| ரிஷி கொன்டா கடற்கரை,விசாகப்பட்டிணம் |
Travel
யாத்திரை
| ராஜாராணி கோவில், புவனேஷ்வர் |
சென்ற நாட்களில் மூவாயிரம் மைல்கள் கிழக்குக்கடற்கரை ஓரமாக யாத்திரை போனேன். விசாகப்பட்டிணம் மிகத்துரித ரயில், கோனார்க் விரைவு ரயில், மற்றும் கோரமண்டல் விரைவு ரயில் யாத்திரைக்கு உதவின. நடந்து, சைக்கிள் ரிக்ஷா, ஆட்டோ ரிக்ஷா, கார்,பேருந்து, சிற்றுந்து, படகு, என நானும் நண்பரும் நகர்ந்து கொண்டே இருந்தோம். அந்தக்கால முனிவர்களும், சித்தர்களும், புத்தபிக்குகளும், ஜைனத்துறவிளும், சாதுக்களும் இப்படித்தான் காடு,மலை, கடற்கரை, கிராமம், நகரம், என நகர்ந்து கிடைப்பதை உண்டு, போய்க்கொண்டே இருப்பார்கள். அவர்களுக்கென்ற நிரந்திர இருப்பிடம் இல்லை. நானும் நண்பர் வஜ்ரவேலுவும் இருவேளை மட்டும் உண்டு, சில வேளை ரொட்டித்துண்டுகள், கனிகளோடு பசியாற்றி, நிறைய நடந்தோம். சில வேளைகளில் ஐந்து மைல் கூட நடப்போம். இயற்கையோடு கலந்திருந்தோம். கடற்கரைகளில் மணல், உப்புகாற்று, நீலவானம், ஓம் என்று ஒலித்து வந்த அலைகளுடன் பிரபஞ்சத்தின் பிரமாண்டத்தை வியந்திருந்தோம்.வங்காள விரிகுடா சமுத்திரத்தின் Classic beach, சில்க்கா ஏரி, Golden beach,புரி, Rishikonda beach, RK beach, விசாகப்பட்டிணம், என சுற்றித்திரிந்தோம்.
விசாகப்பட்டிணத்தில் ஒரு நாள், கோனார்க்கில் ஒரு நாள், புரியில் இரு நாள், ரயிலில் இரு நாள் என ஆன்மா பயணத்திலேயே இருந்தது. அருகில் சொந்தம், நண்பர் குழாம், இல்லை. முற்றிலும் தெரியாத பாஷை, முகங்கள், பிரதேசம், சீதோஷ்ணம், உணவு என இருந்தாலும் யாதும் ஊரே யாவரும் கேளிர் என மனதை சமனப்படுத்தி, சில உடல் உபாதைகள், நித்திரை அசொளகரியங்கள் பொறுத்து யாத்திரை மேற்கொள்வது ஆன்மாவை பதப்படுத்தும். வீட்டைப்போல் வசதிகள் எதிர் பார்ப்பதும், அது இல்லாது போகும் போது கவலை, எரிச்சல், கோபம். சந்தோஷமின்மை வரக்கூடாது. எந்த அசொளகரியங்களிலும் குதாகலமாக இருக்கப்பழகுதல் ஆன்மாவுக்கும், மனதுக்கும் பயிற்சி. உடலை வருத்தி யாத்திரை செல்வது அந்தக்காலத்தில் நிகழ்த்தப்பட்டது. பசியை எப்போதும் உணர்ந்திர்ந்தனர். உணவு கிடைக்கும் போது உண்டனர். பசியறியாத யோகிக்கு யோகம் கைகூடாது.
ஆதி சங்கரா இந்த மாதிரி ஊர்தி, வசதிவாய்ப்புகள் இல்லாத போது நான்கு முறை காலடி, கேரளாவிலிருந்து இமயம் நடந்தே சென்றிருக்கிறார் என்றால் அவரது மன வலிமை எண்ணிப்பார்க்க வேண்டும். அப்போது காடுகளும், விலங்குகளும், விஷஜந்துக்களும், புயல், மழை, பாலமில்லா ஆறுகள், கரடு முரடான பாதைகள், உயர்ந்த மலைகள், குளிர் என எப்படி வாட்டி எடுத்திருக்கும். அப்பர், இமயமலை சென்ற போது கால்களும், கைகளும் கிழிந்து இரத்தம் சொட்டின. அவர்களை விட நாம் இப்போது வாழும் வாழ்க்கை சொகுசு மயமானது. இருந்தும் நாம் சலிப்பு, எரிச்சல், மனவருத்தம் கொள்கிறோம். ஏன்? இப்போதிருப்பது போல அப்போது வசதி, வாய்ப்புகள் இல்லை. இருந்தும் நாம் நம் முன்னோரை விட சந்தோஷத்தில் இல்லை. ஏன்? எதையோ எதிர் பார்த்துக்காத்திருக்கிறோம். திருப்தியற்ற மனநிலையில் உள்ளோம்.ஏன்? எவனொருவன் மனதளவில் திருப்தியோடு இயற்கைக்கு நன்றி பகர்ந்து கிடைப்பதை உண்டு, பிறரோடு பகிர்ந்து வாழ்கிறானோ அவனே செல்வந்தன்.
ராஜாராணி கோவில் நடனமாதர்
.jpg)
.jpg)







