிந்தனர். பிழை திருத்தம் இவனும், நண்பர் துரை பாஸ்கரும். DTP இவன் சில மாதங்களாகச்செய்தான். குழந்தையை பெற்றெடுத்தது போல இந்தப் படைப்பு. படிக்கப்படிக்க எதோ நீங்களே வனத்துக்குள் சென்று வந்த பிரமிப்பு ஏற்படும். பதிப்பக மாடம் மேனகா கோரல் ட்ரா செய்தார்.சந்தியா பதிப்பகம் நடராஜன் சார் அழகுற நூலை உருவாக்கியுள்ளார். யாவருக்கும் எனது உளப்பூர்வ நன்றிகள். அச்சு, எழுத்து வடிவம், அதன் அளவு, காகிதம் என அனைத்தும் ரம்மியம். எடையற்றது ஆயின் உள்ளீடு அறிவு சார்ந்தது. எப்படிச்செல்வது? எத்தனை நாள் வேண்டும்?, யாரிடம் அனுமதி பெறுவது?எப்படிச்செல்ல வேண்டும்? என்ற விபரங்கள் உள்ளது. கூடுதலாக வனவல இடங்களுக்கு வரைபடம் கொடுத்துள்ளோம்.  வனவல உபகரணங்கள்,கொண்டு செல்லக்கூடிய பொருட்கள் என்ற பட்டியல் தரப்பட்டுள்ளது.  என்ற விபரங்கள் தரப்பட்டுள்ளது.  இது மாதிரி நூல்கள் ஆங்கிலத்தில் வந்திருக்கலாம். ஆனால் தமிழில் புது முயற்சி. தமிழன்னைக்கு மற்றுமோர் பிரத்யேக அணிகலன். பலர் வனத்துக்குள் செல்ல கனவு காண்பதோடு சரி. அது சின்ன சாத்தனின் மலை முகடு நூல் படிக்கையில் நனவாகப்போகிறது. எனவே வெறும் ரூ; 150-ல் 20 வனவலங்களுக்கு சின்ன சாத்தன் உங்களை கைப்பிடித்து அழைத்துச்செல்கிறார். உடனே ஆன் லைனில் புத்தகம் ஆர்டர் செய்யுங்கள் தோழர், தோழிகளே! இதோ! Click: www.sandhyapublications.com to get Book –Rs. 150/- 

Wednesday, January 27, 2016


எனது Trekking நூல் " மலை முகடு' வெளி வந்து விட்டது. நூல் பெற sandhyapathippagam@gmail.com தொடர்பு கொள்ளவும்.  



ஆலமரம் கார்த்திகையில் இலைகள் உதிர்க்காதே!
            
                       செலக்கரிசலிலிருந்து 86 வயது இளைஞர் பழனிக்கவுண்டர் தொலை பேசினார்.
“சந்தைப்பேட்டையில் நிற்கும் 25 வயசு ஆலமரம் சுத்தமா இல உதிர்த்துச்சு! நீங்க இதுக்கு என்ன பண்ணுவீங்களோ, தெரியாது. ஆலன எப்படியாவது பொழைக்க வைக்கணும்.”

