Friday, June 5, 2015



 இடி விழுந்த இடம்



பூமியில் கத்தி சொருகியது போல் காணப்புடும் இடம் இடி விழுந்து இடம்

            வாழ்நாளில் நான் இடி விழுந்த இடம் பார்த்ததில்லை. நிறையப்பேர் என்னை மாதிரி தான். நான் என் வீட்டருகில் இருக்கும் விஜயவிநாயகர் கோயிலில் இருக்கும் போது நண்பர் பேச்சியண்ணன் பக்கத்துக்காலனி நேரு நகரில் இடி விழுந்ததாகச்சொன்னார். பத்திரிகைகளில் செய்தி வந்திருக்கிறது என்றார். என் வீட்டிலிருந்துதென்கிழக்கு திசையில் ஒரு கி.மீ. தான் இருக்கும். ஆம்! சனிக்கிழமை அதிகாலை நான்கிருக்கும் ‘சடச்சட’ வென செமத்தியான மழை. இடி மின்னல் கர்னகொடூரமாக உருமி அதிர்ந்தது. இரண்டு இடி நிலம் அதிர்வது போல விழுந்தது. மாடியில் தனியறையில் படுத்திருந்த எனக்கு பயம் கவ்விக்கொண்டது. எப்படா! இடிஇடிப்பது ஓயுமென இருந்து பிறகு அரைகுறை உறக்கம்.
ஞாயிறுக்கிழமை பேச்சியண்ணன் இந்தச்செய்தியைச்சொல்ல இடி விழுந்த இடத்தைப்பார்க்க ஆவல் முட்டியது. இரண்டு நீர் உட்கொண்ட மேகங்கள் மோதிக்கொள்ளும் போது மின்சாரம் ஏற்பட்டு முதலில் மின்னல் கண்ணுக்குத்தெரிகிறது. பிறகு காதுக்கு இடி சப்தம் கேட்கிறது. பொதுவாக மக்கள் பயந்து போய் அர்ஜுனா அர்ஜுனா என்று ஜபிக்க ஆரம்பித்து விடுவர். மின்னல் ஒரு விந்தை. அதிலிருந்து மின்சாரம் எடுக்க முடியுமா? அதிலிருந்து எடுக்க நமக்கு வல்லமை குறைவு. இடி மழையில் காளான்கள் பூமியிலிருந்து மேல் எழும்பி வரும். நீர் இடி நீரைத்தரும். நெருப்பு இடி தீப்பிளம்பு ஆகும். இடி விழுவது இல்லை. நான் சிறுவனாக இருக்கும் போது இடி விழுவது என்றால் ஒரு பெரிய பாறை மாதிரி எதோ ஒன்று வானிலிருந்து விழும் என்று நினைத்திருந்தேன். மிகைபட்ட மின் தாக்கு.
         மின்னல் பூமியை நோக்கி வருவது அதற்கு எதாவது ஒரு பொருள் வேண்டும். தனது சக்தியை வடிய அது பூமியை நாடுகிறது. உயரமான கட்டிடங்கள், மரங்கள் போல இடி தாக்கலாம். உயரக்கட்டிடங்களில் இடி தாங்கி வைத்துள்ளனர். மின்னல் வெட்டி வரும் போது மரங்களுக்கு அடியில் இருக்கக்கூடாது என்கின்றனர். நான் இப்போது தான் மின்னல் தாக்கிய இடத்தைப்பார்க்கிறேன். கத்தியில் துளைத்தது போல ஒரு பிளவு. அதிலிருந்து மின்னல் தாக்கிய சனி அதிகாலையிலிருந்து, அன்று மதியம் வரை நீரூற்று அதன் வழியே வந்து கொண்டிருந்தது. பிறகு நின்று விட்டது. அது வெற்று இடம். வீடுகட்ட யாரோ வாங்கிப்போட்டிருக்கின்றனர். அவர் அங்கு ஆழ்குழாய் இட்டால் தண்ணீர் வற்றாது என்கின்றனர். நல்லவேளை! அந்த மின்னல் தாக்கிய இடத்தின் மேற்குப்புறமும், வடக்குபுறமும் தார்சு வீடுகள். அவை மேல் விழவில்லை.      
             Lightning arrester, Lightning conductor, Lightning rod இவை எல்லாம் மின்னல் கட்டிடம், மின் டவர் ஆகியவற்றைத்தாக்கினால் மின் கடத்தி பூமிக்குள் அனுப்பி விடும். மின்னலில் தான் எத்தனை வகை! lightning எனத்தட்டி வலைதளங்களுக்குப் போய் படித்தால் பிரம்மிப்பாக உள்ளது. உன் தலை மேல் இடி விழ என யாரையும் சொல்ல வேண்டாம். Star watching போல Lightning watch , மழை பெய்யும் போது கவனித்தால் பத்து விதமான மின்னல்களை கண்டு ரசிக்கலாம். ஒரு நாளில் பார்ப்பது அரிது.ஆனால் கண்ணுக்கு யார் உத்திரவாதம்? ஆகவே வலை தளத்திலாவது கண்டு ரசியுங்கள்.