ஸ்கூட்டரில் 10 மைல் தூரத்திலிருக்கும் செலக்கரிசல் கிராமத்துக்கு விரைந்தேன். இலைகளெல்லாம் உதிர்த்து பரிதாபமாக நின்றது. எத்தனை பேருக்கு நிழல் கொடுத்து நின்ற மரம். அதன் உடம்பில் சில ஆணிகள். மனிதன் விளம்பரத்துக்காக அடித்திருந்தான். ஏசுவிற்கு சிலுவையில் ஆணிகள் போல எனக்குத் தெரிந்தன.  விரல்கள் போன்ற சிமிறுகள் லகுவாக ஒடிந்தன. உள்ளே ஓட்டை, அதில் சிறு வெண்புழுக்கள். பழங்கள்கரிந்து போயிருந்தன. மாதிரிகளை எடுத்தேன். நோயாளியாய், எலும்புகூடாய் நின்ற 50 அடி உயர ஆலமரத்தை புகைப்படம் எடுத்தேன். மறுநாள் கோயம்புத்தூர் IFGTB சென்று விவசாய அதிகாரி ரோகிலா, Dr. மோகன்,(Pathology) மற்றும் Dr. Jacob (Entomology) ஆகியோரைக்கலந்து ஆலோசிக்க, பெரிய ஜிவனை பழைய மாதிரி உயிர்ப்பிக்க சில வழிவகைகள் கிடைக்கப்பெற்றேன். மீண்டும் செலக்கரிசல் சென்று, ஒரு கை வாகு கிளையை ஒடித்துப்பார்க்க அதில் வெண் பாலும்,வெட்டக்கடினமாயும் இருந்தது. சிகிச்சை அளிக்கலாமென முடிவு செய்து சூலூரில் டைக்களவஸ் 100 மிகி வாங்கிக்கொண்டு ஸ்கூட்டரில் பறந்தேன். பத்துக்குடம் நீர் (அங்கு கிடைப்பதற்கு அரியது!) சேகரித்து, மருந்தை அதில் கலக்கி, வேலுக்குட்டி ஊற்றினார். பழனிக்கவுண்டர் கடப்பாரையில் குத்திக்கொடுக்க, வேரைச்சுற்றிலும் ஊற்றினார். இந்த ஆலமரம் பிளைக்குமா ? வீழ்ந்து படுமா? சிவபெருமானே உணர்வார். மனித முயற்சி ஒரு அளவோடு மட்டுமே…….வேலுக்கவுண்டர், கூட இருந்தார் . சிவனை வேண்டிக்கொண்டோம். இரண்டு கவுண்டர்களும் செலக்கரிச்சலில் பசுமைப்புரட்சி செய்தவர்கள். அவர்களின் சேவை மகத்தானது. மருந்து கிளை முழுதும் பரவ 1000 லிட்டர் ரூ 200 என வண்டியில் நீர் வாங்கி, மடை கட்டி  ஊற்றினோம். இது மாதிரி வாரம் ஒரு முறை வண்டி நீர் ஊற்றி சிவபெருமானை வேண்டி பிரார்த்தித்தோம். பலன் கொடுப்பது அவர் அனுகிரகத்தில், என்ன நிகழும்?…………………

Wednesday, January 13, 2016



300 Beautiful photographs in my book “Diary on the nesting behavior of   Indian Birds” Buy from amazon.in thro’ on line.

நல்லதொரு நிழற்படம்

            காலை அல்லது மாலை வேளையில் நல்ல நிழற்படம் அமைய நிறைய வாய்ப்பு. நிழற்படக்கலைஞன் ஒரு ஓவியன். இப்படியும் சொல்லலாமே! நல்லதொரு கவிஞன். கவிதை வடிப்பதும், ஓவியம் வரைவதும் எனக்குப்பிடித்தமானது. உங்களுக்கு? இதோ! நிழற்படத்தில் ஒரு  எளிமையான கவிதை. இதோ! ஒரு அழகான ஓவியம். இதை எழுத எந்த ஒரு முயற்சியும் இல்லை. எந்தத் திட்டமும் இல்லை. ஒரு அழகிய கிராமம். மாலை வேளை சூரிய கிரணங்கள் மேற்கிருந்து கிழக்காக வருகின்றன. நங்கை அரசமரத்துப்பிள்ளையாரை வணங்கிவிட்டு மேற்கத்திய கிரணங்களை நோக்கி நடக்கிறாள். இரண்டு மரங்கள் மாலை மஞ்சள் கிரணங்கள் பச்சை, அடர் பச்சை, வெளிர் பச்சை வெளிப்படுத்துகின்றன. இடுப்பில் இருக்கும் சிகப்பு குடத்தில் கூட வெளிச்சகிரணங்கள் ஊடுருவி நிற்கும் அழகு. கையில் பூக்கூடை. இடது புறம் கிராமத்துக்குரிய சிமெண்ட் தொட்டி. எதிரே மற்றுமொரு இறை சந்நதி. அதன் சுவர்கள் கோயில் கோபி நிறம், குட மங்கை பச்சை சேலை, மரங்களின் பரந்த தண்டுகள், அதன் மஞ்சள் இலைகள் என மாலைக்கதிரவன் தன் கிரணங்களால் ஓவியம் வரைந்தது உண்மை. வெளிச்சமும், நிழலும் கைகோர்த்த அருமைக்காட்சியிது.  கவிஞனுக்கு இது சுவையான கவிதை. ஓவியனுக்கு இது அழகான ஓவியம். கிராமத்து காட்சிகள் எளிமையின் அழகை சொல்லாமல் சொல்லும். மனம் சலனமற்ற நிஷ்சலமான கணங்கள் இவை. இது மாதிரி படைப்புகள் எதிர் பாராமல் கிடைக்கும். பார்த்து ரசித்து, கவிதை எழுதுங்கள். இல்லையெனில் ஓவியம் தீட்டுங்கள், நண்பர்களே!