Friday, May 15, 2015


காரில் ஒரு உலா


White spotted Fantail Flycatcher- photo-Chinna Sathan

Great Pied Hornbill-photo: R. Vijayakumar

Malabar Pied Hornbill-photo-R. Vijayakumar

உலா போய் ரொம்ப நாளாயிற்று என்று நண்பர்கள் நான்கு பேர் கிளம்பினோம். மூர்த்தி சார், துரை பாஸ்கர், விஜயகுமார், என்னையும் சேர்த்து நான்கு பேர் கிளம்பினோம். நல்ல சீதளமும், உஷ்ணமும் நிலவிய நாளில் மாருதி அல்டோவில் சென்றோம். காரமடை, வெள்ளியங்காடு, முள்ளி, அத்திக்கடவு, கெத்தை, லவ்டேல் மார்க்கமாக குன்னூர், பிறகு மேட்டுப்பாளையம் வழியாக கோவைக்கு வந்தோம். அத்திக்கடவில் Greater Hornbill, Malabar Hornbill, Green pigeon பார்த்து சொக்கிப்போய்விட்டேன். உப்புமா சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது ஹார்ன்பில் ராஜன்(இவர் அத்திக்கடவு பகுதியில் கைடு) ஓடி வந்து அழைக்க, உப்புமா கையோடு ஓடிப்போய் அரசமரத்துப்பழம் உண்ணவந்த பெரிய இருவாச்சியைப்பார்த்து ரசித்தோம். என்ன பரிமாணம்! மஞ்சள், கருப்பு, இரண்டு அலகு போல இறைவன் படைப்பு என்னவென்று மெச்சுவேன்! பறக்கும் போது எலிகாப்டர் போல சப்தம்.இரண்டு இருவாச்சிகள் பார்த்ததில் எங்களுக்கு ஏக சந்தோஷம். இது அதிஷ்டகரமான நிகழ்வு.
காருக்குள் சிக்கடா வந்து சிறிது நேரம் பின்புற கண்ணாடியில் அமர்ந்திருந்தது விந்தை. இது தான் ‘உய்உய்’ என காடுகளில் ஓயாமல் ஒலி எழுப்புவது. நாங்கள் சென்ற காலத்தில் மழை விடாமல் பெய்த காலம். எங்கு பார்த்தாலும் பச்சைபசேல் பசுமை. அத்திபழங்கள் பெரிது பெரிதாக பாதையில் கிடக்க அதைச் சுவைத்தேன். குரங்குகள் அத்தி மரத்தில் இருந்தன. அவைகளுடன் நான் போட்டியல்லை. பச்சைப்பின்புலத்தில் நீலநிறத்தில் பூத்துக்குலுங்கும் ஜக்கரண்டா மலர்களில் சொக்கிப்போனேன். மலர்கள் எனது காமெராவுக்குள்ளும் பூத்துக்குலுங்கின. விதைகளை எதோ தங்கக்காசுகளைப்பொருக்குவது போல பொருக்கினேன்.
சிம்ஸ் பூங்காவில் எங்களை விந்தையில் ஆழ்த்தியது White spotted fantail flycatcher. எங்கள் நால்வரையும் ஒரு மணிப்பொழுது தாரணா எனும் தியானத்தில் இருத்தியது. இயற்கை அப்படி ஒரு வல்லமை வாய்ந்தது. மனதும், பார்வையும் அந்த பறவையையே கண்காணித்தது. பூச்சி பிடிப்பதில் வேகம். மரத்துக்கு மரம் தாவி, வாடிய இலைகளைப்புரட்டி, மரத்தண்டுகளில் வலம் வந்து எங்களை புகைப்படம் எடுக்க விடாமல் பாடாய்ப்படுத்தியது.அது ஒவ்வொரு முறையும் பூச்சி பிடிக்கும் போதும் வாலை விசிறி மாதிரி விரிப்பது பூச்சிளை இருக்கும் இடத்திலிருந்து அசையவைத்து, பிறகு பிடிக்க வசதியாக இருக்கும் என்பதற்காக இருக்கும் என்பதை Dr. சலிம் அலியும், ரிச்சர்டு கிரிம்மட்டும் சொல்லாததை எனது வலைப்பூவில் பதிவு செய்கிறேன். இரண்டு வகையானவை இதில் உண்டு. 1. Whitebrowed Fantail flycatcher 2. Whitespotted Fantail Flycatcher. இதில் இரண்டாவது வகை என நண்பர் விஜயகுமார், தான் எடுத்த புகைப்படத்தில் கண்டு பிடித்துச் சொன்னார்.
சிம்ஸ் பார்க்கில் எங்களுக்கு மேலும் விருந்தளித்த பறவைகள்;- Grey tit, White eye, Black bird, Tickell’s Blue Flycatcher. வெண்மார்புக்கோழியை நீந்தி நான் ரசித்ததில்லை. அழகு தோழா!இயற்கை எனக்கு எல்லையில்லா இன்பத்தைத்தருகிறது.
பொறையுடைய பூமி நீரானாய் போற்றி
பூதப்படையாள் புனிதா போற்றி……….அப்பர் தேவாரம்.

Friday, May 1, 2015


என்னை வியப்பில் ஆழ்த்தும் பறவைகள்


Coppersmith Barbet ready to carry refuses of Chicks in its' beak

Purple Moorhen hurriedly swimming due to parisal.

          நீலக்கோழி(Purple Moorhen) நீந்துமா நீந்தாதா என பல வருஷங்கள் என்னை நானே கேட்டுக்கொண்ட கேள்வி. பால்பாண்டியிடம் கேட்ட போது, “அது நிர்பந்தம் வந்தால் நீந்தி அடுத்த திட்டுக்குப்போகும்என்றார். அது நீந்தும் அழகைப்பார்க்க எனக்கு வெகு நாள் ஆவா. பரிமாணம் பெரியது. நீந்தினால் அழகாக இருக்கும். அதன் நிறம் நீலம் ஒரு வித்தியாசமான நிறம். பல காத்திருப்புக்குப்பின் அது நிர்பந்தத்தில் நீந்தும் அழகைப்பார்த்து ரசித்தேன். ஆபத்து என வரும் போது மேலும் ஒரு திட்டுக்குப்போக நினைக்கும் போது நீலக்கோழி நீந்தும். இதை விட இது மூழ்கி சிறிது தூரம் நீந்திப் போய், நீர்காகம் மாதிரி நீர்மட்டத்தில் எழுமா? என நான் பால் பாண்டியைக்கேட்கவில்லை. அது எனக்குத்தோன்றவில்லை.
   ஒரு நாள் பறவை நோக்கலில் ஈடுபட்டிருக்கும் போது, பரிசல்காரன் பரிசலில் மீன் பிடிக்கக் கிளம்பினான். அப்போடு குறுக்கே வந்து விட்ட நீலக்கோழி பரிசலுக்கு தப்பிக்க நீரில் மூழ்கி சிறிது தூரம் சென்று பின் நீர் மட்டத்தில் எழுந்து நீந்திப்போனது. நான் ஒரு நிமிஷம் ஆடிப்போய் விட்டேன். நீலக்கோழி மூழ்கி இறந்து விட்டதா என ஐயம் எழ சில வினாடிகளில் நீர் மட்டத்தில் தலை தெரிய நிம்மதி அடைந்தேன். அது அருகில் உள்ள ஆகாசத்தாமரைபரப்புக்குச்சென்றது. ஆபத்து என்றால் நீரில் மூழ்கி நீந்தி, எழுந்து மீண்டும் நீந்துகிறது.
பல விஷயங்கள் அதாவது பறவைகளின் குணாதிசயங்கள் இன்னும் பதிவு செய்யக்கூடியவை நிறைய உள்ளன. Dr. சலீம் அலி நூலில் பதிவு செய்யப்படாததை நான் பதிவு செய்கிறேன். எனக்கு அரசு அல்லது மற்ற அமைப்புகள் நூல் வெளியிட உதவுவதும் இல்லை. அப்படி நான் வெளியிட்டாலும் அதை பள்ளி, கல்லூரிகள் வாங்கத்தயக்கம் காட்டுகின்றனர். அரசு நூலகங்களில் தேர்வு செய்வதில் ஊழல் வேறு
      குக்குறுவான்(CoppersmithBarbet) மரஓட்டைகூட்டில்முட்டையிட்டுக்குஞ்சுபொரித்தாலும், அடிக்கடி அந்தமரக்கூட்டில் வந்து, தலையை வெளியில் தொங்கவிட்டவாறு ஓய்வெடுக்கிறது. கூட்டை சுத்தம் செய்யாது என பால்பாண்டி சொன்னது தவறானது. குக்குறுவான் சுத்தம் செய்கிறது. சுத்தம் செய்யாவிடில் இரு குஞ்சுகள் தங்க இடமில்லாதுபோகும். குஞ்சுகளின் கழிவுகளை அலகில் சுமந்து கொண்டு சற்று தூரம் பறந்து நழுவ விடுகிறது.


எனது நூலில் “Diary on the nesting behavior of Indian Birds”இவைகளை சேர்க்க வேண்டும். அடுத்த பதிப்பு வந்தால் சேர்ப்பேன். முதல் பதிப்பை விற்கவே வழியில்லை. மக்கள் வாசிப்பது குறைந்து, அலைபேசிக்கு அடிமையாகி விட்டனர். ரயிலில் பாதிப்பேர் காதுகளில் ஒயர் தொங்குகிறது. மீதிப்பேர் ஐப்பேட், லேப்டாப் சகிதம். மக்கள் செவிப்புலனையும், கண்பார்வையையும் தாறுமாறாக உபயோகித்தல் தீங்கை விளைவிக்கப்போவது உறுதி. யாராவது கையில் புத்தகம் இருக்கிறதா? நூல்கள் வாசிக்காதவன் அரைமனிதன். அவன் வாசிப்பு சுகத்தை இழந்தவன். யாருக்கும் எதையும் சொல்ல முடியுமா அவனால்?

Tuesday, April 7, 2015

குக்குறுவான்
                                     coppersmith




இந்த இனப்பறவை எப்படி என் மரமான குல்மோகஹருக்கு வந்து குடிபுகுந்தது என புலப்படவில்லை. எனது குடியிருப்புப்பகுதி சற்று சந்தடியான பகுதியாக மாறியது ஆச்சர்யம். குக்குறுவான் மரங்கள் கொண்ட சோலையில் உலாவித்திரியும் என நினைத்திருந்தேன்.ஆனால் சலிம் அலி சொல்கிறார்’ Habits: Found wherever there are fruiting trees, especially the various species of wild fig, be it in outlying forest or within a noisy city” இது போதுமே! மர்மத்துக்கு விடை கிடைத்தாயிற்று. சந்தடி குடியிருப்பானாலும், இங்கு நான் வைத்து வளர்த்த 100 மரநண்பர்கள் இருக்கிறார்கள். அரசமரம் பழங்கள் புஷ்பிக்கத்தொடங்கியதை நான் பார்க்கத்தவிறினேன். ஆனால் குக்குறுவான் பார்க்கத்தவறவில்லை. குக்குறுவான் ஒரு ஜோடி இங்கு வந்ததல்லாமல் ஜன்னலை எட்டிப்பார்த்தால் போதும், கூடு ரசிக்கும்படி குல்மோஹரில் துளையிட்டு கூடும் வைத்து விட்டது. மகிழ்ச்சிக்குரிய சங்கதி. குஞ்சுகளுக்கு உணவூட்ட அரசமரப்பழங்கள் போதுமே என குக்குறுவான் ஜோடி முடிவெடுத்து இரண்டு முட்டைகளை இட்டு அடைகாத்தது. குல்மோஹர் தண்டு மிருதுவானது. இருப்பினும் சில வாரக்கடின உழைப்பினால் மரத்தண்டு துளை தயாரானது. முதலில் இரண்டு அலகுகள் மரத்துளை வழியாக  வந்து அரசமரப்பழங்களை அன்னையிடம் பெற்றுக்கொண்டன. பிறகு ஒரு அலகு மட்டும் வர மற்றொன்று இறந்து விட்டதோ என நினைத்தது தவறு என சில வாரங்களுக்குப்பிறகு தெரிந்தது. இரண்டு அலகுகள் மரத்துளை வழியாக நீட்டினால் நெருக்கியடிக்க வேண்டுமென மாற்றி மாற்றி அலகை நீட்டியது தெரியவர அவற்றின் தகவமைப்பு மெய்சிலிர்க்க வைத்தது. எனது நூலான “Diary on the nesting behavior of Indian Birds”-ல் இதன் வாழ்க்கை சக்கரத்தை எழுதியிருக்கிறேன். ஆனால் ஒன்றிரண்டு விட்டுபோனது குறித்து வருந்துகிறேன். இந்தப்பறவை கூட்டினைச்சுத்தம் செய்கிறது. உள்ளே போன அப்பா () அம்மா வாய் நிறைய குஞ்சுளின் கழிவை எடுத்து தூரப்பறந்து எறிகிறது. மரத்துளை நிரம்பி வழிந்தால் இரண்டு குஞ்சுளுக்கு இடம் போதாது. மேலும் அம்மா () அப்பா பறவை பல சமயம் கூட்டுக்குள் தங்குகிறது. இன்னொரு விஷயம் குஞ்சு பறக்கத்தொடங்கும் போது பார்த்தால் கிரிம்சன் நிறம் முன் நெற்றியிலும், மார்பிலும் இல்லாதிருப்பது கவனித்தேன். அதை புகைப்படம் எடுத்த பதிவு மிக சிலாகிக்கக்கூடியது. உணவு ஊட்டல், குஞ்சுகள் அம்மா வாயிலிருந்து பிடுங்கிக்கொள்கின்றன. சிலசமயம் அம்மா ஊட்டி விடுகிறது. அம்மா அடுத்த வீதி குல்மோஹரில் அமர்ந்து ஒலி எழுப்ப இளையர் என் வீதி குல்மோஹர் கிளையிலிருந்து முதன்முதலாக இறக்கை விரித்து அம்மா இருக்கும் அடுத்த வீதி குல்மோஹருக்குபறந்ததும் நான் சந்தோஷத்தில் கைதட்டினேன். அடுத்த இளஞி ஒரு வாரம் கழித்து வானை அளக்கப்பறந்ததும் எனக்கு இரட்டை சந்தோஷம். வால்காக்கை கூட்டிலிருந்த குஞ்சுகளை கபளிகரம் பண்ணப்பார்த்த போது, பெற்றோர் பறவைகள் கத்த அது தயங்கி விலகியது. இந்த மாதிரி இடையூரிலும் வெற்றிகரமான வாழ்க்கை நிகழ்வது இறைவன் கிருபை.